மாலத்தீவு செல்வதை தவிர்க்கும் இந்தியர்கள்.. வருவாய் சரிந்ததால் கலக்கத்தில் சுற்றுலாத்துறை

மாலி:

மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் உருவானது. இந்தியாவுடனான நட்புறவில் இருந்து விலகி சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டத் தொடங்கியிருக்கிறார் முய்சு.

மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்வதற்காக முகாமிட்டிருந்த இந்திய படைகளை வெளியேறும்படி முய்சு கூறினார். அதன்படி இந்திய வீரர்களில் ஒரு விமான தளத்தில் உள்ள குழுவினர் வெளியேறினர். மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் வீரர்கள் மே 10ஆம் தேதிக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த வீரர்களுக்கு பதிலாக இந்திய தொழில்நுட்பக் குழுவினர் அங்கு பணி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா உறவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. லட்சத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு மாலத்தீவு மந்திரிகள் சிலர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரம் வெடித்தது. ஆத்திரமடைந்த இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு முன்பதிவு செய்த சுற்றுலா பயணத்தை ரத்து செய்தனர். இந்த விவகாரம் அடுத்தடுத்த நாட்களில் பூதாகரமாக வெடித்தது.

விடுமுறை என்றால் மாலத்தீவுக்கு படையெடுத்த இந்திய சுற்றுலாப் பயணிகள், படிப்படியாக மாலத்தீவுக்கான சுற்றுலாப் பயணத்தை தவிர்க்க ஆரம்பித்தனர். இதனால் மாலத்தீவின் சுற்றுலா வருவாய் குறைந்துள்ளது.

மாலத்தீவு சுற்றுலா அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் 17 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்துள்ளனர். அதில் 2,09,198 பேர் இந்தியர்கள். ரஷ்யர்கள் 2,09,146 பேரும், சீனர்கள் 1,87,118 பேரும் மாலத்தீவுக்கு வருகை தந்துள்ளனர்.

இதன்மூலம் மாலத்தீவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு இந்தியா ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த ஆண்டில் மார்ச் 2-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் இருந்து 27,224 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 33 சதவீதம் சரிவு ஆகும். கடந்த ஆண்டு 41,224 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

இந்தியர்களின் வருகை குறைந்து வருவாய் சரிந்ததால், மாலத்தீவு சுற்றுலாத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பயணிகள் வருகை குறைவதால் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகளை சுற்றுலாத்துறை வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் எடுத்துரைத்துள்ளனர். 1.8 பில்லியன் டாலர் முதல் 2 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும் என்று சிலர் கணித்துள்ளனர். இந்திய பயணிகளின் வருகையை நம்பியிருக்கும் டிராவல் ஏஜென்சிகள் மற்றும் சுற்றுலா ஆபரேட்டர்கள் தங்களின் வருவாய் 80 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.