Committed to rescuing Indians trapped in Ukraine war: Central Govt | உக்ரைன் போரில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் உறுதி: மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ‛‛ உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் உறுதி பூண்டுள்ளோம்” என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள்ள ‘டிராவல் ஏஜன்சிகள்’ ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றன. இதற்கு ஆட்களை அழைத்து வரும் முகவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்குகின்றனர். பின்னர் இந்தியாவில் இருந்து, அழைத்துச் செல்லப்படும் அவர்களுக்கு ரஷ்யாவில் ராணுவ பயிற்சி அளித்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துகின்றனர். இதில் பங்கேற்ற சிலர் காயமடைந்து தவித்து வருகின்றனர்.

ரஷ்யாவுக்கு வேலைக்கு அழைத்து செல்லும் நிறுவனங்கள் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று( மார்ச் 07) தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா உள்பட 10 இடங்களில் உள்ள, தனியார் டிராவல் ஏஜன்ட், முகவர்கள் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்தியர்களை, அதில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷ்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பொய் வாக்குறுதிகள் அளிக்கும் ஏஜன்ட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், ஆள் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஏஜன்ட் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். அந்த வாக்குறுதிகள் சிக்கலை ஏற்படுத்துவதுடன், ஆபத்தை ஏற்படுத்தும். ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாக பணிபுரியும் இந்தியர்களை, உடனடியாக அப்பணியில் இருந்து விடுவிப்பதுடன், அவர்களை தாயகம் அழைத்து வர உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.