சர்ஃபராஸ் கான் முதலில் இந்த பாடத்தை கத்துக்கணும்… மோசமான அவுட் – கிழித்தெடுத்த மூத்த வீரர்!

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்னும் 2 விக்கெட்டுகளை கையில் வைத்துள்ள இந்திய அணிக்கு குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நாளை அவர்கள்தான் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்குவார்கள். 

முன்னதாக, இந்தியாவின் வலுவான நிலைக்கு அதன் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்டர்கள் அனைவருமே காரணம் எனலாம். ஓப்பனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் தலா 1 சதத்தை பதிவு செய்தனர். மேலும், மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரைசதம் அடித்தனர். அதவாது, இந்திய முதல் 5 வீரர்கள் இந்த இன்னிங்ஸில் குறைந்தபட்சம் அரைசதம் அடித்துள்ளனர். 

மிடில் ஆர்டர் கைக்கொடுத்தாலும் கீழ் வரிசையில் ஜடேஜா, துருவ் ஜூரேல், அஸ்வின் ஆகியோர் சொதப்பி சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். குறிப்பாக, மூன்றாவது செஷனில் மட்டும் இந்திய அணிக்கு 5 விக்கெட்டுகளை விழுந்தது. அதற்கு பிள்ளையார்சுழி போட்டது சர்ஃபராஸ் கான். இரண்டாம் செஷனில், மார்க் வுட், டாம் ஹார்ட்லி, பஷீர் என அனைத்து பந்துவீச்சாளர்களை அடக்கி அரைசதம் அடித்திருந்த சர்ஃபராஸ் கான் தேனீர் முடிந்து மூன்றாவது செஷன் ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே லேட் கட் ஷாட் ஆடி, ஸ்லிப்பில் நின்ற ரூட்டுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

சர்ஃப்ராஸ் கானின் இந்த அற்புதமாக விளையாடியிருந்தாலும் அவரின் மோசமான ஷாட் செலக்ஷேனால் அவுட்டாகியிருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி வர்ணனையில் ஈடுபட்டிருந்த சுனில் கவாஸ்கர், சர்ஃபராஸ் கான் அவுட்டாகி வெளியேறும்போது,”பந்து நன்றாக மேலே பிட்ச் செய்யப்பட்டது; (சர்ஃபராஸ் கான் தேர்வு செய்த) அந்த ஷாட்டுக்கு அந்த லெந்த் போதுமானதாக இல்லை. 

அதை அடித்து மதிப்புமிக்க விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். அதாவது நீங்கள் தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதல் பந்தை விளையாடுகிறீர்கள் என்றால், அதற்கு என்று சில மரியாதை கொடுத்து அதனை பாருங்கள்.

ஜாம்பவான் டான் பிராட்மேன் என்னிடம் ஒருமுறை கூறும்போது, ‘நான் ஒரு போட்டியில் 200 ரன்களே அடித்திருந்தாலும், ஒவ்வொரு பந்தை எதிர்கொள்ளும் போது நான் நான் 0-வில் இருப்பதாக நினைத்துக் கொள்வேன் என்று நினைக்கிறேன்.’ இதோ [சர்ஃபராஸ்]… செஷனின் முதல் பந்தில் இப்படி ஒரு ஷாட்டை விளையாடுகிறார், இதனால் அரைசதத்தை சதமாக மாற்றமாமல் இப்படியே அவுட் ஆகிறார்” என தெரிவித்துள்ளார்.  முன்னதாக இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட்டானது. குல்தீப் யாதவின் அற்புத பந்துவீச்சால் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்திலும் இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங் லைன்அப்பால் சோப்பிக்க முடியவில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.