“படிப்பைத் தொடரமுடியல… ஆனா, வருஷத்துக்கு 15 லட்சம் டர்ன் ஓவர் பண்றேன்"- ஓபு உஷாவின் வெற்றிக்கதை…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஓபு உஷா. பள்ளிப்படிப்பை முடித்து, குடும்பம், குழந்தை என செட்டில் ஆனவர் வீட்டிலிருந்தே டெரகோட்டா நகைகளை செய்யக் கற்று அதனை ஒரு பிசினஸாக மாற்றியுள்ளார். தான் உற்பத்தி செய்யும் டெரகோட்டா நகைகளை ஆன்லைன் மூலமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யும் ஓபு உஷா தன் வெற்றிக்கதையை நம்மிடம் பகிர்கிறார்.

ஓபு உஷா

“ சொந்த ஊர் சேலம். நெசவாளர் குடும்பம். பொம்பள புள்ளைக்கு படிப்பு வேணாம்னு பத்தாம் வகுப்புலயே படிப்பை நிறுத்தப் பார்த்தாங்க. போராடி  காலேஜ் வரைக்கும் வந்தேன். பி.எஸ்ஸி ரெண்டாவது வருஷம் படிச்சிட்டிருந்தபோது கல்யாணம் ஆயிடுச்சு. படிப்பைத் தொடர முடியாமப் போச்சு. கணவர் ஊரான குமாரபாளையத்தில் செட்டில் ஆனேன். குடும்பம், குழந்தைனு முழு நேர ஹோம் மேக்கரா என் வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. எனக்குனு ஓர் அடையாளம் இல்லைனு  நிறைய நாள் ஏங்கியிருக்கேன். என் ஆதங்கத்தைப் கணவர் புரிஞ்சுகிட்டார்.

business

‘உன்னைத் தொலைச்சுட்டு பொறுப்பான குடும்பத்தலைவியா வாழ்வதில்  எந்த அர்த்தமும் இல்ல. உனக்கான அடையாளத்தை உருவாக்கு’னு சொல்லி, என்னை ஊக்கப்படுத்தினார். வீட்டிலிருந்தே ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு தோணுச்சு. எங்க ஏரியாவில் லுங்கிகள், புடவைகள் விற்பனைதான் பிரதான தொழில். ஆனா நான் புது பிசினஸ் ஐடியாவை தேடினேன். அந்த நேரத்தில் டெரகோட்டா ஜுவல்லரி டிரெண்ட் ஆச்சு. வீட்டிலிருந்தே யூடியூப் பார்த்து டெரகோட்டா ஜுவல்லரி செய்யக் கத்துக்கிட்டேன். 50-க்கும் மேற்பட்ட நகைகள் செய்து பார்த்த பின், இதை பிசினஸாக ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு.” தான் பிசினஸ் ஆரம்பித்த கதையை சொல்லித் தொடர்ந்தார் ஓபு உஷா.

என் பெயரிலேயே ஃபேஸ்புக்கில் பிசினஸ் பக்கம் ஆரம்பிச்சேன்.  நான் செய்த நகைகளை மொபைலில் புகைப்படம் எடுத்து, விவரங்களுடன் அப்லோடு பண்ண ஆரம்பிச்சேன். தெரிஞ்சவங்க, காலேஜ் படிக்கிற பொண்ணுங்கனு சின்னச் சின்ன ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுது. நானும் புதுப்புது டிசைன்களை முயற்சி பண்ணேன்.

டெரகோட்டா நகைகள்

தங்க நகைகளில் டெம்பிள்  ஜுவல்லரி டிரெண்ட் ஆச்சு. அந்த மாடலை  டெரகோட்டாவில் செஞ்சு பார்த்தேன். நல்ல லுக் கிடைச்சுது. அந்தப் புது கான்செப்ட்டுக்கு நிறைய ஆர்டர் வந்தது. நிறைய பேர் பட்டுப்புடவைகளுக்கு டெரகோட்டா டெம்பிள் நகைகளை மேட்சிங் செய்ய ஆர்டர் கொடுத்தாங்க.  பட்டுப்புடவைகள் இருக்கும்  டபுள் ஷேடிலேயே டெரகோட்டா நகைகளைச் செய்தேன். அது என் தனித்துவமானது. இப்படி ஒவ்வொரு டிசைனா முயற்சி செஞ்சு பிசினஸை வளர்த்து எடுத்துருக்கேன். இப்போ 1000-க்கும் மேற்பட்ட டிசைன்கள் பண்ணத் தெரியும்.

பிசினஸ் ஆரம்பிச்சு 13 வரும் ஆச்சு. சோஷியல் மீடியா மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் புதுசு புதுசா அறிமுகம் ஆறாங்க. வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வருது. ஏற்றுமதிக்கான உரிமம் பெற்று சட்டப்பூர்வமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணிட்டு இருக்கேன். நடிகை தேவயானி, பாடகி மஹதி, சீரியல் நடிகைகள் ரக்‌ஷிதா, ஜனனி, சுஜா வருணி,பிரித்தா விஜயக்குமார், அனிதா விஜயக்குமார் போன்ற பிரபலங்கள் பலரும் நகைகளை தனித்துவமாக வடிமைக்க ஆர்டர்கள் கொடுத்து வாங்குறாங்க.

ஓபு உஷா

ஆன்லைன் பிசினஸ் என்பதால் , பிசினஸ் செய்வதைவிட வந்த கஸ்டமர்களை தக்கவைப்பதுதான் சவாலானது. கஸ்டர்மர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வது, குறைகளை ஏத்துக்கிட்டு வேறு நகைகள் கொடுப்பது, புது டிசைன்களை அப்டேட் செய்வது, பேக்கிங் போன்றவற்றில் அதிக கவனமா இருக்கணும்.   ஐந்தாயிராத்தில் ஆரம்பிச்ச பிசினஸில் இப்போ 15 லட்சம் வரை டர்ன் ஓவர் பண்றேன். என்னைப் போன்று அடையாளம் தேடும் ஆறு  பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுத்திருக்கேன்.சொந்தக் காலில் நிக்கிறேன். வீட்டின் பொருளாதாரத்தில் என் பங்கும் இருக்கு. பன்னிரெண்டாம் வகுப்பு படிச்ச பொண்ணுங்கிற அடையாளத்தை மாத்தி தொழிலதிபருங்கிற அடையாளத்தை என் பிசினஸ் தான் கொடுத்துச்சு. உழைப்பும், ஊதியமும் தான் என் அடையாளம்” – வெற்றிப் புன்னகையோடு விடைகொடுக்கிறார் ஓபு உஷா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.