`இந்த மாதிரி பண்ணினா பொண்ணுங்களுக்கு கோபம் வரும்னு தெரியாதா..?’| ரொமான்ஸ் ரகசியங்கள் – 3

இன்னும் கொஞ்ச நேரத்தில் காட்பாடி ரயில் நிலையம் வந்துவிடும். லீலாவைப் பார்க்கப் போகிற தருணத்தையே நெஞ்சில் அசை போட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.

“இங்க பாருடா… இதுவரைக்கும் உனக்கு 17 பொண்ணு பாத்தாச்சு, இதுக்கு மேல பாக்குறதுக்கு எனக்கும் தெம்பில்ல. அம்மாவுக்கும் தெம்பில்ல. நீ ஒரு சைக்காலஜிஸ்ட் தானே… ஒரு பொண்ண லவ் பண்ணக் கூட துப்பில்லையா?’’

கார்த்திக்கின் அக்கா நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேள்வி கேட்டும் சிரித்துக் கொண்டே இருந்தான் கார்த்திக்.

“அக்கா… ஒரு பொண்ண பாத்ததும் பிடிச்சிருக்குனு சொல்லிட்டுப் பேசுறதுல என்ன லாஜிக் இருக்கு? ஒரு பொண்ண பிடிச்ச பிறகு பாக்குறதுதான் லாஜிக்.’’

Love Chat

“என்னடா… டிசைன் டிசைனா குழப்புறே? இதுவரைக்கும் காட்டுன 17 பொண்ணுங்களுக்கும் என்ன குறைச்சல்? எதுக்கு ஒருத்தரை கூட நேர்ல பாக்க வரலை நீ?’’ – கார்த்திக்கை முறைத்தாள் அக்கா.

“எந்தப் பொண்ணோடவும் எனக்கு வேவ்லெங்த் செட் ஆகலை. அதுக்கு என்ன பண்ண முடியும்?’’

“பொண்ணப் பாக்காமலே எப்படி முடிவு பண்றே?’’

“எந்தக் காலத்துல இருக்க நீ? போன், வாட்ஸ்அப், சோஷியல் மீடியானு எவ்ளோ ஆப்ஷன்ஸ் இருக்கு… நீங்க காட்டுன பொண்ணுங்க எல்லார் கூடவும் பேசிப் பாத்துட்டேன். யாருமே என் டேஸ்டுக்கு இல்ல.’’

“ஓ… நீ அவ்ளோ பெரிய ஆணழகன் பாரு. உன் கூட பேச முடியாது, என்னவோ பண்ணிக்கோ. இந்த பொண்ணு பேரு லீலா. போட்டோவும் போன் நம்பரும் வாட்ஸ்அப் பண்ணிட்டேன். இவளையும் இப்பவே ரிஜக்ட் பண்ணிடு. எனக்கு வேற வேலை இருக்கு. கிளம்புறேன்.’’

லீலாவை கார்த்திக்கின் கண்களில் காட்டிவிட்டு குட்பை சொல்லிவிட்டு ஊருக்குக் கிளம்பினாள் அக்கா.

 `ஹாய் நான் கார்த்திக்’ என்று அப்போது ஆரம்பித்த சாட்டிங்தான் இப்போது ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

கார்த்திக் சைக்காலஜிஸ்ட். கல்லூரியில் படித்தபோது ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிந்த பிறகு, காதல், கல்யாணம் இதற்கெல்லாம் பெரிய பிரேக் விட்டிருந்தான். இப்போது திருமணத்துக்கு வீட்டில் அவசரப்படுத்தினாலும், தனக்கான துணையை அவசரப்படாமல் தேட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான் கார்த்திக். கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரியும் லீலாவுக்கும், கார்த்திக்குக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப் போனதே எட்டாம் அதிசயம்தான்.

“ஹே… ராக்கோழி … காலைல பண்ண மெசெஜ்க்கு என்னடி நடுராத்திரி வந்து ரிப்ளை பண்றே?’’

