ஹேப்பி ஸ்ட்ரீட் – சென்னை அண்ணாநகரில் 4 ஞாயிற்றுகிழமைகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை அண்ணாநகர் பகுதியில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்வு காரணமாக 4 ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: “K4 அண்ணா நகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குப்பட்ட இரண்டாவது நிழற்சாலையில் 10.03.2024, 17.03.2024, 24.03.2024 மற்றும் 31.03.2024 ஆகிய ஞாயிற்றுகிழமைகளில் “HAPPY STREET” என்ற நிகழ்வு நடைபெற இருப்பதால், இரண்டாவது நிழற்சாலையில் புளுஸ்டார் சந்திப்பு முதல் 2வது நிழற்சாலை X 3வது பிரதான சாலை சந்திப்பு (நல்லி சில்க்ஸ்) வரை காலை 6.00 மணி முதல் 09.00 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மேற்கண்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, திருமங்கலத்திலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் இடது புறம் திரும்பி 6வது நிழற்சாலை, K4 PS ரவுண்டானாவை அடைந்து சிந்தாமணி, ரவுண்டானாவுக்கு செல்ல வேண்டும்.

திருமங்கலத்திலிருந்து அமைந்தகரை, ஈ.வெ.ரா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் வலதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலையை அடைந்து அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்லவேண்டும்.

அண்ணாநகர் ரவுண்டானாவிலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலையில் நல்லி சில்க்ஸ் அருகே 3வது பிரதான சாலையில் இடது புறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக திருமங்கலம் முகப்பேர் செல்ல வேண்டும்.

புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையிருந்து (ஜெஸ்சி மோசஸ் பள்ளி மார்க்கதிலிருந்து) இரண்டாவது நிழற்சாலைக்கு (அண்ணாநகர் ரவுண்டானா நோக்கி) இடதுபுறம் திரும்புவதை தவிர்த்து 5வது நிழற்சாலையில் நேராக சென்று 4வது நிழற்சாலை வழியே செல்ல வேண்டும்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும். எனவே வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மற்றும் குடியிருப்புவாசிகளும் ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.