26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பேட்டிங்கில் நடந்த அதிசயம்..!

தர்மசாலாவில் இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வெற்றி பெற்று முதல் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி குல்தீப் மற்றும் அஸ்வின் பந்துவீச்சில் 218 ரன்களுக்கு சுருண்டது. குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை மட்டும் இழந்து 135 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இந்திய அணி வெள்ளிக்கிழமை இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இந்திய அணியில் அபாரமாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் சதமடித்து அசத்தினர். இருவரும் பார்ட்னர்ஷிப் 174 ரன்கள் சேர்த்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் பந்தில் 103 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ரோகித் போல்டானார். அடுத்து சுப்மன் கில் 110 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி அதிரடியாக 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சர்பராஸ் கான் 56 ரன்கள், தேவ்தத் படிக்கல் 65 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். 

இதற்கு அடுத்து வந்த துருவ் ஜுரல் 15, ரவீந்திர ஜடேஜா 15, ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார்கள். இந்திய அணி 428 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்தது. இதற்குப் பின் ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் 27, ஜஸ்ட்பிரித் பும்ரா 19 இருவரும் சேர்ந்து 108 பந்துகளில் 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட் விடாமல் பார்த்துக் கொண்டார்கள். இந்திய அணி தற்பொழுது எட்டு விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் சேர்த்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணியை விட 255 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இங்கிலாந்து அணியின் தரப்பில் சோயப் பஷீர் நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களும் 50 ரன்கள் கடந்துள்ளனர். இதுவரை இந்திய கிரிக்கெட்டில் இத்தோடு சேர்த்து ஐந்து முறை இப்படி நடந்திருக்கிறது. கடைசியாக 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக லக்ஷ்மணன், சித்து, டிராவிட் சச்சின் மற்றும் அசாருதீன் ஆகிய ஐந்து பேட்ஸ்மேன்கள் குறைந்தபட்சம் 50 ரன்களை கடந்து அடித்து இருந்தார்கள். 26 வருடங்கள் கழித்து மீண்டும் தற்பொழுது இப்படியான அதிசயம் இந்திய அணியின் பேட்டிங்கில் நிகழ்ந்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.