INDvENG: 'BazBall பூச்சாண்டியை தோலுரித்த இந்திய அணி!' – ரோஹித் & கோ சாதித்தது எப்படி?

இளம் வீரர்களின் முன்னுரையும், இந்திய ஸ்பின்னர்களின் எழுச்சி உரையும் BazBall-ன் முடிவுரையும்தான் நடந்து முடிந்திருக்கும் இந்தியா – இங்கிலாந்து தொடரின் ஒட்டுமொத்த கதையாடலாக இருந்தது.

India

கோலி, ஷமி போன்ற சீனியர் வீரர்கள் இன்றி இளம்படையோடு களமிறங்கும் கவலை ஒருபுறம் என்றால் முழு பலத்தோடு மோத வரும் எதிரியும் முட்டி மோதிப் பார்க்க தயங்காத அவர்களது அட்டாக்கிங் BazBall அணுகுமுறையும் மறுபுறம். விளிம்பில் தான் வெற்றி பறிபோனது என்றாலும் ஹைதராபாத்தில் கிடைத்த தோல்வி சற்றே பயங்காட்டியே இந்தியாவை தொடருக்குள் வரவேற்றது. போதாக்குறைக்கு இடையிலேயே கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் என பலரது காயங்களும் பின்னடைவாக மாறின. `Silver Lining’ என்பது போல் தனது பெஞ்சின் பலத்தை பரிசோதிக்கும் வாய்ப்பாக இதனைப் பார்த்த இந்தியா ஏமாற்றத்தை எதிர்கொள்ளவில்லை. இங்கிலாந்தோ ஆரம்பத்தில் அச்சமின்றி அக்னிச் சிறகுகளோடுதான் பயணித்தது. ஆனால் அந்த வெப்பத்தில் அவர்களது சிறகே கருகியது தான் வேதனை.

Yashasvi Jaiswal

எந்தப் போட்டியிலும் ஆட்டநாயகன் விருதைப் பெறவில்லை என்றாலும் இறுதியில் பெற்ற விருது ஒருவேளை கிடைக்காமலே கூடப் போய் இருந்தாலும்கூட ஜெய்ல்வால்தான் தொடரின் நாயகன். 712 ரன்களை அநாயாசமாக 89 ஆவரேஜில் அடித்திருந்தார். தொடரில் அடிக்கப்பட்ட 103 சிக்ஸர்களில் 72 இந்தியாவால் அடிக்கப்பட்டிருக்க, அதில் 26 சிக்ஸர்கள் ஜெய்ஸ்வாலால் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இந்தியா தான் ஜெய்ஸ்வாலை முன் நிறுத்தி Bazzball ஆடியிருந்தது. ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் முதல் இன்னிங்ஸில் இந்தியா மூன்று இலக்கத்தில் (100+) லீட் எடுத்திருந்தது. இது பௌலர்களின் ஆதிக்கத்தின் வெளிப்பாடே என்றாலும் ஒவ்வொரு கட்டத்திலும் அணிக்கான கிக் ஸ்டார்ட் ஜெய்ஸ்வாலின் பேட்டிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டது என்பதே உண்மை.

தொடரில் அதிக ரன்களை அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஜெய்ஸ்வால் தவிர்த்து இடம் பெற்றிருந்த கில் மற்றும் ரோஹித் இருவரது ஆட்டமுமே சமயத்தில் அணிக்கு பெரியளவில் கைகொடுத்தது. தனது ரிதத்தைக் கைப்பற்றி கில் கம்பேக் கொடுக்க, தான் சதமடித்த போட்டிகளில் இந்தியா தோற்றதே இல்லை என்ற சாதனையை இத்தொடரிலும் இரு போட்டிகளில் ரோஹித் நிரூபித்திருந்தார். கேப்டனாகவோ ரோஹித்தின் அப்டேட்டட் வெர்ஷனை இத்தொடர் பார்த்தது.

Sarfaraz

வேர்கள் வலுவிழந்த சமயத்தில் விழுதுகள் மரத்தை தாங்கிப் பிடிக்கும். அது இத்தொடரிலும் ஆங்காங்கே நடந்தேறியது. அறிமுக வீரர்களான சர்ஃப்ராஸ் கான், ஜுரேல் இந்தியாவுக்கு தனது அடுத்த தலைமுறைக்கான வீரர்களைக் கண்டறிந்து விட்ட நம்பிக்கையைக் கொண்டு வந்திருந்தனர். ஜெய்ஸ்வால் மட்டுமல்ல இந்த இருவரும்கூட போட்டியின் போக்கிற்கு ஏற்ப தங்களது ஆட்டத்தின் பாணியை ட்யூன் செய்வதில் வல்லவர்கள். சொற்ப போட்டிகளிலேயே இப்பக்குவம் கிடைப்பது அத்தனை சுலபமல்ல.

