ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: மகளிருக்காக காங்கிரஸ் 5 வாக்குறுதிகள்

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய நியாய யாத்திரை’யின் ஒரு பகுதியாக பெண்கள் சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு வீடியோ மூலம் இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அந்த 5 வாக்குறுதிகள்:

  1. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  2. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
  3. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.
  4. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்படும்.
  5. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான சாவித்ரிபாய் பூலே தங்கும் விடுதிகள் கட்டப்படும்.

முன்னதாக, காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இளைஞர்களை மையப்படுத்தி நிறைவேற்றப்படவுள்ள 5 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன. அதன் விவரம்:

> நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. மத்திய அரசு துறைகளில் 30 லட்சம் காலி இடங்கள் உள்ளன. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அவை அனைத்தும் நிரப்பப்படும்.

> வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும். பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

தனியார் மற்றும் பொதுத்துறை தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை கட்டாயம் ஓராண்டு பயிற்சியில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பயிற்சி ஊதியம் வழங்கப்படும். இதன்மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி, ஊதியம் கிடைக்கும்.

> அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ள உணவு விநியோகிப்பாளர்களின் வேலைவாய்ப்பை முறைப்படுத்தி, சமூக பாதுகாப்பை கொடுப்போம்.

> ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி உள்ளது. அதை மக்களவை தொகுதிக்கு ரூ.10 கோடி வீதம் ஒதுக்குவோம். இளைஞர் தொழில் தொடங்க கடன் வழங்கப்படும். இந்த 5 வாக்குறுதிகளையும் காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும் என்று தெரிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.