“ஆமா… காலேஜ்ல க்ளாஸ்ல இருக்கும்போது ரொமான்ஸ் பண்ண சொல்றியா? ‘’

Romance Ragasiyangal

ஏட்டிக்குப் போட்டியாகக் குறும்போடு பேசும் லீலாவை கார்த்திக்குக்குப் பிடிக்காமல் போனால்தான் ஆச்சர்யம். காதலர்கள், திருமணம் ஆனவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என மனரீதியாகப் பல பிரச்னைகளை சுமந்து வரும் பல்வேறான மனிதர்களை தினம் தினம் சந்திக்கும் கார்த்திக்குக்கு, எப்போதுமே நெகட்டிவிட்டி பேசாத லீலாவின் ஒவ்வோர் அணுகுமுறையும் அளப்பரியக் காதலை அள்ளித் தந்தது.

சாட்டிங்கில் ஆரம்பித்த பேச்சு மெது மெதுவாக ஆடியோ கால், வீடியோ கால் என முன்னேறிச் சென்றது. முதன்முதலாகப் பேச ஆரம்பித்த நாளில் இருந்து சரியாக நூறாவது நாளில் சந்தித்துக் கொள்வதுதான் இருவரின் திட்டம்.

“நான் உன்னை நேர்ல பார்க்கல… விர்ச்சுவல் தான் எல்லாமே. ஒருவேளை என்னை நேர்ல பார்த்துப் பிடிக்காட்டி என்ன பண்ணுவ?’’ – லீலா கேட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் கார்த்திக்.

Love Call

“ஒருவேளை நேர்ல பார்த்து நான் ரொம்ப அழகா இருக்கேன்னு நீ ஒகே பண்ணி கல்யாணம் ஆகிடுச்சுனு வை… அப்புறம் எனக்கு ஏதாச்சும் ஸ்கின் அலெர்ஜி ஆகி நான் பாக்கவே அசிங்கமா ஆகிட்டா… நீ என்னை டைவர்ஸ் பண்ணிடுவியா பேபி?’’

“இதென்ன லூசு மாதிரி ஒரு ரிப்ளை. போனை வைடா இடியட்’’ – சட்டென துண்டித்தாள் லீலா.

நிச்சயிக்கப்படும் திருமணம் என்றால், முதலில் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆண் – பெண் இருவரின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது, பின்பு புகைப்படங்கள் மற்றும் இருவரின் குடும்பப் பின்னணிகள் பிடித்துவிட்டால் பெண் பார்க்கும் சம்பிரதாயம் வைத்து இருவரும் நேரில் சந்தித்துக் கொள்வது, இருவரின் தோற்றமும் ஒருவருக்கொருவர் பிடித்துவிட்டால், அன்றைய நாளில் இருவரையும் ஒரு தனியிடத்தில் பத்து நிமிடங்களுக்குப் பேச வைப்பது, இந்த பத்து நிமிட அவகாசத்தில் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு பிடித்துவிட்டால் அடுத்ததாக நிச்சயம், திருமணம் என நகர்வது.. இப்படித்தான் பெரும்பான்மையான திருமணங்கள் நிகழ்கிற விதமாக இருக்கும் நிலையில்…

வழக்கமான இந்தச் சடங்கு முறைத் திருமணங்களில் கார்த்திக்குக்கு உடன்பாடில்லை. லீலாவுக்கும் அவன் கருத்துக்கு மறுப்பில்லை.

’முதலில் பேசிக் கொள்வோம். உள்ளம் என்கிற ஆன்மா ஒத்துப் போனால் திருமணம் செய்து கொள்வோம். தோற்றம் முக்கியமில்லை என்று சொல்லவில்லை. தோற்றத்தின் அளவீடு என்பது குறைந்தபட்ச ரசனையைப் பூர்த்தி செய்தால் போதும். தோற்றம் என்பது நோயுற்றாலோ,  ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ மாறக் கூடியது. தோற்றம் நிரந்தரம் என்பதற்கு நிச்சயமில்லை.

ஒல்லியாக இருக்கும் யாரும் திருமணத்துக்குப் பிறகு பருமனாகலாம். முடி உதிர்ந்து வழுக்கை விழலாம். வயோதிகம் வந்து தோல் சுருங்கலாம். கண்ணாடி அணியலாம். பற்கள் விழுந்து பொக்கைச் சிரிப்பை உதிர்க்கலாம். தோற்றம் எப்போதும் மாறிவிடும் ஒன்று தான். ஆனால் ஆன்மா அப்படியல்ல.

