''கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடி எம்எஸ்எம்இ-க்கள் மூடப்பட்டுள்ளன'' – கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் 2.5 கோடி குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சி காலத்தில் 1.3 கோடி சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அதிகரித்திருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள எம்எஸ்எம்இ உண்மைகளும் கேள்விகளும் என்று ஒரு நீண்ட பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் 2.5 கோடி குறுசிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சி காலத்தில் அவை 1.3 கோடி அதிகரித்திருந்தன. இது கடந்த 2020 ஆண்டில் எம்எஸ்எம்இ-க்களை வகைப்படுத்துவதற்கான மறுவரையரை செய்யப்பட்ட அளவுகள்களை உள்ளடக்கிய எண்ணிக்கை.

பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் திட்டமிடப்படாத லாக்டவுண் போன்றவற்றின் மூலம் பொருளாதரத்தின் மீது மோடி அரசு தாக்குதல் தொடுத்ததல்லவா? கடந்த 10 ஆண்டுகளில் குறுசிறு நடுத்தரத் தொழில்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை ஏன் உயரவே இல்லை? கடந்த 2013 – 14 (யுபிஏ ஆட்சி)-ல் எம்எஸ்எம்இ-ல் 11.14 கோடி பேர் வேலை பார்த்தனர். அதேநேரத்தில் 2022 – 23 (மோடி அரசு) ஆண்டில் 11.1 கோடி பேரே வேலை பார்க்கின்றனர்.

கடந்த 2020, மே 12-ல் பிரதமர் மோடி குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டத்தை அறிவித்தார். அது என்னவானது? அந்த ரூ.20,000 கோடியில் பாதுகாப்பற்ற கடனுக்கான (ஜுன் 2020 – மார்.2022) கடன் உறுதி திட்டத்துக்காக ரூ.239.19 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டது உண்மை அல்லவா? அதவாது, உறுதியளிக்கப்பட்ட தொகையில் 1.2 சதவீதத்துக்கும் குறைவான தொகையே மோடி அரசால் கடன் உறுதி நிதிக்கும் வங்கிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எமர்ஜென்சி கிரெடிட் லைன் கியாரண்டி திட்டத்தின் (ECLGS)கீழ் உள்ள நிதியில் 30 சதவீதம், அதாவது விளம்பரப்படுத்தப்பட்ட தொகையில் ஒரு பெரிய அளவிலான தொகை பயன்படுத்தப்படாமல் உள்ளது இல்லையா?

தற்சார்பு இந்தியா (Self Reliant India) நிதி மூலம் எம்எஸ்எம்இ-களுக்கான ரூ.50,000 கோடி இக்விட்டி இன்ஃபியூசனில் ரூ.3,002.57 கோடி மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதானே? மீதி நிதி என்னவானது?

எம்எஸ்எம்இகளுக்கு பயனளிக்கும் பிஎம் முத்ரா திட்டம் குறித்து மோடி அரசு பொய்யுரைக்கிறது. பிஎம் முத்ரா திட்டத்தின் படி, கடன்களுக்கான சராசரி அளவு ரூ.10 லட்சமாக இருந்தாலும், அரசின் உண்மையான மதிப்பீட்டின் படி, அது வெறும் ரூ.52,000 மட்டும் தான் என்பது உண்மைதானே?

எம்எஸ்எம்இ-களில் பணிபுரியும் கோடிக்காணக்கானவர்களின் கனவுகளை விருப்பங்களை அழித்ததற்கு மோடி அரசே காரணம். அவர்கள் மிகப்பெரிய நிறுவனங்களுக்கே நிதியளிக்கிறார்கள்.

மோடினோமிக்ஸ் காரணமாக எம்எஸ்எம்இ இந்தியாவுக்கான சாத்தியமான வளர்ச்சி இயந்திரம் சிதைந்து நிற்கிறது. எம்எஸ்எம்இ-க்களுக்கு நியாயமான உத்தரவாதம் அளிக்கும் காங்கிரஸ் ஆட்சி தான் வளர்ச்சி இயந்திரம் மீண்டும் உயிர் பெற செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் தேசத்துக்கு வளத்தையும் உருவாக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி அறிக்கைகளின் படி, ஒரு கோடிக்கு மிகாத முதலீடும், ரூ.5 கோடிக்கு மிகாத வர்த்தகமும் உள்ள தொழில்களைக் கொண்டது குறு நிறுவனங்கள். ரூ. 10 கோடிக்குள் மூதலீடும், ரூ.50 கோடிக்கு மிகாத வர்த்தகமும் கொண்டவை சிறு நிறுவனங்கள். ரூ.50 கோடிக்கும் அதிகம் இல்லாத முதலீடும், ரூ.200 கோடிக்கு மிகாத வர்த்தகமும் கொண்டவை நடுத்தர நிறுவனங்கள் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.