"கேஸ் சிலிண்டர், பி.பி மாத்திரை, மளிகை – 1000 ரூபாயில் எவ்வளவோ வாங்கலாமே!" – அம்பிகா அதிரடி பேட்டி

அரசியல் தொடர்பான விஷயங்களில் அவ்வளவாகக் கருத்து சொல்லிப் பழக்கமில்லாத அம்பிகா, தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்த குஷ்புவின் பேச்சை கண்டித்தது நினைவிருக்கலாம். உடனே, அம்பிகாவுக்கும் அரசியல் சாயம் பூசத் தொடங்கிவிட்ட சிலர், சமூக வலைதளங்களில் அவரைத் திட்டித் தீர்க்கின்றனர். இது தொடர்பாக அம்பிகாவிடமே பேசினோம்.

அம்பிகா

“இதை அரசியலாகப் பார்க்கத் தேவையில்லை. வீட்டு வேலை செய்கிற பெண்களின் பணிகளை அங்கீகரிச்சு அரசாங்கம் ஒரு விஷயத்தைப் பண்ணியிருக்கு. என்னைப் பொறுத்தவரை இது ரொம்பவே நல்ல திட்டம். நம்ம வீட்டுல வேலை செய்கிற பெண்கள்கிட்டக் கேட்டுப் பாருங்க. அந்த ஆயிரம் ரூபாய் எப்படியெல்லாம் உதவியா இருக்குன்னு அவ்வளவு சொல்வாங்க. ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிலிண்டர் வாங்கினா ஒரு மாசம் வரும். வீட்டுல வயசானவங்க இருந்தா மருந்துச் செலவுக்கு அது போதும். பி.பி மாத்திரையின் விலையெல்லாம் இன்னைக்கு ரொம்பவே அதிகம்.

இவ்வளவு ஏன், ஒரு சின்னக் குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் ஒரு மாத மளிகைச் செலவுக்குப் போதும். நிஜம் இப்படி இருக்க, இந்தப் பணத்தைப் பிச்சைன்னு சொன்னதை என்னால ஜீரணிக்கவே முடியலை. பேசற விஷயம் ரொம்பவே சீரியஸானதுன்னு தெரியாம குஷ்பு பேசிட்டாங்களான்னு தெரியலை, ஆனா ரொம்பவே தப்பான பேச்சு! என்னைப் பொறுத்தவரை நல்ல விஷயம்னா அதைப் பத்தி நாலு வார்த்தை நல்லவிதமா சொல்லணும். பாராட்டத் தோணலையா, பேசாம இருந்துடனும்.

என் கருத்தை நான் சொன்னேன். உடனே நீங்க தி.மு.க-வா, நீங்க அ.தி.மு.க-வான்னு வரிசையில வந்துட்டாங்க சிலர். இது மட்டுமில்லீங்க. சமூக வலைதளங்கள்ல ஒரு பண்டிகைக்கு வாழ்த்துச் சொன்னா கூட, அங்கயும் திட்டறதுக்கு வர்ற ஒரு கூட்டம் இருக்கு. என்னை இப்படித் தொடர்ந்து திட்டிட்டு வர்றவங்க யாருன்னு எனக்குத் தெரியும். ஆனா அவங்க மீது பதிலுக்கு எனக்குக் கோபம் வரலை. அவங்க பாட்டுக்குத் திட்டிட்டுப் போகட்டும். நான் எந்தவொரு கட்சியிலயும் இல்லாத போது, யார் என்ன சொன்னாலும் என்ன ஆயிடப் போகுது!” என்கிறார்.

அம்பிகா

கருத்துச் சொல்கிறவர்களுக்குக் கட்சிச் சாயம் பூசப்படுவதைப் பற்றிக் கேட்டபோது,

“முன்னாடி சோஷியல் மீடியா இல்லை. அதனால இப்படி யாரும் கருத்துச் சொல்லியிருக்க மாட்டாங்க. இப்ப அப்படியொரு வசதி இருக்கறதால அவங்கவங்க மனசுல பட்டதைச் சொல்றாங்க. இது தேர்தல் நேரம்கிறதால அம்பிகாவுக்கு அரசியல் ஆசை வந்திடுச்சுனு கிளப்பி விடப்படும்னு எனக்குத் தெரியும். அதனால என்ன? நாலு நாளைக்கு என்னைப் பத்திப் பேசுவாங்களா, பேசிட்டுப் போகட்டும்” எனக் கேஷுவலாகச் சொல்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.