BJP candidates for 20 constituencies…announcement!; A chance for King Yaduveer who is not in the party | 20 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள்…அறிவிப்பு!; கட்சியில் இல்லாத மன்னர் யதுவீருக்கு வாய்ப்பு

பெங்களூரு : லோக்சபா தேர்தலுக்காக, கர்நாடகாவின் 20 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். கட்சியில் இல்லாத, மைசூரு உடையார் மன்னர் வம்சத்தின் யதுவீர்; முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதாப் சிம்ஹா, நளின்குமார் கட்டீல் உட்பட தற்போதைய ஒன்பது எம்.பி.,க்களுக்கு, ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் சீனிவாச பூஜாரி, லோக்சபா தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில், 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019 தேர்தலில், பா.ஜ., 25, காங்கிரஸ், ம.ஜ.த., பா.ஜ., ஆதரவு சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றனர்.

பா.ஜ.,வுக்கு 2024 தேர்தலிலும் பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக பல்வேறு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த வெற்றியை முறியடிப்பதற்காக, காங்கிரஸ் தரப்பில், மாநிலம் முழுதும் லோக்சபா தொகுதி வாரியாக வாக்குறுதி திட்டங்கள் மாநாடு நடத்தி வருகின்றனர்.

பிரதமர் ஆலோசனை

மேலும், தகுதி வாய்ந்த வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என்பதற்காக, பல கட்ட ஆலோசனை நடத்தி, காங்., தரப்பில் ஏழு தொகுதிகளுக்கு கடந்த வாரம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இன்னும் 21 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டி உள்ளது.

இதற்கிடையில், பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக, மூன்று நாட்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் நடந்தது. அதில், கர்நாடக தலைவர்களுடன் சாதக, பாதகங்களை ஆலோசித்து, வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர்.

லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பா.ஜ., தரப்பில், முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, அக்கட்சி தேசிய தலைவர் நட்டா நேற்று பட்டியலை வெளியிட்டார்.

ஷோபா இடமாற்றம்

யாருமே எதிர்பாராத வகையில், பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில், மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, பெங்களூரு மத்திய எம்.பி., பி.சி.மோகன், பெங்., தெற்கு எம்.பி., தேஜஸ்வி சூர்யா உட்பட 10 எம்.பி.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில், உடுப்பி – சிக்கமகளூரு எம்.பி.,யாக இருக்கும் மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா, பெங்களூரு வடக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாவணகெரேவில் சித்தேஸ்வருக்கு பதில், அவரது மனைவி காயத்ரி சித்தேஸ்வருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த மைசூரு தொகுதிக்கு, கட்சியிலே இல்லாத உடையார் மன்னர் வம்சத்தின் யதுவீர் களமிறக்கப்பட்டுள்ளார்.

சோமண்ணா குஷி

ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத், பெங்களூரு ரூரல் தொகுதியில் போட்டியிட உள்ளார். நேற்று மாலை தான், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை இவர் சந்தித்து, இரண்டு நாட்களில் பா.ஜ.,வில் இணைவதாக தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு நடந்த ஒன்றரை மணி நேரத்தில் அவருக்கு சீட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் கடந்த சட்டசபை தேர்தலின் போது, வருணா, சாம்ராஜ்நகர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சோமண்ணாவுக்கு, அவர் எதிர்பார்த்தபடியே துமகூரில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுபோன்று, பல்லாரியில் தேவேந்திரப்பாவுக்கு பதில், சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு களமிறக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே இந்த தொகுதி எம்.பி.,யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொப்பாலில், இரண்டு முறை எம்.பி.,யாக இருந்த கரடி சங்கண்ணாவுக்கு பதில், பிரபல எலும்பு முறிவு மருத்துவர் பசவராஜ் கியாவடாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன், ம.ஜ.த.,வில் எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.

முந்தைய பா.ஜ., அரசில் முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை, சிக்காவி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவருக்கு ஹாவேரி தொகுதியும்; தற்போது சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் கோட்டா சீனிவாச பூஜாரிக்கு, உடுப்பி – சிக்கமகளூரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாம்ராஜ் நகர் தொகுதியில், தற்போதைய எம்.பி., சீனிவாச பிரசாத்தின், இரண்டு மருமகன்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், கடந்தாண்டு காங்கிரசில் இருந்து பா.ஜ.,வில் இணைந்த பாலராஜுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

‘சீட்’ மறுப்பு

கொப்பால் – கரடி சங்கண்ணா, பல்லாரி – தேவேந்திரப்பா, ஹாவேரி – சிவகுமார் உதாசி, பெங்களூரு வடக்கு – சதானந்தகவுடா, தாவணகெரே – சித்தேஸ்வர், தட்சிண கன்னடா – நளின் குமார் கட்டீல், துமகூரு – பசவராஜு, மைசூரு – பிரதாப் சிம்ஹா, சாம்ராஜ்நகர் – சீனிவாச பிரசாத் ஆகிய ஒன்பது எம்.பி.,க்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

சீட் எதிர்பார்த்த முன்னாள் அமைச்சர்கள் மாதுசாமி, சி.டி.ரவி, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவின் மகன் காந்தேஷ் உட்பட பலர் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ம.ஜ.த.,வுடன் அதிகாரபூர்வ தொகுதி பங்கீடு முடியாததாலும், சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்படாததாலும், பெலகாவி, சிக்கபல்லாப்பூர், சித்ரதுர்கா, கோலார், மாண்டியா, ஹாசன், ராய்ச்சூர், உத்தர கன்னடா ஆகிய எட்டு தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள், படங்கள் 3ம் பக்கம்

நிஜமானது நமது செய்தி

‘தட்சிண கன்னடாவில், தற்போதைய எம்.பி.,க்கு பதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கேப்டன் பிரிஜேஷ் சவுடாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்று, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படியே, அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது, மாநில பா.ஜ., செயலராகவும் முக்கிய பொறுப்பில் உள்ளார். ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள், இவரது பெயரை சிபாரிசு செய்தது தெரியவந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.