`Dragon Ball Z படைத்தவர் மறைந்தார்!' – அகிரா டோரியமாவின் படைப்புகள் சொல்லும் தன்னம்பிக்கை கதை

நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். அதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் நமக்கு ஆதர்சமான, உன்னதமான படைப்பாளிகளின் மரணத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே. எக்ஸ் தளத்தில் எங்குப் பார்த்தாலும் RIP SENSEI என்ற பதிவைப் பார்க்க முடிகிறது. `சென்செய்’ என்றால் ஆசான் என்று பொருள். யார் அந்த ஆசான்? அந்த ஆசான் கற்றுத் தந்த பாடம் என்ன?  

அகிரா டோரியமா

90-ஸ் கிட்ஸ் கார்ட்டூன் பிரியர்கள் அனைவருக்கும் மிக நெருக்கமான கார்ட்டூன் அனிமேக்களின் (Anime) வரிசையில் ‘டிராகன் பால் ஜி’ (Dragon Ball Z) எப்போதும் முன்னிலையில் இருக்கும். கோகு, வெஜெட்டா, பிரிசாவின் பெயர்களும், அடிக்கிற ஒரு அடிக்கு ஈர்ப்பு விசையை மறந்து வானிலேயே பறந்து ரவுண்டு கட்டி அடிக்கும் அதிரடி சண்டைக்காட்சிகளும் உலகளவில் ஏகோபித்த வரவேற்பை இன்று வரை பெற்று வருகின்றன. தமிழகத்திலும் கூட 90-ஸ் கிட்ஸை ஒவ்வொரு நாள் மாலை பள்ளி முடிந்து வந்தவுடன் ரிமோட்டும் கையுமாக டிவியின் முன்னர் உட்கார வைத்தது, இன்றும் இணையத்தில் அவற்றைப் பார்க்க வைக்கிறது. அப்படியான அனிமே தொடரைப் படைத்த ஜப்பானியக் கலைஞரான அகிரா டோரியமா தனது 68-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

அனிமேக்கள் என்பது நேராகப் படமாக வருவது கிடையாது. முதலில் ‘மங்கா’ (Manga) என்ற ஜப்பானிய காமிக்ஸ் வடிவில் ரிலீசாகி அதில் ஹிட் அடித்து தன்னை நிரூபித்த பின்னரே திரைப்படமாக வெளியாகிறது. அப்படி 11 ஆண்டுகள் முன்னர் மங்கா, அனிமே சீரியஸ் என வெற்றி நடைபோட்ட ‘டிராகன் பால் ஜி’-யின் மூலம் பிரபலமடைந்தவர்தான் அகிரா டோரியமா. மேற்கு உலகில் டி.சி, மார்வெல் செய்த சாதனைகளை ஆசியாவில் சத்தமில்லாமல் செய்த ஓர் உன்னத கலைஞன் டொரிமோ என்றால் அது மிகையில்லை.

Dragon Ball Z

ஏழு சீசன்கள், இருபத்தி மூன்று படங்கள் என இதுவரை 20 பில்லியன் டாலருக்கும் மேல் `டிராகன் பால் ஜி’ மூலம் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். மீடியா ஃபிரான்சைஸ் வரலாற்றில் அதிக லாபம் ஈட்டிய 20 ஃபிரான்சைஸ்களில் இதுவும் ஒன்று. இத்தகைய சாதனைகளை நிகழ்த்திய டொரிமோ யார், அவரது படைப்புகள் எப்படிப் பிரபலமடைந்தன, அவரது திறமைகள் எங்கிருந்து வந்தன என்பதைப் பார்க்கலாம். இதோ 90-களின் குழந்தைகளின் ஆதர்ச அனிமே ஆக்கத்தின் தலைவன் அகிரா டோரியமாவின் கதை…

