`இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!' – ஆர்.வி.உதயகுமார், சரண், பேரரசு போட்டியின்றி தேர்வு!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் இம்முறை பரபரப்பின்றி நடைபெறுகிறது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் இம்முறை பரபரப்பின்றி நடைபெறுகிறது. சென்ற முறை விக்ரமன் அணி, பாக்யராஜ் அணி என பரபரப்பானது. ஆனால் இம்முறை சத்தமே இல்லாமல் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதர பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆர்.கே.செல்வமணி

சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. சமீபத்தில் நடந்த அதன் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஆர்.கே.செல்வமணி, தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துவிட்டார். இந்நிலையில் தலைவராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக இயக்குநர் சரண், செயலாளராக பேரரசு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தகவல் பரவியிருக்கிறது. இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி …

தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தில் 2,600 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் வாக்குரிமை பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தொடுகிறது. ஆர்.கே.செல்வமணியின் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால், புது நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இம்மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கிடையே செல்வமணி தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் அவர், ”தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை. படம் இயக்கும் முயற்சியில் இறங்குகிறேன்” என கூறி மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டார். இந்நிலையில் ஆர்.வி. உதயகுமாரை தலைவராகவும், செயலாளராக பேரரசு, பொருளாளராக சரண் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளனர்.

இயக்குநர் சரண்

கடந்த முறை ஆர்.கே.செல்வமணியை எதிர்த்து கே.பாக்யராஜ் போட்டியிட்டார். அதே போல, இந்த முறை தலைவர் பதவிக்கு நிற்பவரை எதிர்த்து பார்த்திபன் போட்டியிடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், ஆர்.வி.உதயகுமார் தலைவராக வரவேண்டும் எனப் பலரும் விரும்பியதால் எதிர்ப்பின்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இதைப் போல சரணும், பேரரசும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைத்தலைவர் உட்பட மற்ற பதவிகள் அனைத்திற்கும் மார்ச் 16ம் தேதி தேர்தல் நடக்கிறது.

கடந்த முறை செயலாளராக இருந்த ஆர்.வி..உதயகுமார் தலைவராகவும், கடந்த முறை பொருளாளராக பேரரசு, இம்முறை செயலாளராகவும் ஆகிறார். கடந்த 2006 காலகட்டத்தில் சங்கத்தின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் பொறுப்பு வகித்த போது, பொருளாளராக இயக்குநர் சரண் இருந்திருக்கிறார். அடுத்த பட வேலையை ஆரம்பித்துவிட்ட சரண், இந்தப் புதிய பொறுப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா உட்பட பலரும் ஆர்.கே.செல்வமணியே தலைவராக மீண்டும் நீடிக்க வேண்டும் என விரும்பியிருக்கிறார்கள். ஆனால், செல்வமணி தான் போட்டியிடப் போவதில்லை என உறுதியாக நின்றதுடன், ”பல வருடங்களாக சங்கப் பொறுப்புகளில் இருந்து வருகிறேன். திரையில் என் பெயரைப் பார்த்து பல வருடங்களாகிவிட்டது. எனவே மீண்டும் படம் இயக்கப் போகிறேன். அதற்கான சூழல் கனிந்திருக்கிறது” எனச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகே இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமாரைத் தேர்வு செய்தோம் என்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.