ரொமான்ஸ் ரகசியங்கள்

ஒரு மரத்தின் இலைகள் உதிரலாம், வேர்கள் உதிராது. ஒரு மனிதனின் அடிப்படை குணம் தான் ஆன்மா. அது  ஒரு மரத்தின் ஆணி வேரைப் போன்றது. ஆன்மாவைப் புரிந்துகொண்டு இணைகிற வாழ்வில் பெரும்பாலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை’ என்பதே கார்த்திக் – லீலா இருவரின் ஒருமித்த புரிதல்.

“சாயங்காலம் 5.45 மணிக்கு காட்பாடி ஸ்டேஷன் வந்துருவேன். மீட் பண்ண பிறகு எங்க போறோம்… என்ன பண்ணப் போறோம்னு எல்லாம் இப்பவே பேசிக்க வேணாம். ஒரு ஃப்ளோல போவோம்… சீ யூ பை’’ என லீலாவிடம் பேசி முடித்த பிறகு, கோயம்புத்தூரில் ரயில் ஏறியவன் இப்போது காட்பாடி நிறுத்தத்தில் இறங்கிவிட்டு லீலாவைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவளைக் காணவில்லை.

“ஹே… கார்த்திக் . கிளாஸ் முடிய லேட்டாகிடுச்சு. கரெக்ட்டா 40 நிமிஷத்துல அங்க இருப்பேன். கோவிச்சிக்காத ப்ளீஸ்…’’  – போனில் கொஞ்சியும் கெஞ்சியும் சொன்னாள் லீலா.

“சரி… சரி… ஐயம் வெயிட்டிங்’’ என்று சொல்லிவிட்டு ஃப்ளாட்பார்மில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் சாய்ந்தான் கார்த்திக்.

கொஞ்சம் நேரம் கண்களை மூடிக் கொண்டு இசையில் மூழ்கினான். மஞ்சள் நிற சுடிதார், நீல நிற துப்பட்டாவுடன் தன் எதிரில் வந்து நின்ற ஒரு பெண்ணைப் பார்த்ததும் சட்டென எழுந்து நின்றான். அவள் லீலா இல்லை என்பது தெரிந்ததும் கண்களை மூடாமல் வழி மேல் விழி வைத்து லீலாவுக்காகக் காத்திருந்தான்.

Love Chat

லீலா சொன்ன 40 நிமிடங்கள் முடிய இன்னும் 5 நிமிடங்கள் மிச்சம் இருந்தன. கையில் இருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் பருகினான்.

அதே மஞ்சள் நிறம். தோடுகள் இரண்டும் காற்றில் ஆடுகிற அழகு. காதோரக் கூந்தலை தோடுக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டு தன் முன்னால் வந்து மூச்ச்சிரைக்க நிற்கும் பெண்ணைப் பார்த்ததும், குடித்துக் கொண்டிருந்த வாட்டர் பாட்டிலை சட்டென நிமிர்த்தவும் வேகமாய் வந்த நீர் அவன் முகத்தில் சிந்தி சட்டை வரை வழிந்தது.

“லீலா….’’

மஞ்சள் நிறப் புடவையில் தேவதைக்கு இலக்கணம் கொடுத்து நின்றாள்.

“கார்த்திக்…. ‘’ – லீலாவுக்குப் பேச்சு வரவில்லை. கடைசியாக போன வாரம் தான் கார்த்திக்குடன் வீடியோ காலில் பேசியிருந்தாள். அவள் பார்த்த கார்த்திக் போல் இவனில்லை. முகமெல்லாம் ஆங்காங்கே வெட்டுப்பட்டு தையல் போட்ட தழும்புகள். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸில் பார்த்த `அன்பே சிவம் ‘ கமலஹாசன் போல ஓர் உருவம். ’ஆனால், இவன் கார்த்திக் தான். இதற்கு முன் இப்படி இல்லையே? தழும்புகள் இல்லாதவன் முகத்தில் எப்படி இத்தனை தழும்புகள் இருக்க முடியும்?’ – குழப்பத்தில் பிரமித்து நின்றாள்.

