பாஜகவில் இணையும் முகமது ஷமி! 2024 லோக்சபா தேர்தலில் போட்டி?

Mohammed Shami To Join BJP: இந்தியாவில் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். பல கட்சிகள் தங்களது கூட்டணி பேச்சு வார்த்தைகளை இறுதி கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.  இன்னும் தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில் பலரும் தங்களது பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர், இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார் முகமது ஷமி.  சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மக்களவை தேர்தலில் வங்காளத்தில் இருந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வந்தாலும் கடந்த ஆண்டு உலக கோப்பையில் முகமது ஷமியின் பந்துவீச்சு மற்ற அணியின் பேட்மேன்களை திக்கு முக்காட செய்தது.  உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவைச் சேர்ந்த ஷமி உள்நாட்டு கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு முகமது ஷமி எந்த ஒரு கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை.  வங்காளத்தில் சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதியில் ஷமியை வேட்பாளராக நிறுத்த பாஜக தலைமை திட்டமிட்டு வருகிறது.  ஷமி களமிறங்கினால் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று கூறப்படுகிறது.

இருப்பினும், வேகப்பந்து வீச்சாளர் ஷமி பாஜகவின் கோரிக்கைக்கு இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  பெங்கால் கிரிக்கெட் வீரர்கள் அரசியலுக்கு வருவது இது முதல் முறை அல்ல. முகமது ஷமிக்கு முன்பு, பெங்கால் அணி வீரர்களான மனோஜ் திவாரி மற்றும் அசோக் திண்டா போன்றோர் அரசியலில் ஈடுபட்டு உள்ளனர். திவாரி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் துறையின் அமைச்சராக உள்ளார், டிண்டா பாஜகவின் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மேலும், முகமது ஷமிக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுடன் நல்ல தொடர்பு உள்ளது. மேலும் பாஜக மேலிடத்துடன் நல்ல உறவு உள்ளது. கடந்த ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்த பிறகு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஷமியைச் சந்தித்து நீண்ட நேரம் பேசினர். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2024 மற்றும் டி20 உலக கோப்பை போட்டிகளில் ஷமி விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசியலில் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.