“இது வரலாற்று சிறப்புமிக்க நாள்” – அமித் ஷா @ ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அறிக்கை

புதுடெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த உயர்மட்டக் குழுவின் அறிக்கை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட இந்த நாள், நமது நாட்டின் ஜனநாயக அமைப்புக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நமது நாட்டின் ஜனநாயக அமைப்புக்கு இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையில் மோடி அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று (வியாழக்கிழமை) வழங்கியது” என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி அமைக்கப்பட்டது. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதிக்குழு தலைவர் என்.கே. சிங், முன்னாள் மக்களவை பொதுச் செயலாளர் குபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை பெற்றது. 191 நாட்கள் இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று வழங்கியது. இதற்காக, ராம்நாத் கோவிந்த தலைமையிலான குழுவினர், குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

முன்னதாக, இந்தக் குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சேர்க்கப்பட்டார். எனினும், அவர் இந்தக் குழுவில் உறுப்பினராக தொடர விரும்பவில்லை என தெரிவித்துவிட்டு வெளியேறிவிட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆலோசிப்பதற்காக அல்ல என்றும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்த 22-வது சட்ட ஆணையம், 2029-ம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம் என தனது பரிந்துரையை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் அளித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.