82 percent of unaccounted income is election bonds | அடையாளம் தெரியாத வருவாயில் 82 சதவீதம் தேர்தல் பத்திரங்களே

புதுடில்லி, தேசிய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத வகையில் கிடைத்த வருவாயில், 82 சதவீதம், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கிடைத்தவை என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு, 20,000 ரூபாய்க்கு கீழ் நன்கொடை அளிப்பவர்கள் பெயர்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை.

உத்தரவு

இதன் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டது தான், தேர்தல் பத்திரங்கள்.

இந்த தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்நிலையில், 2022 — 2023ம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கைகளை, ஆறு தேசிய கட்சிகள், தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ளன. இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.

அது வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பா.ஜ., -காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி ஆகிய ஆறு தேசிய கட்சிகள் அளித்துள்ள தகவல்களின்படி, ஒட்டுமொத்தமாக இவற்றுக்கு, 1,832 கோடி ரூபாய், அடையாளம் தெரியாத வகையில் கிடைத்த வருவாயாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், 1,510 கோடி ரூபாய், அதாவது மொத்த அடையாளம் தெரியாத வருவாயில், 82 சதவீதம், தேர்தல் பத்திரங்கள் வாயிலாகவே கிடைத்துள்ளன.

இதில் பா.ஜ., அதிகபட்சமாக, 1,400 கோடி ரூபாயை, அடையாளம் தெரியாத வகையில் கிடைத்த வருவாயாக காட்டியுள்ளது.

அடையாளம்

இது ஒட்டுமொத்த தொகையில், 76.39 சதவீதம். அதற்கடுத்து, காங்கிரஸ், 315.11 கோடி ரூபாயை கணக்கு காட்டி உள்ளது. இது, 17.19 சதவீதமாகும்.

தேசிய கட்சிகளுக்கு, 2004 – 2005 முதல் 2022 – 2023 வரையிலான காலகட்டத்தில், 19,083 கோடி ரூபாய் அடையாளம் தெரியாத வகையிலான வருவாய் கிடைத்து உள்ளது.

இந்த தேசிய கட்சிகளைத் தவிர, பல மாநில கட்சிகளுக்கும், அடையாளம் தெரியாத வகையில் வருவாய் கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.