கேகாலை, வேரகல கனிஷ்ட வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்

கேகாலை, வேரகல கனிஷ்ட வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான கௌரவ சுசில் பிரேமஜயந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்க, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகர் ஆஷு மாரசிங்க, பிரதமரின் மேலதிக செயலாளரும் பாராளுமன்ற சபை முதல்வரின் செயலாளருமான ஹர்ஷ விஜேவர்தன, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல மற்றும் இலங்கை வங்கியின் பாராளுமன்றக் கிளையின் முகாமையாளர் இசுரி கீகனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகையில், இணைப் பாடவிதான செயற்பாடாக மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவை பாடசாலைக் கட்டமைப்பில் பரவலாக்குவதன் மூலம் பாராளுமன்ற முறைமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான அறிவை மாணவர்கள் மத்தியில் விருத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்க, மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவின் மூலம் மாணவர் தலைமுறையினர் பாராளுமன்றத்தின் பொறுப்புக்கள் பற்றிய அறிவை விருத்தி செய்துகொள்வதற்கும் பொதுமக்கள் பிரதிநிதிகளாக செயற்படுவதற்கான பயிற்சியை பெறுவதற்கும் சந்தர்ப்பம் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கை பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன இங்கு குறிப்பிடுகையில், ஜனநாயகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு மாணவர் பாராளுமன்ற எண்ணக்கரு மிகவும் முக்கியமானதாகும் எனத் தெரிவித்தார்.

வேரகல கனிஷ்ட வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் ஏனைய அங்கத்தவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அத்துடன், வருகை தந்த அதிதிகளினால் மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அத்துடன், இலங்கை வங்கியின் பாராளுமன்றக் கிளையினால் பாடசாலையின் 37 மாணவர்களுக்கு நிதி வைப்பிலிடப்பட்ட 37 வங்கிக் கணக்குகள் திறந்து அன்பளிப்பு செய்யப்பட்டதுடன், பாடசாலைக்கு ஒலிபெருக்கியொன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதன்போது இலங்கை பாராளுமன்றத்தினால் வேரகல கனிஷ்ட வித்தியாலயத்துக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், மாணவர் பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான பங்களிப்புக்காக இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்துக்கும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும், அதிதிகளுக்கும் பாடசாலையினால் நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்கள அதிகாரிகள், கல்விப் பணிப்பாளர் கீதானி சுபசிங்க, வேரகல கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம். சாந்தணி திலகரத்ன, மாணவர் பாராளுமன்றத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் சுரணி மஹேஷிகா விக்ரமசிங்க உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.