ராஞ்சி டெஸ்டில் குல்தீப்புடனான ஜுரேலின் அந்த 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் காலத்திற்கும் நின்று பேசக்கூடியது. பட்டிதர் மட்டுமே அறிமுக வீரர்களில் சோபிக்காமல் ஏமாற்ற, ஆகாஷ் தீப் மற்றும் படிக்கல் இருவருமே ஓரளவு சிறப்பாகவே பங்காற்றியிருந்தனர்.

முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்குக் காரணமாக பேட்ஸ்மேன்களே சுட்டிக் காட்டப்பட்டிருந்தனர். ஆனால் அதன்பின் தேக்கமே இல்லாத தேராக இந்திய பேட்டிங் முன்னேற அதனை வடம் பிடித்து எல்லோருமே இழுத்திருந்தனர். அதனோடு ஒத்திசைவு செய்து வெற்றித்தடத்தோடு இந்திய பௌலிங்கும் பயணித்ததுதான் சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்.

1/0 என பூஜ்யத்தில் தொடங்கிய இந்தியாவின் சாபம் நீக்கிய அந்த பும்ராவின் மேஜிக்கல் ஸ்பெல்தான் இத்தொடரின் திருப்புமுனை. ரிவர்ஸ் ஸ்விங் சாளரம் வழியே வந்து மொத்த இங்கிலாந்திற்கான வாசலையும் அடைத்து கைது செய்தது. பும்ராவின் இன்ஸ்விங்கிக் யார்க்கர் போப்பின் ஸ்டம்பை சிதறச் செய்த அந்தத் தருணம் உண்டாக்கிய உத்வேகமும் எழுச்சியும் தான் ஒட்டுமொத்த தொடரிலும் ஒவ்வொரு இந்திய பௌலரிடமும் பட்டு எதிரொளித்துக் கொண்டிருந்தது. தொடரில் டாப் 5-ல் இடம் பெற்றிருந்த ஒரே வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மட்டுமே. அந்த ஐவரில் குறைவான ஆவரேஜும் அவருடையதே (16.89). மூன்றாவது டெஸ்டில் அஷ்வின் ஆட முடியாத சூழல் உருவான போது சிராஜ் வீசிய அந்த ஒரு ஸ்பெல் போட்டியை மொத்தமாக இந்தியாவின் பக்கம் மாற்றி எழுதியது.

Bumrah to Pope

`Bowlers Win You Tournaments’ – கிரிக்கெட்டின் எழுதப்படாத இந்த நெடுங்கதை இத்தொடரிலும் பொய்க்கவில்லை. எந்த அளவு இந்திய பௌலர்களின் கை ஓங்கி இருந்தது என்றால் ஆடிய ஐந்து போட்டிகளின் இரு இன்னிங்ஸிலும் எல்லா இங்கிலாந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். அதாவது 100 விக்கெட்டுகளை இத்தொடரில் இந்திய பௌலர்கள் வீழ்த்தினர். 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 விக்கெட்டுகள் சாதனையை இத்தொடரில் நிகழ்த்திய அஷ்வினின் ஒவ்வொரு பந்தும் இங்கிலாந்தை அல்லல்படுத்தத் தவறவில்லை. முக்கிய கட்டத்தில் அடிக்கப்பட்ட சதம் மூலமாக மட்டுமல்ல மொத்தமாக எடுத்த 19 விக்கெட்டுகள் மூலமாகவும் ஜடேஜா ஒவ்வொரு கட்டத்திலும் அணியை முன்னிருக்கச் செய்தார். டெஸ்ட் பௌலராக குல்தீப்பின் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் இத்தொடர் அடையாளம் காட்டி மலைக்க வைத்தது. இந்தியக் கிரிக்கெட்டை ஆட்டிப் படைத்த Spin Quartet-ன் சாயல்களை இவர்களும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தனர்.

இத்தொடரில் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம் பிட்ச்கள். வழக்கமாக ரேங்க் டர்னர்களால் இந்தியா வெற்றியைத் தனதாக்கும் என்ற குற்றச்சாட்டு காற்றில் உலவி உண்மையான வெற்றிகளுக்குக்கூட விசாரணை கமிஷன் அமைக்கும். ஆனால் இத்தொடரில் முதல் போட்டியைத் தவிர மற்ற அனைத்துமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் இருந்தன, “முடிந்தால் வெற்றி கொள்” என இந்திய பௌலர்களுக்கும் சவால் விடுத்தன. அதனையும் அவர்கள் திறனால் கடந்து சாதித்ததுதான் தனிச்சிறப்பானது. அதேசமயம் இந்தப் பிட்சில்கூட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் சாதிக்க முடியவில்லை என்பதுதான் கொடுமை.

