விராட் கோலி இல்லாமல் 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்லாது – பாகிஸ்தான் முன்னாள் வீரர்

விராட் கோலி இல்லாமல் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையில் பங்கேற்ப இருப்பதாக வெளியான தகவலுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான் பதில் அளித்துள்ளார். அதாவது, ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து 20 ஓவர் உலக கோப்பையை நடத்துகின்றன. இந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற வாய்ப்பில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விராட் கோலி இடம்பெறுவது இப்போது வரை சந்தேகத்தில் இருப்பதாகவே அனைத்து தரப்பில் இருந்து தகவல்களும் தெரிவிக்கின்றன.

விராட் கோலி 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு இந்திய அணி விளையாடிய எந்த 20 ஓவர் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால் அவரை எப்படி நேரடியாக 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் சேர்ப்பது என்பதை பிசிசிஐ ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் பேசும்போது, விராட் கோலி இல்லாமல் இந்திய அணியை சிறப்பாக உருவாக்க முடியாது என தெரிவித்துள்ளார். ” ஏனென்றால் அவர் ஒரு பெரிய பேட்ஸ்மேன். கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் என்ன செய்தார் என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். உலகக் கோப்பையில் விராட் கோலி தனி ஒருவனாக இந்தியாவை வெற்றி பாதைகளுக்கு அழைத்துச் சென்றார்.

விராட் கோலி அப்போது அற்புதமாக பேட் செய்யாமல் இருந்திருந்தால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான குரூப்-ஸ்டேஜ் போட்டிகள் உட்பட, இந்தியா 3-4 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும். ஆரம்பகட்ட விக்கெட்டுகளை இழந்து இந்திய தவித்துக் கொண்டிருந்தபோதெல்லாம் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியவர் விராட் கோலி. அவர் மீது விமர்சனம் வைப்பவர்கள் எல்லோரும் கிரிக்கெட்டைப் பற்றி தெரியாதவர்கள், அல்லது வீதிகளில் விளையாடும் கிரிக்கெட்டை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்” என கடுமையாக பேசியுள்ளார் முகமது இர்பான்.

முகமது இர்பான் தொடர்ந்து பேசும்போது, “டி20 வடிவத்தில் ஸ்ட்ரைக் ரேட் முக்கியமானது. நீங்கள் அதிக பந்துகளை விளையாடினால், உங்கள் அணிக்கு அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது. 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் அடுத்த பேட்ஸ்மேனுக்கு அழுத்தம் குறையும். பந்து பந்துக்கு 10 ரன்கள் எடுத்தால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் அதிகரிக்கும். கோலி இதுவரை 117 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 50க்கு மேல் சராசரி மற்றும் 138 ஸ்ட்ரைக் ரேட்டில் 2922 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம் மற்றும் 37 அரை சதங்கள் அடித்திருக்கும் அவரை அணியில் இருந்து நீக்குவது குறித்து யோசிப்பது என்பது முட்டாள்தனமான முடிவாகவே இருக்கும்” என்று கடுமையாக பேசியுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.