Life Insurance in Dubai for Indian Workers | இந்திய தொழிலாளர்களுக்கு துபாயில் ஆயுள் காப்பீடு

துபாய்: யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சில் டிரைவர், மிஷின் ஆப்பரேட்டர், கட்டுமான பணிகள் போன்றவற்றில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, புதிய ஆயுள் காப்பீடு திட்டம் கிடைக்க வகை செய்துள்ளதாக துபாயில் உள்ள இந்திய துாதரகம் கூறியுள்ளது.

இயற்கை மரணங்கள்

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 65 சதவீதம் பேர் டிரைவர் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள். இவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள், மருத்துவ காப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு திட்டத்தின் கீழ் மட்டும் காப்பீடு செய்கின்றன.

இதில் பணியின் போது காயம் அல்லது விபத்து ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். மாரடைப்பு உள்ளிட்ட இயற்கை மரணங்கள் நேர்ந்தால் இழப்பீடு கிடைக்காது. இதை கவனத்தில் எடுத்த துபாயில் உள்ள இந்திய துாதரகம், அங்கு உள்ள நிறுவனங்கள் மற்றும் காப்பீடு வழங்குபவர்களிடம் பேசி, இயற்கை மரணங்களுக்கும் இழப்பீடு தரும் ஆயுள் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. கடந்த 1ம் தேதியில் இருந்து இந்திய தொழிலாளர்களுக்கு இந்த ஆயுள் காப்பீடு பாதுகாப்பு கிடைக்கிறது.

இது குறித்து துபாயில் உள்ள இந்திய துாதரக அதிகாரி சதீஷ் சிவன் கூறியதாவது: துபாயில் கடந்த ஆண்டு 1,513 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 1,000 பேர் தொழிலாளர்கள். அதிலும் 90 சதவீதம் பேர் இயற்கையாக மரணம் அடைந்தனர்.

பாதுகாப்பு திட்டம்

இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் இயற்கை மரணங்களைக் கருத்தில் வைத்து, துபாயில் உள்ள இந்திய துணைத் துாதரகம், இந்திய தொழிலாளர்களை ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்க்க, அனைத்து நிறுவனங்களையும் ஊக்குவித்தது. அதன்படி மார்ச் 1 முதல் இந்திய தொழிலாளர்களுக்கு இந்த பாதுகாப்புத் திட்டம் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.