ஜப்பானில் 1955ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்த டோரியமா, மங்கா காமிக்ஸ் கலைஞர் ஆவதற்கு முன்னர், விளம்பர நிறுவனத்தில் போஸ்டர்களை வடிவமைக்கும் வேலையிலிருந்தார். ஆனால், மங்கா வரைவதிலிருந்த அவரது தீவிர ஆர்வம் மூன்று வருடங்களில் அந்த வேலையை விட்டு வெளியேறத் தூண்டியது. அப்போது ஜம்ப் என்ற சிறிய உள்ளூர் காமிக்ஸ் இதழால் நடத்தப்பட்ட கலைஞர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டார். அதில் பெரிய பரிசை வெல்லாவிட்டாலும், டோரியமாவின் வாழ்க்கையை மாற்றப்போகும் ஒரு நபரைச் சந்திக்க வைத்தது. அது ‘கசுகிகோ டோரிஷிமா’ என்பவரைத்தான். அவர்தான் பின்னாட்களில் ‘டிராகன் பால் ஜி’-யை வெளியிட்ட ஜம்ப் பத்திரிகையின் ஆசிரியர். 

ஜம்ப் இதழ்

இவரது தொடர்கள் வெளியான பதினோரு வருடங்களே ‘ஜம்ப் இதழின் பொற்காலம்’ என்று ஜப்பானில் அழைக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ‘டிராகன் பால் ஜி’ தொடரின் முழுக் கதையும் கிட்டத்தட்ட 10,000 பக்கங்கள் கொண்டதாக உருவாக்கியுள்ளார். வெறும் மங்கா வரைபடமாகத் தொடங்கிய பயணம், இறுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலான தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தொடராக மாறியது. உலக நாடுகளில் பல மொழிகளில் மொழி மாற்றமும் செய்யப்பட்டன. சில சமயங்களில் வெற்றி பெறுவது மட்டுமே முக்கியமல்ல, சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான மக்களைச் சந்திப்பதும் அவசியம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

டோரியமாவின் முதல் கதை ‘வொண்டர் ஐலேண்ட்’ (Wonder Island) என்று தலைப்பிடப்பட்டு, ஜம்ப் இதழில் வெளியிடப்பட்டது. வொண்டர் ஐலேண்ட் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய வெற்றி பெறவில்லை. இருந்தும் மனந்தளராமல் டோரியமா ஜப்பானில் மிகவும் பிரபலமான ‘Dr. Slump’ என்ற மங்காவை உருவாக்கி அடுத்த கட்டத்திற்குச் சென்றார். அது ஜப்பானில் மட்டும் 35 லட்சம் பிரதிகள் விற்பனையானது. ஆனால் அது டிராகன் பால் ஜி போல உலகளவில் பிரபலமடையவில்லை. 

Dr. Slump

டிராகன் பால் ஜி முதலில் ‘ஜம்ப்’ இதழில் 1984-ம் ஆண்டு வெளியிடபட்டது. முதலில் அட்வென்சர் (சாகச) பயணக்கதையாகவே வெளியான தொடர், அடுத்தடுத்த அத்தியாயங்களில் தற்காப்புக் கலையை மையமாக வைத்து பரிணாம வளர்ச்சி அடைந்தது. டோரியமா இந்தத் தொடருக்கு 500க்கும் மேற்பட்ட அத்தியாயங்களை உருவாக்கினார். அது 40 பகுதிகளாக உலகம் முழுவதும் 240 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளாக விற்பனையாகின.

பல பெருமைகளைக் கொண்ட டோரியமா, பேட்டிகள் கொடுப்பதை அறவே விரும்பியது கிடையாது. தனிமையை அதிகம் விரும்பியவர். பரபரப்பான பெருநகரங்களிலிருந்து விலகி, சிறிய அமைதியான சிறு நகரங்களில் வசிப்பதையே அவர் விரும்பியிருக்கிறார். தனது வேலைகள் அனைத்தையும் வீட்டிலேயே செய்யும் ‘Work from home’ விரும்பியாகவே இருந்துள்ளார். அவரது மனைவி நாச்சி மிகாமியும் அவரைப் போல மங்கா காமிக்ஸ் துறையைச் சார்ந்தவராகவே இருந்தார். உலகே கொண்டாடிய அவரது படைப்புகள் அனைத்தும் அவரது வீட்டிலே தயாரிக்கப்பட்டுள்ளன.

