புவனேஸ்வர், புரிக்கு மல்லுக்கட்டும் பாஜக – பிஜேடி: தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்

சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜகவும் பிஜேடி.யும் கூட்டணி அமைக்க முடிவு செய்தன. எனினும் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரம் புனித நகரமான புரி ஆகிய இரண்டிலும் பாஜக, பிஜேடி ஆகிய இரு கட்சிகளும் போட்டியிட விரும்புகின்றன. மேலும், ஒடிசா மாநில பாஜக இக்கூட்டணியை அதிகம் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சம்மல் கூறுகையில், “ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள் அனைத்திலும் பாஜக தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது. டெல்லியில் பாஜக – பிஜேடி இடையிலான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

ஒடிசாவில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி பாஜக முக்கிய எதிர்க் கட்சியாக வளர்ந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிஜேடியின் முக்கியத் தலைவர்கள் சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

ஏற்கெனவே, பல தலைவர்கள் பிஜேடியை விட்டு விலகி விட்டனர். இவர்களில் 10 முன்னாள் அமைச்சர்களும், 5 எம்எல்ஏக்களும் அடங்குவர். பிஜேடியில் மீண்டும் சீட் கிடைக்காது என அஞ்சியவர்களுக்கு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வாய்ப்பளிக்க தயாரானது.

ஐந்தாவது முறையாக தொடரும் பிஜேடி ஆட்சிக்கு எதிரான சூழலும் பெரிதாக இல்லை. எனினும், கடந்த 2017-ல் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பாஜகவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றி கிடைத்தது. பாஜகவுக்கு சாதகமான இந்த சூழலை மாற்ற அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் நிலைக்கு பிஜேடி தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு அச்சாரமாக 2019 மாநிலங்களவைத் தேர்தலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிஜேடி ஆதரவுடன் எம்.பி.யானார். எனவே, இந்தக் கூட்டணி முயற்சிக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடக்கமாக இருந்துள்ளார். பிஜேடி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் முக்கிய பங்காற்றினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.