“முந்திரியை நம்பி வேலையை விட்டேன்… இப்போ, 10 கோடி சம்பாதிக்கிறேன்!" – ஜெயப்ரியா #Womenonics

பணி, தொழில் என சுயவருமானம் பெற்றுள்ள பெண்கள், தாங்கள் பொருளாதார தன்னிறைவு பெற்றுள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தில் பங்களிக்கத் தொடங்கியிருக்கும் முன்னேற்றம், மிக முக்கியமானது. வரவேற்கப்பட வேண்டியது. அப்படியான பெண்களை அறிமுகப்படுத்தி, அங்கீகரித்து, மற்ற பெண்களுக்கும் அவர்கள் மூலமாகக் கடத்துவோம் அந்த உத்வேகத்தை அளிப்போம்… #Womenomics #WomensDay2024

ஜெயப்ரியா

‘வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில்…’ – கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடல் வரிகள், எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் உத்வேகம் தரக்கூடியவை! இதற்கு, பண்ருட்டி பகுதி மக்களின் உழைப்பும், அவர்களுக்கு வாழ்வளிக்கும் முந்திரி மதிப்புக்கூட்டுதல் தொழிலும் நல்லதோர் உதாரணம். கடலூர் மாவட்டம், பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வறட்சியானவை. ஆனாலும், மழையை மட்டுமே நம்பி பயிரிடப்படும் முந்திரியை நம்பி, ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர்.

இங்கு உற்பத்தியாகும் முந்திரி, இந்தியா மட்டுமன்றி, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இத்தொழிலை நிர்வகிக்கும் வெகுசில பெண்களில் ஒருவரான ஜெயப்ரியா, ‘ஸ்ரீ சரஸ்வதி கேஷ்யூஸ்’ (‘Sri Saraswathi Cashews’) நிறுவனத்தை நடத்துவதுடன், 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறது. முந்திரியைத் தரம் பிரித்து விற்பனை செய்யும் இந்த கிரேடிங் தொழிலில், தொடங்கிய ஓர் ஆண்டிலேயே மாதம் 80 லட்சத்துக்கும் மேல் வர்த்தகம் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் ஜெயப்ரியா. பேராசிரியர் டு பிசினஸ்வுமன் பரிமாணம் குறித்துப் பேசுகிறார் ஜெயப்ரியா…

ஜெயப்ரியா

“இதுக்கு முன்பு, புரொஃபஸரா வேலை செஞ்சேன். அந்த வேலையுடன், உற்பத்தியாளர்கள்கிட்ட இருந்து முந்திரியை வாங்கி விற்கிற டிரேடிங் தொழிலும் செஞ்சேன். 2021-ல் புரொஃபஸர் வேலையை விட்டுட்டு, முந்திரி ஃபேக்டரியை ஆரம்பிச்சேன். நாங்க பத்து ஏக்கர்ல முந்திரி சாகுபடி பண்றோம். அதுபோக, விவசாயிகள்கிட்ட இருந்து கொள்முதல் பண்றதோடு, வெளிநாடுகள்ல இருந்தும் முந்திரியை இறக்குமதி பண்றோம். ஓடு பிரிக்காத முந்திரியை ஓர் ஆண்டு வரைக்கும் பயன்படுத்தலாம். அதனால, அதை தலா 80 கிலோ மூட்டையா ஸ்டோர் பண்ணி வெச்சுப்போம். பிறகு, மெஷின் மூலமா ஓடு மற்றும் முந்திரிப்பருப்பை தனித்தனியே பிரிப்போம்.

பலகட்ட கிரேடிங் செயல்பாடுகளுக்குப் பின்னர், முந்திரியை சாப்பிட ஏதுவா மாத்துவோம். இதன் மூலம் மொறுமொறுப்பு தன்மையுடன், முந்திரியின் தரமும் சுவையும் கூடுவதுடன், பல மாதங்களுக்கு அவை கெட்டுப்போகாது. அப்புறமா பார்சல் பண்ணி கூரியர் பண்ணுவோம்” என்பவர், மாதம்தோறும் 20,000 கிலோ முந்திரியை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்கிறார்.

பணியாளர்களுடன் ஜெயப்ரியா

“தமிழகத்துல அதிகமா கடைப்பிடிக்கப்படுற பத்து வகை கிரேடிங் புராசஸைதான் நாங்க கடைப்பிடிக்கிறோம். முதல் தரமான W180 முந்திரியோட விலை கொஞ்சம் அதிகம். இதுக்கு அடுத்தடுத்த தரத்துக்கேற்ப முந்திரியின் விலை குறையும். கடைகள்ல பலரும் வாங்கிப் பயன்படுத்துற முந்திரி, W320, W400-னு தரத்துல நாலு அல்லது அஞ்சாவது வகையைச் சேர்ந்தது. எந்தத் தரத்துல இருந்தாலும் எல்லா வகை முந்திரியுமே சாப்பிட ஏதுவானவைதான். முந்திரி மதிப்புக்கூட்டல் முறையிலயும் குறிப்பிட்ட அளவு சேதாரம் இருக்கும். அப்படி உடைஞ்ச முந்திரி, குருணை மாதிரியான முந்திரினு எல்லாத்தையும் தனித்தனி விலைக்கு வித்திடலாம்.

முந்திரியின் ஓடுகள்ல எண்ணெய்த் தன்மை இருக்கிறதால, அவை பெயின்ட் தயாரிப்புக்குப் பயன்படும். அதனால, இந்த ஓடுகளைத் தனியா வித்திடுவோம். எண்ணெய் பிரிச்செடுக்கப்பட்ட ஓடுகள், பாய்லர் தேவைக்கு எரிபொருளா பயன்படும். வாழை மாதிரியே, முந்திரியிலயும் எல்லா பொருளுமே காசுதான்” – நம்பிக்கையுடன் சொல்பவர், மொத்த விலை மற்றும் சில்லறை விலையில் இந்தியா முழுக்க முந்திரியை விற்பனை செய்வதுடன், ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் செய்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.