போதைப் பொருள் விவகாரத்தில் குற்றம்சாட்டிய பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு

சென்னை: போதைப் பொருள் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பெருநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த மார்ச் 8-ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் குற்றம்சாட்டி அவதூறு பரப்பியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. பேட்டியில் அவர் முழுக்க, முழுக்க முதல்வருக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் முதல்வரின் நற்பெயர், புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல். இதன்மூலம் அரசியல் ரீதியாக பழனிசாமி ஆதாயம் தேட முற்பட்டுள்ளார். முதல்வரின் பொதுமக்களுக்கான அன்றாட பணிகள், கடமையை செய்வதில் பழனிசாமி குறுக்கீடு செய்துள்ளார்.

ஆக்கப்பூர்வ நடவடிக்கை: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க சட்ட ரீதியாக பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். போலீஸாரின் நடவடிக்கையால் தமிழகம் கஞ்சா சாகுபடியில் ‘பூஜ்ஜிய’ நிலையில் உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் மொத்தம் 10,665 போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 வெளிநாட்டினர் உட்பட 14,934 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28,383 கிலோ கஞ்சா, 63,848 போதை மாத்திரைகள், ஹெராயின், மெத்தம்பெட்டமைன் போன்ற பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் அமைச்சரவையின் தலைவராக உள்ள முதல்வருக்கு எதிரான இந்த அப்பட்டமான குற்றச்சாட்டு மூலம், அவதூறு வழக்கு தொடர்வதற்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது. எனவே, பழனிசாமி மீது குற்றவியல் அவதூறு சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு எதிராக.. இதேபோல, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக முதல்வரை தொடர்புபடுத்தி கடந்த பிப்ரவரி 29-ம் தேதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும், முதல்வர் சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த 2 அவதூறு வழக்குகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி திமுக வழக்கு: போதைப் பொருள் விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசி, முதல்வரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக திமுக சார்பில் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். போதைப் பொருள் விவகாரத்தில் முதல்வர் குறித்து பேச பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.