After returning to the stolen house, the drug addict was beaten and handed over to the police | திருடிய வீட்டிற்கே திரும்ப வந்து சிக்கிய போதை ஆசாமி தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

வில்லியனுார்:குடிபோதையில் திருடிய வீட்டிற்கே மீண்டும் வந்த திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் பள்ளிக்கூட விதியை சேர்ந்த லோகநாதன்,44; இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பிற்பகல் இவரது வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் செல்வதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தார்.

லோகநாதன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உடைந்திருந்தது. உள்ளே பீரோவில் வைத்திருந்த 2 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போயிருந்தது.

இந்நிலையில், லோகநாதன் வீட்டில் இருந்து சென்ற நபர் மீண்டும் அந்த வழியே வந்ததை கண்ட அப்பகுதி மக்கள், அவரை மடக்கி பிடித்து வில்லியனுார் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டை சேர்ந்த அறிவழகன்,32; என்பதும் கோட்டக்குப்பம், ஆரோவில் மற்றும் நெல்லிக்குப்பம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது. அதில் ஒரு திருட்டு வழக்கில் விழுப்புரம் போலீஸ் ஸ்டேஷனில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டு வரும் இவர், ஸ்டேஷனில் கையெழுத்திட செல்லும்போது ஆங்காங்கே திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் தொண்டமாநத்தம் கிராமத்தில் பூட்டியிருந்த லோகநாதன் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்று, அந்த பணத்தில் அதே பகுதியில் உள்ள சாராயக்கடையில் குடித்துள்ளார். போதை தலைக்கேறியதும் எங்கு செல்லுவது என தெரியாமல் சிறிது நேரத்தில் மீண்டும் திருடிய வீட்டிற்கே சென்றபோது சிக்கிக் கொண்டது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, அறிவழகனை கைது செய்தனர். மேலும், அவர் திருடிய நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அறிவழகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.