மைசூரு மகராஜா, தேவகவுடா மருமகன், முன்னாள் முதல்வருக்கு சீட்: பாஜக பட்டியல் ‘ஆச்சரியம்’

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு பாஜகவேட்பாளர்களை அக்கட்சி மேலிடம் அறிவித்தது. அதில் தற்போது எம்.பி. ஆக உள்ள9 பேருக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. மைசூரு மகாராஜா உட்பட 9புதியவர்களுக்கு சீட் வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ஊரக தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக டாக்டர் மஞ்சுநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகனான இவர், பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இருதய மருத்துவமனையின் இயக்குந‌ராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தேவகவுடாவின் மஜதவில் இணைய மறுத்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜகவில் நேற்று இணைந்தார்.

இந்நிலையில், அவர் பெங்களூரு ஊரக தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் போட்டியிட உள்ளார். இருவரும் ஒக்கலிகா சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவுடன் மருத்துவர் மஞ்சுநாத்

மைசூரு-குடகு தொகுதியின் தற்போதைய எம்.பி. பிரதாப் சிம்ஹாவுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னாள் பத்திரிகையாளரான இவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மைசூரு மகராஜா யதுவீர்கிருஷ்ண தத்த உடையாருக்கு சீட்வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதேவேளையில் பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் வழங்காததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மைசூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஷிக்காவுன் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள நிலையில், அவருக்கு எம்.பி. சீட் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய எம்.பி.மங்களா அங்கடி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியில் எம்.பி.யாக உள்ள மத்திய அமைச்சர் ஷோபாகரந்தலாஜேவுக்கு பெங்களூரு வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி. முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவுக்கு இந்த முறை சீட்வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதேபோல ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் முன்னாள் துணை முதல்வர் ஈஷ்வரப்பாவின் மகன் காந்தேஷூக்கு சீட் வழங்கவில்லை. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள ஈஷ்வரப்பா, சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தார்வாட் தொகுதியை முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கோரினார். அவருக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர், தனது ஆதரவாளர்களுக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.