Happy Teeth: வீட்டிலேயே Teeth Whitening சிகிச்சை செய்யலாமா?

Teeth Whitening

பற்களின் நிறம் வெண்மையாக மாற வேண்டும் என்பதற்காக வொயிட்டனிங் சிகிச்சையைப் (Teeth Whitening Treatment) பலர் செய்து கொள்ள விரும்புகின்றனர். அந்தச் சிகிச்சை தொடர்பான முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி:

Dental Treatment

நமது சருமத்தின் நிறம் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்துதான் பற்களின் நிறம் இருக்கும். பற்களுக்கு மட்டும் 16 முதல் 18 வகையான நிறங்கள் (Shades) இருக்கும். ஆப்பிரிக்க நாட்டினர் பொதுவாக அடர் நிற சருமம் கொண்டவர்கள். அவர்களின் பற்கள் சராசரியைவிட அதிகமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்.

ஐரோப்பான நாட்டினர் வெள்ளை நிறத்தில் இருப்பார்கள். அவர்களின் பற்கள் சற்று பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்தியர்களைப் பொறுத்தவரையில் பளீர் வெள்ளை நிறத்தில் இருக்காது. அதைவிட சற்று குறைவான நிறத்தில் இருக்கும்.

ஒயிட்னிங் சிகிச்சை I Whitening Treatment

சில மருந்துகள் எடுத்துக்கொள்வதால், ஃபுளுரைடு என்ற கனிமம் அதிகம் சேர்வதால் பற்களின் நிறத்தில் குறிப்பிட்ட மாற்றம் நிகழும். ஃபுளுரோசிஸ் (Fluorosis) பிரச்னை போன்ற காரணங்கள் இருந்தால்வொயிட்டனிங் சிகிச்சை எடுக்கலாம். பிரச்னை மிதமாக இருந்தால் வொயிட்டனிங் சிகிச்சை பயனளிக்கும்.

ஆனால், சாதாரண பற்களில் வொயிட்டனிங் செய்யும்போது பற்களின் நிறத்தைவிட சற்று நிறம் மாறுமே தவிர, பளீர் வெள்ளை நிறம் ஏற்படாது. பற்களின் நிறம் அதிக பழுப்பாக இருந்தால் பற்களின மீது செயற்கையாக ஓர் உறைபோல பொருத்தும் ‘வெனீரிங்’ (Veneering) என்ற சிகிச்சை செய்யப்படும்.

Teeth (Representational Image)

பற்களை ப்ளீச் செய்வதுதான் வொயிட்டனிங் சிகிச்சை. அப்படிச் செய்யும்போது பற்களின் மேல் அடுக்கு மிக நுண்ணிய அளவுக்கு அகற்றப்படும். அப்படி அகற்றும்போது உள்ளே இருக்கும் அடுக்கு முன்னதைவிட சற்று பளீர் நிறத்தில் இருப்பதால் பற்கள் வெள்ளையாக மாறியதைப் போன்று தோன்றும். இந்தச் சிகிச்சையை முறையாகச் செய்யவில்லை என்றால் பற்கள் கூசத் தொடங்கிவிடும்.

பல் கூச்சம்

வொயிட்டனிங் சிகிச்சையில் முன்பற்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து ப்ளீச் செய்யப்படும். Whitening சிகிச்சையை முறையாகச் செய்யவில்லை என்றால் முன் பற்கள் கூசத் தொடங்கும். முன்பற்கள் கூசுகிறது என்றால் நாம் மூச்சுவிடும்போதுகூட கூச்சம் ஏற்படும். அப்படியென்றால் வேறு எந்த உணவையும் அவர்களால் எடுத்துக்கொள்ள இயலாமல் போகலாம்.

ஒயிட்னிங் சிகிச்சை அவசியமா?

அதே போல வொயிட்டனிங் சிகிச்சையை மேற்கொள்வதற்குத் தேவையான ப்ளீச் உள்ளிட்ட பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். விலை குறைவு என்பதற்காக தரமில்லாத பொருள்களை வாங்கி சிகிச்சை மேற்கொண்டால் பின்விளைவுகள் ஏற்படும்.

வீட்டிலேயே வொயிட்டனிங்

வீட்டிலேயே வொயிட்டனிங் (Whitening) செய்வதற்கான கிட் மார்கெட்டில் கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி வீட்டிலேயே வொயிட்டனிங் செய்ய முயல்வது சரியல்ல. காரணம், அந்தச் சிகிச்சையை வீட்டிலேயே செய்யும்போது ஏதேனும் பின்விளைவுகள் ஏற்பட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. முறையாக பல் மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொள்ளும்போது ஏதேனும் பிரச்னை என்றால் அவர்களிடம் தொடர் சிகிச்சை பெற்றுகொள்ள முடியும்.

Dr. Suresh Velumani

குறிப்பிட்ட விளக்கு வெளிச்சத்தில் தான் இந்தச் சிகிச்சையைச் செய்ய வேண்டும், குறிப்பிட்ட அளவுதான் ப்ளீச் செய்யும் ரசாயனங்கள் பயன்படுத்த வேண்டும், ப்ளீச் செய்யும்போது ஈறுகளில் அந்த ரசாயனங்கள் படக்கூடாது, அப்படி பட்டால் ஈறுகளில் அழற்சி ஏற்படலாம். இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் இந்தச் சிகிச்சையில் உள்ளன. எனவே, பல் மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெற்று இந்தச் சிகிச்சையை செய்ய வேண்டும்.

பற்களை சுத்தப்படுத்தும் சிகிச்சையை ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை செய்ய அறிவுறுத்துவோம். ஃபாஸ்ட் ஃபுட், இரும்புச்சத்து டானிக், மாதுளை, க்ரீன் டீ உள்ளிட்ட சிலவற்றை உட்கொள்ளும்போது பற்களில் கறை படியலாம். இதுபோன்ற கறைகளை அகற்ற சாதாரணமாக பல் சுத்தப்படும் சிகிச்சை செய்தாலே போதுமானது.

ஆனால் வொயிட்டனிங் சிகிச்சையைப் பொறுத்தவரை, எவ்வளவு குறைவான முறை செய்ய முடியுமோ அவ்வளவு குறைவாகச் செய்யும்படிதான் அறிவுறுத்துவோம். ப்ளீச் செய்யப் பயன்படுத்தும் ரசாயனத்தில் குறிப்பிட்ட ஆசிட் உள்ளது. அதைப் பயன்படுத்த ப்ளீச் செய்ய செய்ய பற்கள் சேதமடைந்து கொண்டே இருக்கும்” என்றார்.

Happy Teeth

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.

பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.