“நான் தான் சொன்னேன்ல… நான் அசிங்கமா இருப்பேன்னு… இப்ப சொல்லு நான் உனக்கு ஓகேவா?’’

என்ன பதில் சொல்வது? தான் ஆரம்பத்திலிருந்து பார்த்த உருவம் தான் இப்போது இருக்கிறது என்றால் அவனை மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், முற்றிலும் வேறொரு உருவத்தோடு வந்து நிற்கிறான் கார்த்திக்.

ரொமான்ஸ் ரகசியங்கள்

யோசித்து, பின் மிகத் திடமாய் உள்ளிருந்து சொன்னாள்.

“இல்ல கார்த்திக்… இதான் நீங்கனு சொல்லிட்டு பேசியிருக்கலாம். இவ்ளோ நாள் பேசினப்போ ஏதாவது ஃபில்டர் யூஸ் பண்ணீங்களா? இல்ல வீடீயோ கால் பேசாத இந்த ஒரு வாரத்துல எதுவும் ஆகியிருக்குமானும் புரியலை. ஒரே குழப்பமா இருக்கு. எதுனாலும் இது சீட்டிங் தான். இதை உங்ககிட்ட நான் எதிர்ப்பார்க்கல… ஐயம் ஸாரி.

ஆனா ஒண்ணு. உருவத்துக்காக நான் உங்களை வேண்டாம்னு சொல்றேன்னு நினைச்சு, என் குணத்தை கீழிறக்கிடாதீங்க. இங்க காயப்பட்டிருக்கிறது… உங்க மேல நான் வெச்சிருந்த நம்பிக்கை. நாம பழகின விதத்துல நிகழ்ந்த இணக்கத்துல, இந்த முகத்தோடயே நான் கார்த்திக்கை லவ் பண்ணியிருப்பேன். அதுல எனக்கு எந்த சந்தேகமும் இப்பவும் இல்ல. ஆனா, இதை சொல்லாம எங்கிட்ட 100 நாளா மறைச்சு பேசின கார்த்திக்கோட முகத்தைவிட, அவரோட மனசுதான் இப்போ எனக்கு விலக்கமா இருக்கு. இதை நீங்க செஞ்சிருக்க வேண்டாம் கார்த்திக்.’’ – சற்று அமைதியாய் நின்றாள்.

கார்த்திக் தன் முகத்தில் இருந்த தழும்புகள் ஒவ்வொன்றாய் பிரித்து எடுத்தான். சிரித்தான்.

அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் லீலா.

“லீலா… இதெல்லாம் டாட்டூஸ். உன்ன ப்ராங் பண்ணேன்..பயந்துட்டியா?’’

கண்களில் கோபம் கொப்பளிக்க முறைத்தாள்.

“இப்டித்தான் செக் பண்ணி பாப்பியா நீ… கிளம்புறேன் பை’’ – ஒரு நொடி கூட தாமதிக்காமல் கிளம்பினாள் லீலா.

“லீலா… லீலா’’ என கத்திக்கொண்டே பின்னால் ஓடினான் கார்த்திக்.

ஓர் அணைப்பு, ஒரு முத்தம், கண்களில் பெருகும் ஆனந்த கண்ணீர் என பரஸ்பரம் இருவருக்கும் நடந்திருக்க வேண்டிய முதல் சந்திப்பு கடைசியில் இப்படியாக முடிந்திருந்தது. தான் எப்படி இருந்தாலும் லீலா தன்னை ஏற்றுக் கொள்வாளா என்கிற சந்தேகத் தொனியில் கார்த்திக் அப்படிச் செய்யவில்லை. உண்மையாகவே, அவன் சர்ப்ரைஸ் தர வேண்டும் என்கிற எண்ணத்தில் செய்திருந்தாலும், முன்பு போனில் பேசிய வசனங்கள், அவன் வேண்டுமென்றே செய்ததாகத் தான் லீலாவுக்கு உணர்த்தியது.

என்னதான் உடலைப் புறந்தள்ளி மனதை பிரதானப்படுத்தும் புரிதல் கொண்ட காதலர்களாக இருந்தாலும், எதைப் பேச வேண்டும், எதைச் செய்ய வேண்டும், அதை எந்த சூழலில் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை கார்த்திக் இந்த சம்பவத்தின் மூலம் பாடம் கற்றுக் கொண்டான்.

