`பிரசாரங்களில் விஜய், சூர்யா பெயர்கள்!' – டப்பிங் யூனியன் தேர்தலில் நடப்பதென்ன?

திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தல் இம்மாதம் 17ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. பல வருடங்களாகத் தலைவராக இருந்து வரும் நடிகர் ராதாரவி தலைமையில் ஒரு அணியும் இதுவரை துணைத்தலைவராக இருந்து வந்த நடிகர் ராஜேந்திரன் தலைமையில் ஒரு அணியுமாகப் போட்டியிடுகின்றனர்.

இரு அணியினரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார்களைக் கூறி வரும் வேளையில், நடிகர்கள் விஜய், சூர்யா பெயர்களெல்லாம் இந்தத் தேர்தல் பரப்புரையில் அடிபட, என்ன விவகாரம் என சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினோம்.

“டப்பிங் பேசுகிற நடிகர்கள், யூனியன்ல உறுப்பினராக இருக்கறது வழக்கம். சில நடிகர்கள் அப்படி இருக்காங்க. சிலர் யூனியனில் சேர்வதில் ஆர்வம் காட்டாமலும் இருக்காங்க. உறுப்பினரா இருக்கிற எல்லா நடிகர் நடிகைகளும் யூனியன் செயல்பாடுகள்ல பங்கேற்கறதும் இல்லை. இந்தத் தேர்தல்ல நடிகர் விஜய், ஸ்ருதிஹாசன், சூர்யா பெயர்கள்லாம் அடிபடறதுக்குக் காரணம், ரெண்டு அணியினருக்குமான சண்டைதான்” என்றார்கள் யூனியனின் சில மூத்த உறுப்பினர்கள்.

நடிகர் விஜய்

பெயர் குறிப்பிட விரும்பாத சீனியர் உறுப்பினர் ஒருவர் யூனியனுக்கு நன்கொடையாக ஒரு தொகையைத் தந்து, அதில் வேலை வாய்ப்பின்மை காரணமாக யூனியனுக்குச் சந்தா செலுத்தாமலிருக்கும் உறுப்பினர்களின் சந்தாவைச் செலுத்திக் கொள்ளுமாறு சொன்னாராம். அந்தப் பணத்தில்தான் இப்போது பொறுப்பிலிருக்கும் ராதாரவி தலைமையிலான நிர்வாகத்தினர், சந்தா செலுத்த இயலாத நிலையிலிருக்கும் உறுப்பினர்கள் எனச் சிலருக்கு சந்தா தொகையைச் செலுத்தியிருக்கிறார்கள். சுமார் 70 பேருக்கு இப்படிச் சந்தா செலுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நடிகர் விஜய், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோரும் இந்த எழுபது பேரில் அடக்கம் என்பதுதான் ஹைலைட்.

‘நடிகர் விஜய் சந்தா செலுத்த இயலாத நிலையிலா இருக்கிறார்’ என எதிரணியினர் இதை விமர்சனம் செய்ய, ‘உச்ச நட்சத்திரங்களுக்குச் சந்தா செலுத்துவதை யூனியன் கௌரவமாகக் கருதுகிறது’ எனச் சொல்லிச் சமாளித்துள்ளனர்.

சரி, சூர்யா எப்படி இவர்களின் பஞ்சாயத்துக்குள் சிக்கினார்? நடிகர் ராஜேந்திரனிடமே கேட்டோம். “சூர்யா சார் டப்பிங் யூனியன்ல உறுப்பினரா இருந்தார். அவரை சந்தா புதுப்பிக்கலன்னு சொல்லி சங்கத்துல இருந்து நீக்கினாங்க.

ராஜேந்திரன்

தொடர்ந்து கோவிட் சமயத்துல சினிமா அமைப்புகளுக்கு அவர் உதவி செஞ்சப்ப டப்பிங் கலைஞர்களுக்கும் உதவினார். உடனே, ‘இவரை நீக்கிட்டோமே’னு வெட்கப்பட்டு மறுபடியும் சேர்த்தாங்க. ஆனா அப்பக்கூட கௌரவ உறுப்பினராகவே சேர்த்தாங்க. கௌரவ உறுப்பினருக்கு ஓட்டுப் போடற மற்றும் தேர்தல்ல போட்டியிடுகிற உரிமை இல்லைங்கிறதுதான் இங்க ஹைலைட்” என்கிறார் ராஜேந்திரன்.

ஏற்கெனவே பின்னணி பாடகி சின்மயியை சந்தா செலுத்தவில்லை எனச் சொல்லி யூனியனிலிருந்து நீக்கினார்கள். அவர் நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் நீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்கவில்லை. சங்கம் அவரை நீக்கியது செல்லும் எனக் கூறிவிட்டது நீதிமன்றம்.

ஆனாலும் இப்போதும் அவர் படங்களுக்கு டப்பிங் பேசியே வருகிறார். சின்மயி தன் தவற்றை உணர்ந்து திரும்பி வந்தால் அவரை மறுபடியும் யூனியனில் சேர்த்துக் கொள்வோம் என ராஜேந்திரன் தலைமையிலான அணி சொல்ல, ராதாரவி அணியோ அவர் சங்கத்துக்குத் தேவையில்லாத செலவை வைத்துவிட்டார், எனவே அவரை ஒருபோதும் இனி சேர்க்க மாட்டோமெனச் சொல்லி வருகிறது.

இந்தச் சூழலில் யூனியனின் தேர்தல் நடக்க இன்னும் பத்து நாள்கள் இருக்கிற நிலையில் விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் இதில் அரசியலாக்கப்படுவது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.