நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே விமர்சனம்: அடல்ட் காமெடி தான்; ஆனால், எதனால் கவனம் ஈர்க்கிறது?

பெண்களை போகப் பொருளாக மட்டுமே எண்ணுகிற ஓர் இளைஞன், இளம்பெண் ஒருவரை முதல்முறையாகச் சந்திக்க மதுரையிலிருந்து மயிலாடுதுறை செல்கிறான். அங்கே அந்த ஒரு நாள் சந்திப்பில் என்ன நடக்கிறது என்பதே ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தின் ஒன்லைன்.

ஆள் நடமாட்டம் இல்லாத திரையரங்குக்கு இளம்பெண்ணை அழைத்துவந்து சில்மிஷம் செய்வது, தன்னுடைய நண்பர்களுக்கும் அப்படியான சூழலை அமைத்துத் தருவது என, முழுநேர வேலையாக இதனை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ரவி. இப்படி முகநூலில் பெண்கள் பெயரைப் பார்த்தாலே ‘Hi’ என மெசேஜ் அனுப்பி பேசத்துடிக்கும் அவருக்கு, மயிலாடுதுறையைச் சேர்ந்த அரசி என்ற இளம்பெண்ணின் நட்பு இணையத்தின் வழியே கிடைக்கிறது.

அந்த நட்பை வேறுவிதமாகப் பயன்படுத்த நினைக்கும் ரவி, அரசியின் பிறந்தநாளுக்கு நேரில் சந்திக்க அவரது ஊரான மயிலாடுதுறைக்குத் தன் நண்பருடன் பைக்கில் செல்கிறார். அங்கிருந்து அரசியும் ரவியும் தனியாகப் பூம்புகார் செல்கிறார்கள். இப்படி ஒரே நாளில் மதுரை, மயிலாடுதுறை, பூம்புகார் எனப் பயணிக்கும் கதையில் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற கதையை முதிர்ச்சியான அடல்ட் காமெடியாகத் தந்திருக்கிறார்கள்.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

ரவியாக அதீத கோபம், பெண்கள் மீதான அவனது தவறான பார்வை, சிங்கிள் ஷாட்களை தாங்கி செல்லும் பக்குவம் என முதல் படத்திலே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது எரிச்சல் தரக்கூடிய ‘ச்’ கொட்ட வைக்கும் நடிப்பு, எதிர்மறை பாத்திரத்துக்கான நியாயத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறது. வெல்கம் செந்துர் பாண்டியன்! இவருக்கு இணையாகக் கடலை ரசிக்கும் காட்சிக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளை மென்சோகத்துடன் கண்களில் கடத்துவது, பதட்டமான சூழலிலும் அதைத் தெளிவாகவும் தைரியமாகவும் கையாளும் முகபாவனைகள் என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகி ப்ரீத்தி கரண். இதேபோல சொற்பமான நபர்களே பிரேம்களை அலங்கரித்தாலும் அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். குறிப்பாக சுரேஷ் மதியழகன் மெடிக்கல் ஷாப் காட்சிகள், பைக் பயணம் ஆகியவற்றில் ஸ்கோர் செய்துள்ளார்.

அடுக்கடுக்காக சிங்கிள் ஷாட்கள், அதுவும் பைக் நகர்ந்து செல்லும் வேகத்தில் என்ற சவாலான காட்சியமைப்பை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல். ஆனால் அதற்கு இணையான கேமரா குவாலிட்டி இல்லாமல் குறும்படம் அளவிலான தரத்தில் அதுவெளியாகி இருப்பது மைனஸ். இன்னும் சிறிது மெனக்கெடல்கள் கலர் கிரேடிங்கில் செய்திருந்தால் மாறிமாறி வரும் ஒளியுணர்வையாவது சரிசெய்திருக்கலாம்.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

படத்தொகுப்பாளர் ராதாகிருஷ்ணன் தனபால் சுயாதீன படங்களுக்குரிய பாணியில் ஒரு சில இடங்களில் கத்தரியை மறந்து சுதந்திரத்தைக் கையில் எடுத்துள்ளார். அது ஒரு சில இடங்களில் ரசிக்கவைக்கிறது. இருந்தும் பல இடங்களில் வேகத்தடையாகவே இருக்கிறது. இப்படி தொழில்நுட்ப ரீதியாகப் பலகீனமாக இருந்தாலும் திரைக்கதை எழுதப்பட்ட விதத்தாலும், யதார்த்தமான வசனங்களாலும் ஒரு படமாக நம்மை இழுத்து வைத்திருக்கிறது. படத்தின் தயாரிப்பாளரான பிரதீப் குமார் பாடல்களை எழுதிப் பாடி இசையமைத்துள்ளார். பல இடங்களில் பாடலின் வரிகள் ரசிக்கும் படியாக படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

படம் ஆரம்பித்து டைட்டில் கார்டிலே வித்தியாசமான முயற்சி எனக் கதைக்குள் நேராக இழுத்துச் செல்கிறார்கள். ஒரு பெண் என்பவள் தன்னிடம் பேசுகிறாள், தன்னைச் சந்திக்க விருப்பப்படுகிறாள் என்றாலே அவள் தவறானவள் என்கிற டாக்ஸிக் மனப்பான்மையை மையமாக வைத்து, அதில் கருத்தூசி போடாமல் போகிற போக்கில் அடல்ட் காமெடியுடன் ரசிக்கும் படியாகத் திரைக்கதையைச் செய்திருப்பது சிறப்பு. அதேபோல ஊர் பசங்கள் என்றால் இப்படி தான் என்கிற ஸ்டெரியோடைப் ஆங்காங்கே எட்டிப்பார்த்தாலும் அதே ஊரில் இருக்கும் நேர்மறையான கதாபாத்திரங்களைக் காட்டியிருப்பதும் சிறப்பு.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

தமிழ்த் திரைத்துறையின் அடல்ட் காமெடி படங்கள் என்றாலே பெண்களைப் போகப்பொருளாகக் காட்டுவது, ஓர்பாலின ஈர்ப்பாளர்கள், திருநர் மக்கள் ஆகியோரை இழிவு செய்வது, கெட்டவார்த்தையைப் பேசிக்கொண்டே இருப்பது போன்ற பூமர்த்தனங்களைப் பிரயோகிக்காமல், யதார்த்த அஸ்திரங்களைப் பயன்படுத்திச் சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் பிரசாத் ராமர். சிறிது பிசகினாலும் பாலியல் குற்றங்களுக்குப் பெண்தான் காரணம் என பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டும் வாய்ப்பு இருந்தாலும் அதனைப் பக்குவமாகக் கையாண்டிருப்பதற்குப் பூங்கொத்துகள்.

மொத்தத்தில் யதார்த்தம் குறையாமல், உண்மைக்கு நெருக்கமாக தைரியமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், தொழில்நுட்ப ரீதியான சில பிரச்னைகளை நீக்கியிருந்தால் இன்னும் நல்ல பெயரை வாங்கியிருப்பார்கள் இந்த பிள்ளைகள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.