“பாஜக கூட்டணி 400+ தொகுதிகளில் வெல்லும்” – தெலங்கானா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை

நாகர்கர்நூல்: மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் நாகர்கர்நூல் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், “மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தெலங்கானா மக்கள் தற்போதே மூன்றாவது முறையும் மோடி என கூறத் தொடங்கிவிட்டார்கள்.

தெலங்கானா மக்களின் அனைத்து கனவுகளையும் நொறுக்கக் கூடியவை காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிகள். தெலங்கானாவை முதலில் பாரத் ராஷ்ட்ர சமிதி கொள்ளையடித்தது. தற்போது காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்து வருகிறது. தெலங்கானாவை அழித்தொழிக்க காங்கிரஸ் கட்சிக்கு 5 ஆண்டுகளே போதுமானது.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஏழ்மையை ஒழிப்போம் என காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. ஆனால், ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா? மோடியின் குடும்பம் என்பது 140 கோடி இந்தியர்களைக் கொண்டது. கடந்த 23 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறேன். முதலில் குஜராத்தின் முதல்வராக இருந்தேன். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கிறேன். அதற்கான வாய்ப்பை நீங்கள்தான் அளித்தீர்கள்.

இந்த 23 ஆண்டுகளில் நான் ஒரு நாளையும் எனக்காக பயன்படுத்தியதே இல்லை. 140 கோடி குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவே நான் இரவும் பகலுமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். மோடியின் வாக்குறுதி என்றால், அது நிறைவேற்றப்படும் வாக்குறுதி என்று அர்த்தம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2019 தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை, பாஜக தனித்து களம் காண திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தலில் கூடுதல் இடங்களை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு மக்களவைத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.