Kerala Student Mysterious Death Case 5 Hours Reported | கேரள மாணவர் மர்ம மரண விவகாரம் 5 மணி நேரம் தாக்கியதாக அறிக்கை

வயநாடு, கேரளாவில் கால்நடை மருத்துவ மாணவர் தற்கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில், அவர் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக பெல்ட், கேபிள் ஒயர் போன்றவற்றால் கொடூரமாக தாக்கப்பட்டதாக போலீசார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வயநாட்டில் உள்ள பூக்கோட்டில் கால்நடை மருத்துவ பல்கலை செயல்பட்டு வருகிறது.

இங்கு கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை பாடப்பிரிவில், சித்தார்த்தன், 20, என்பவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த மாதம் 18ம் தேதி, பல்கலை விடுதி குளியல் அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் இவரின் உடல் மீட்கப்பட்டது.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ.,யைச் சேர்ந்தவர்களால், ராகிங் செய்யப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உடற்கூராய்வு அறிக்கையில், மாணவர் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததும், இரண்டு நாட்களாக எந்த உணவும் கொடுக்காமல், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது சந்தேகத்தை உறுதிபடுத்தியது.

இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் அதே பல்கலையைச் சேர்ந்த மாணவர்கள், 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்படுவதாவது:

பல்கலை மாணவி ஒருவரிடம் சித்தார்த்தன் தவறாக நடந்ததாக கூறி, உடன் பயிலும் மாணவர்களும், சீனியர் மாணவர்களும் விடுதியில் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த 16ம் தேதி இரவு விடுதிக்கு வந்த சித்தார்த்தனை நிர்வாணப்படுத்தி, பெல்ட், கேபிள் ஒயர் உள்ளிட்டவற்றால் அவரை, பிற மாணவர்கள் கொடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் இரவு 9:00 மணிக்கு துவங்கி அதிகாலை 2:00 மணி வரை நீடித்துள்ளது.

இதையடுத்து, அவரின் உடல், 18ம் தேதி விடுதி குளியலறையில் மீட்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மாணவரை கொடூரமாக தாக்கி உள்ளதால், அவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டை எஸ்.எப்.ஐ., மறுத்துள்ளது. பல்கலை மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் மாணவர் அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.