தென்காசி நிலவரம்: திண்ணை பிரச்சாரத்தில் திமுக, நாதக போஸ்டர்கள், கிருஷ்ணசாமி ஆயத்தம்!

தென்காசி: மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறஉள்ள நிலையில் தேர்தலுக்கு கட்சிகள்ஆயத்தமாகி வருகின்றன. மீண்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், சின்னம்இல்லாமல் போஸ்டர்களை ஒட்டிஅக்கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சி.ச.மதிவாணன் போட்டியிடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தென்காசி தொகுதியில் போட்டியிட்டு 59,446 வாக்குகள் பெற்ற மதிவாணன், மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் சின்னம் இல்லாமல் போஸ்டர்கள் ஒட்டி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து வேட்பாளர் மதிவாணன் கூறும்போது, “முதல்கட்டமாக சின்னம் இல்லாமல் போஸ்டர்கள் ஒட்டி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம். சின்னம் கிடைத்ததும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த உள்ளோம்” என்றார்.

தென்காசி தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற திமுக, இந்த முறையும் இத்தொகுதியில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. தற்போதைய எம்பி தனுஷ் எம்.குமார், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் எம்எல்ஏ முத்துசெல்வி, மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தென்காசி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பாவூர்சத்திரத்தில் சின்னம் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி
பிரச்சார போஸ்டர்கள்.

தற்போதைய எம்பி மீதான அதிருப்தி, தென்காசி மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல்கள் போன்றவை, திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் தென்காசி தொகுதியை கேட்டு வருகின்றன. எனவே, திமுக கூட்டணியில் தென்காசி தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தென்காசி தொகுதியில் மீண்டும் திமுக போட்டியிட்டால் தற்போதைய எம்பி தனுஷ்எம்.குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா அல்லது வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் திமுகவும் முன்கூட்டியே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. ‘இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற முழக்கத்துடன் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் திமுகவினர் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கிருஷ்ணசாமி மும்முரம்

கடந்த 1998-ம் ஆண்டு முதல் தென்காசி தொகுதியில், தொடர்ந்து, 6 முறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. தென்காசி தொகுதியை குறிவைத்து கடந்த ஓராண்டுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள், கூட்டங்களை நடத்தியுள்ள இவர், சமீபத்தில் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது தனி சின்னத்தில் களம்காண்பாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, முன்னாள் எம்பி வசந்தி முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா உள்ளிட்டோர் தென்காசி தொகுதியில் போட்டியிட ஆர்வம் கட்டினர்.

ஆனால், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி ஒதுக்கப்படும் என்று தெரியவந்துள்ளதால், அதிமுகவினர் சோர்வடைந்துள்ளனர். அதிமுக சின்னத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டால் அதிமுகவினர் முழுவீச்சில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்காசி தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள பாஜக,கடந்த 1999-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்ததொகுதியில் நேரடியாக போட்டியிடவில்லை. வடகாசியில் (வாரணாசி) பிரதமர்மோடி எம்பியாக இருக்க, தென்காசியை கைப்பற்ற பாஜகவும் தீவிரம் காட்டுகிறது.

தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக டாக்டர் கிருஷ்ணசாமி பேசி வந்த நிலையில், தென்காசி தொகுதி கிடைக்காது என்று உறுதியாக தெரிந்ததால், அவர் அதிமுக கூட்டணிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

பாஜக சார்பில் அக்கட்சியின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிரிவின் மாநிலத் தலைவர் ஆனந்தன், மாநில செயலாளர் பொன்.பாலகணபதி, தென்காசி தொகுதி பொறுப்பாளர் மகாராஜன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் சொல்லப்பட்டாலும், ஆனந்தனுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதிபடக் கூறுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கூட்டணிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.