Good Bad Ugly: `விடாமுயற்சி' படப்பிடிப்பு தள்ளிப்போகிறதா? அடுத்த படத்திற்குச் செல்கிறாரா அஜித்?

அஜித்தின் ரசிகர்களுக்கு நேற்று அமர்க்களமான நாளாகிவிட்டது. அஜித் இப்போது நடித்து வரும் `விடாமுயற்சி’ படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத சூழலில், அவரது அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் அறிவிப்பு ரசிகர்களை மகிழ வைத்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு எப்போது? `விடா முயற்சி’யின் படப்பிடிப்பு எந்த நிலையில் உள்ளது? அஜித்தின் உடல்நலம் எப்படி இருக்கிறது என்பது குறித்தெல்லாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி…

சுற்றுப்பயணத்தின் போது அஜித்

சில நாள்களுக்கு முன்னர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதுக்குக் கீழே உள்ள நரம்பில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் இரண்டொரு நாளில் வீடு திரும்பினார். ஒரு சில நாள்களில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு இருக்கும் என்றும், அஜித் அதில் பங்கேற்பார் என்றும் சொன்னார்கள். இந்நிலையில் அஜித், இப்போது வீட்டில் ஓய்விலிருக்கிறார். சில வாரங்கள் அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகச் சொல்கிறார்கள்.

த்ரிஷா

லைகா இப்போது ஒரே சமயத்தில் பல பெரிய படங்களைத் தயாரித்து வருகிறது. மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தையும், தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’, கமலின் ‘இந்தியன்2’, ‘இந்தியன் 3’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ எனப் பல படங்கள் லைன் அப்பில் இருக்கின்றன. எல்லாமே படப்பிடிப்பில் இருக்கிறது.

‘விடாமுயற்சி’யை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இதில் சஞ்சய்தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கஸன்ட்ரா எனப் பலரும் நடித்துவருகின்றனர். ஆக்‌ஷனும் எமோஷனும் கலந்த கலவையாகப் படம் உருவாகிவருகிறது. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் 50 சதவிகிதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்றும், மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 35 நாட்களாவது தேவைப்படும் என்றும் சொல்கிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன்

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ‘வேட்டையன்’ படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து மீதம் 25 சதவிகிதமே இருக்கிறது என்பதால் ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டு, ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பைத் தொடரலாம் எனத் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் பரவியுள்ளது. ‘வேட்டையன்’ படப்பிடிப்பு நிறைவடைய ஏப்ரல் கடைசி ஆகலாம் என்றும், அதன்பின்னரே ‘விடாமுயற்சி’யின் மீதமுள்ள படப்பிடிப்பு தொடரும் என்றும் சொல்கிறார்கள்.

அஜித்

இந்நிலையில்தான் திடீரென ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தை அறிவித்துள்ளனர். அஜித்தைப் பொறுத்தவரை ஒரு படத்தை முழுவதுமாக முடித்துவிட்டுத்தான் அடுத்த படத்திற்குச் செல்வார். ஆதிக்கின் பட டைட்டில், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்டாலும், நடிகர்களின் தேர்வு இன்னமும் முடிவாகவில்லை. ‘குட் பேட் அக்லி’க்கு ஆதிக்கின் ‘பஹீரா’, ‘மார்க் ஆண்டனி’ படங்களின் ஒளிப்பதிவாளரான அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ‘துணிவு’, ‘மார்க் ஆண்டனி’ படங்களுக்கு எடிட்டிங் செய்த விஜய் வேலுக்குட்டி இதற்கும் படத்தொகுப்புப் பணிகளைச் செய்யவிருக்கிறார். ‘விடாமுயற்சி’யின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் ஆக்ஷன்களைக் கவனிக்கிறார். இதன் படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்கத் திட்டமிட்டு வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.