அகிரா டோரியமாவின் பேனா

14 வயதிலிருந்து 51 வருடங்களாகத் தான் வரைந்த அனைத்து படங்களுக்கும் ஒரே பேனாவைப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். அவரது வீட்டில் இருக்கும் பூனைகள், நாய்கள், பறவைகள் போன்றவை அவரது ‘டிராகன் பால் ஜி’ கதைகளில் பலமுறை தோன்றியுள்ளன.

Beerus கதாபாத்திரம்

உதாரணமாக, அவரது கார்னிஷ் ரெக்ஸ் பூனைதான், நாம் அனைவரும் விரும்பும் பாதி பூனை, பாதி மனிதனாக ‘டிராகன் பால் ஜி’யில் வலம் வரும் பீருஸ் (Beerus) பாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன். அவரது படைப்பில் உருவான ‘விடேல்’ அப்போது உருவான சொற்பமான பெண் சூப்பர் ஹீரோக்களில் குறிப்பிடத்தக்கவர். அன்றைய சூழலிலேயே அதனை நிகழ்த்திக் காட்டியுள்ளார் டோரியமா. 

அவருக்கான இன்ஸபிரேஷன்கள் இருப்பது போல அவரைப் பின்பற்றவும் பெரும் கலைஞர்கள் கூட்டம் இருக்கிறது. இன்று நெட்ப்ளிக்ஸ் திறந்தாலே முன்னர் வந்து நிற்கும் `One Piece’, `Naruto’ போன்ற தொடர்களின் படைப்பாளர்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்.

‘One Piece’ படைப்பாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அனிமே என்பதைச் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமானதாக படைக்க முடியும் என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். உங்களைப் போலப் படைப்புகளைச் செய்ய வேண்டும் என்றே இந்த துறைக்கு வந்தேன்” என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

அகிரா டோரியமா – Dragon Ball Z

இன்று அவர் பிறந்த மண்ணில் அவர் படைத்த கதாபாத்திரங்களின் முன் தீபங்கள் ஏற்றி அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. அதே போல கனடா தொடங்கிப் பல உலக நாடுகளில் இவருக்கான அஞ்சலிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இது அவரது ஓவியத்துக்கு, படைப்பாற்றலுக்குக் கிடைத்த வெற்றி என்றாலும் அந்தப் படைப்பு என்ன பேசுகிறது என்பதைப் பார்த்தால்தான் அது ஏன் உலகத்தரம் பெற்றது என்பதும் நமக்குப் புரியும். அவரது ‘டிராகன் பால் ஜி’ நாயகன் ஓரிடத்தில் சொல்கிறான், “குறைந்த திறன் படைத்த போர்வீரன் கூட, போதிய உழைப்பின் மூலம் பலமான வீரனை மிஞ்ச முடியும்”. அந்த வார்த்தைகளைப் போல இளம் வயதில் தட்டுத்தடுமாறிக் கற்றுக்கொண்ட போர்க்கலைப் பயிற்சியின் மூலம், கைகளிலிருந்து மின்சார சக்தியை வீசும் வல்லமை பெற்ற வானளாவிய வீரனாகிறான் கோகு.

அகிரா டோரியமா

அந்த வகையில் ஓர் ஆசானாக எந்த துறையிலும் முன்னேற நினைக்கும் யாருக்கும் தனது கோகுவின் மூலம் ஒன்றை விட்டுச்சென்றிருக்கிறார் அகிரா டோரியமா. அது தன்னம்பிக்கை என்ற அஸ்திரத்தைத் தவிர வேறொன்றுமில்லை!

RIP SENEI!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.