Joe Root

அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டாப் 5-ல் இடம் பெற்றிருந்த க்ராவ்லி தவிர்த்து மற்ற ஒட்டுமொத்த இங்கிலாந்து பேட்டிங் படையுமே தோற்றிருந்தது. டி20-ன் சாயம் பூசப்பட்ட Bazball அவர்களது டிஃபென்ஸ் மெக்கானிஸத்தையே தேய்வடையச் செய்து அரணற்ற கோட்டையாக ஆக்கியிருந்தது. ஸ்வீப்களாலும் ரிவர்ஸ் ஸ்வீப்களும் மட்டுமே ஸ்பின் பௌலிங்கை எதிர்கொண்டுவிட முடியும் என்ற அவர்களது தவறான கருத்து அவர்களுக்கு எங்கேயும் கைகொடுக்கவில்லை.

போப், ரூட், டக்கெட் என ஆகியோர்களிடம் இருந்து வெளிச்சப்புள்ளிகளாக ஒன்றிரண்டு இன்னிங்ஸ்கள் அவ்வப்போது தென்பட்டாலும் அது எதுவுமே கலங்கரை விளக்கமாகி இங்கிலாந்தைக் கரைசேர்ப்பதாக அமையவில்லை.

Ben Stokes

ரூட் தனது இயல்பு ஆட்டத்தை ஒளித்து வைத்து அஸ்திவாரமே இல்லாத Bazball-க்குள் தன்னைத் தொலைத்து இருந்தார். அந்த 122* ரன்கள் இன்னிங்ஸ் மட்டுமே முந்தைய தொடரின் சென்னை இன்னிங்ஸோடு தன்னைத் தானே பொருத்திப் பார்த்து ஆறுதல்பட்டுக் கொண்டது. கடைசிப் போட்டியில் 257 ரன்கள் அணி பின்தங்கி இருக்க, இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரில் டக்கெட் ஆடிய விதம் எல்லாம் கன்ட்ரோல் என்றால் என்ன என்று கேட்டதோடு ஆட்ட நுணுக்கங்கள் என்பதையே அறியாதது போலவே தோற்றம் காட்டின.

இங்கிலாந்துக்கு தொடரின் மிகப்பெரிய இரு ஏமாற்றங்கள் பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ். தொடரின் எக்ஸ் ஃபேக்டராக ஸ்டோக்ஸ் இருப்பார் என முன்னதாக கருதப்பட, பேட்ஸ்மேனாக மட்டுமே தரப்பட்டிருந்த பொறுப்பைக் கூட அவர் சிறப்பாகச் செய்யவில்லை. 19 என்னும் படுமோசமான ஆவரேஜோடு தொடரை முடித்திருக்கிறார். இத்தொடரில் பத்தில் ஏழுமுறை அவர் களமிறங்கிய கட்டத்தில் அணியின் ஸ்கோர் 140-க்குக் கீழேயே இருந்தது. அது தந்த நெருக்கடியும் ஸ்பின்னை எதிர்கொள்வதில் இருந்த பலவீனமும் அவரை மொத்தமாக வீழ்த்தி விட்டன. ஒரே ஒரு இன்னிங்ஸில்தான் 50 ரன்களையே கடந்தார், ஐந்து முறை ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார், பத்தில் ஏழு முறை ஸ்பின்னர்களால் ஆட்டமிழந்தார் என சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே ஸ்டோக்ஸுக்கும் நிகழவில்லை அவரால் அணிக்கும் நிகழவில்லை. கேப்டன்ஷியில்கூட ரோஹித் அளவு ஸ்டோக்ஸாஸ் ஸ்கோர் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

ஜேம்ஸ் ஆண்டர்சன்

பேட்டிங்தான் பரிதாபகரமானது என்றால் அவர்களது வேகப்பந்துவீச்சு அதற்கும் கீழே இருந்தது. 700 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்திய ஆண்டர்சன்கூட அவரது முழுத்திறனை வெளிப்படுத்தி அணியை மீட்கவில்லை. டாம் ஹார்ட்லி மற்றும் சொயிப் பசீர் இருவரும் மட்டுமே அவர்களுக்கான ஆறுதல்கள். மொத்தத்தில் எச்சரிக்கை மணி பலமாக ஒலிக்க சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய பல விஷயங்களும் இங்கிலாந்தின் பக்கம். ஸ்டோக்ஸ் கூறி உள்ளதைப் பார்த்தால் எப்பாடமும் கற்காமல் மாயையில் இருந்து விடுபடாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ள தனது தத்துவத்தை இன்னமும் தூக்கிச் சுமக்கும் எண்ணத்தோடே இங்கிலாந்து விடை பெற்றிருப்பதாகவே தெரிகிறது.

India

மொத்தத்தில் இந்தியா Bazball-க்கு தான் எழுப்பிய கல்லறை மீது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் என்னும் சிம்மாசனத்தை இட்டு அமர்ந்து இருக்கிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.