டெஸ்ட் போட்டி விளையாடினால் ரூ. 45 லட்சம் சம்பளம்! பிசிசிஐ அதிரடி உத்தரவு!

India vs England: தரம்சாலாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆடவர் டெஸ்ட் அணிக்கு ஊக்கத்தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை வீரர்களை ஊக்கப்படுத்துவதையும், டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தை தூண்டுவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துள்ளார்.  இதற்கான முழு விளக்கப்படத்தையும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த புதிய விதிகளின் படி, ஒரு ஆண்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில், விளையாடும் XIல் இடம்பிடித்த வீரர்களின் போட்டி கட்டணம் இருமடங்காகப் கொடுக்கப்படும். எனவே, பிசிசிஐ மொத்தமாக இந்த திட்டத்திற்கு ரூ. 40 கோடி ஒதுக்கியுள்ளது. “நமது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்’ தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 2022-23 சீசனில் இருந்து ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்’ தொடங்கப்படும். டெஸ்ட் போட்டிகளுக்கான தற்போதைய மேட்ச் கட்டணத்தின் மேல் கூடுதல் வெகுமதி கட்டமைப்பாக செயல்படும், இது ரூ. 15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று ஜெய் ஷா பதிவிட்டுள்ளார்.  

I am pleased to announce the initiation of the ‘Test Cricket Incentive Scheme’ for Senior Men, a step aimed at providing financial growth and stability to our esteemed athletes. Commencing from the 2022-23 season, the ‘Test Cricket Incentive Scheme’ will serve as an additional… pic.twitter.com/Rf86sAnmuk

— Jay Shah (@JayShah) March 9, 2024

பிசிசிஐயின் இந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலருக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வத்தை இந்த திட்டம் அதிகப்படுத்தும்.  டெஸ்ட் போட்டிகளை வீரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகள் பெரும் புகழ் பெற்று வரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்த அறிவிப்பு ஒரு முக்கியமான நேரத்தில் வெளி வந்துள்ளது. சமீபத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இரு இளம் வீரர்களும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாததால் தங்களது மத்திய ஒப்பந்தங்களை இழந்தனர். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த புதிய திட்டம் எவ்வாறு செயல்படும்? 

ஒரு சீசனில் குறைந்தது ஒன்பது டெஸ்ட் போட்டிகள் என்று வைத்துக் கொண்டால், 50 சதவீதத்திற்கும் குறைவாகவோ அல்லது நான்கு போட்டிகளுக்கு குறைவாகவோ விளையாடும் வீரர்களுக்கு இதில் எந்த தொகையும் வழங்கப்படாது.  ஐந்து முதல் ஆறு டெஸ்டில் (50 சதவீதத்திற்கு மேல்) விளையாடும் வீரர்கள் விளையாடும் 11ல் இடம் பெற்றால் ஒரு போட்டிக்கு ரூ. 30 லட்சம் மற்றும் விளையாடும் 11ல் இடம் பெறாவிட்டால் ஒரு போட்டிக்கு ரூ. 15 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.  ஏழு போட்டிகளுக்கு மேல் (75 சதவீதத்திற்கு மேல்) போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு விளையாடும் 11ல் சேர்க்கப்பட்டால் ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத்தொகையும், விளையாடும் 11ல் இடம் பெறாவிட்டால் ஒரு போட்டிக்கு ரூ.22 லட்சம் வழங்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.