’’என்ன பெரிய சைக்காலஜிஸ்ட்… இந்த மாதிரி பண்ணா பொண்ணுங்களுக்கு கோபம் வரும்னு கூட தெரியாம போச்சே. இது என் காதலுக்கு, அன்புக்கு வெச்ச பரிசோதனை மாதிரி இருக்கு. அந்த அளவுக்குத்தான் நீ என்னை புரிஞ்சு வெச்சுருக்கியானு எனக்குக் கொஞ்சம் அவமானமாகூட இருக்கு…’’ – தனியாக உட்கார்ந்து கன்னத்தில் கைவைத்தபடி யோசித்துக் கொண்டிருந்தான்.

காதல்

லீலாவுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் காட்பாடி ரயில் நிலையத்திலேயே நீண்ட நேரமாய் உட்கார்ந்திருந்தான் கார்த்திக்.

“உன்னோட சின்ன வயசு ஃபோட்டோ அனுப்பேன்’’ என்று கார்த்திக் ஒருமுறை கேட்டபோது,  முகமெல்லாம் பவுடர் பூசிக் கொண்டு, ஒட்ட வைத்த நீள நாக்கோடு `பேய்’ போல் வேடமிட்ட தன் புகைப்படத்தை லீலா அவனுக்கு அனுப்பி வைத்திருந்தாள்.

தன் கேலரியில் இருந்த அந்தப் படத்தை எடுத்து, லீலாவுக்கு மீண்டும் அனுப்பி வைத்தான் கார்த்திக்.

`இந்த போட்டோவைப் பார்த்துதான், நான் உன் மேல இம்ப்ரெஸ் ஆனேன் லீலா. எவ்ளோ ஜாலியான பொண்ணு நீ. அழகா, க்யூட்டா இருக்குற போட்டோ அனுப்பாம… பேய் வேஷம் போட்ட போட்டோ அனுப்பி நீ என்கிட்ட விளையாடுனப்ப, உனக்கு சர்ப்ரைஸ் பிடிக்கும்னு நானாவே நினைச்சிட்டு தான் இப்படி பண்ணிட்டேன்… ஸாரி மை குட்டி பிசாசு’ – என்று ஒரு மெசெஜும் அனுப்பி வைத்தான்.

ஒரு மணி நேர கோபத்துக்குப் பின், அந்த மெசெஜைப் படித்ததும் தன்னை அறியாமல் மெதுவாய்ச் சிரித்தாள் லீலா. பேய் போட்டோவில் நாக்கை துருத்திக் கொண்டிருந்ததைப் போல் பலமுறை அவனிடம் வீடியோ காலில் பேசியிருக்கிறாள்.

எதையும் யோசிக்காமல் மீண்டும் ரயில் நிலையம் போனாள். பொழுது சாய்ந்து மின்விளக்குகள் ஒளிர ஆரம்பித்திருந்தன. ஸ்டோன் பெஞ்சில் உட்கார்திருந்தான் கார்த்திக். அவன் முன்பாக மீண்டும் போய் நின்றாள்.

Love

“குட்டிப் பிசாசு’’ – மெதுவாய் தன் இரு கைகளையும் அகல விரித்தான். ஒரு கோழிக் குஞ்சைப் போல் அவன் மார்பில் சாய்ந்தாள் லீலா. அவன் வாரி அணைத்துக் கொண்டான்.

விளையாட்டு விபரீதமாகும் என்று கார்த்திக் புரிந்து கொண்டான். அதேபோல் எதுவாக இருந்தாலும் கொஞ்ச நேரம் காது கொடுத்து கேட்டுவிட்டுப் போயிருக்கலாம் என்று லீலாவும் புரிந்து கொண்டாள்.

அணைத்துக் கொண்டிருந்த இருவரின் தலைக்கு மேலிருந்த சோடியம் விளக்கு இருவர் மீதும் ஒளிமழையைத் தூவி வாழ்த்திக் கொண்டிருந்தது.

காதல் பிரகாசித்தது.

– அர்ச்சனா

– ரகசியங்கள் தொடரும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.