A Killer Paradox Review: தற்செயலான கொலை, தொடரும் குற்றங்கள் – ஒரு வேற லெவல் கொரியன் வெப்சீரிஸ்!

சாதாரண கல்லூரி மாணவனாக இருக்கும் லீ டாங் (சாய் வூ-சிக்) இரவு நேரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறான். அப்போது மது அருந்திக் கொண்டு தகராறு செய்ய வரும் ஒருவனுடன் பிரச்னையாக, ஒரு கோபத்தில் லீ டாங் எதிராளியைக் கொன்றுவிடுகிறான். சிறுவயதில் அவன் அனுபவித்த துன்புறுத்தல்களின் (Bullying) பெருவெடிப்பாக இந்த நிகழ்வு அரங்கேறிவிடுகிறது.

A Killer Paradox Review

தற்காப்புக்காகச் செய்த இந்தக் கொலையை மறைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இது நோக்கமே இல்லாத அடுத்தடுத்த கொலைகளுக்கு வித்திடுகிறது. தவறுதலாகச் செய்த கொலைகள்தான் என்றாலும் இப்படி கிரைம் ரேட் எகிறிக் கொண்டே போகக் குற்றவுணர்ச்சியும் லீ டாங்கைப் போட்டு உலுக்குகிறது. அந்தத் தருணத்தில் அவன் கொலை செய்தவர்கள் எல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் செய்தவர்கள், கொலைகாரர்கள், நீதியிலிருந்து தப்பித்த குற்றவாளிகள் என்பது தெரியவருகிறது. ‘சிவகிரி உன் ரூட்தான் சரி’ என்று ‘திருப்பாச்சி’ விஜய் கணக்காக ‘ஹீரோஸ்’ என்று குழுவோடு சேர்ந்து ‘இவர்கள் சாவதற்குத் தகுதியானவர்கள்’ என்று நோக்கத்தோடு மீண்டும் கொலைகள் செய்யத் தொடங்குகிறான்.

மறுமுனையில் இந்த கொலைகளுக்குப் பின்னால் லீ டாங்தான் இருக்கிறான் என்று சந்தேகிக்கும் காவல் அதிகாரி ஜாங் நான்-கம் (சோன் சுக்-கு), லீ டாங்கைத் துரத்தத் தொடங்குகிறார். ஆனால் இந்த துரத்தல் ஜாங் நான்-கமின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது அவருக்குத் தனிப்பட்ட இழப்புகளையும், துன்பங்களையும் சந்திக்க வைக்கிறது. இந்த போலீஸ் – கொலைகாரன் துரத்தலில் யார் வெற்றி பெறுவார்கள், லீ டாங்கின் கொலைகள் நியாயமானதுதானா? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் எட்டு எபிசோடுகள் கொண்ட ‘A Killer Paradox’ என்கிற இந்த த்ரில்லர் தொடரின் கதை.

A Killer Paradox Review

லீ டாங் என்கிற துன்பப்படும் கல்லூரி மாணவனாக ‘பாரசைட்’ புகழ் சாய் வூ-சிக் தனது இணையற்ற நடிப்பாற்றலால் முழுக்கதையையும் தனது தோள்களில் சுமந்திருக்கிறார். கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை உணர்ச்சிகள், உடல்மொழி மூலம் மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பது அதிசயிக்க வைக்கிறது. அதற்குச் சற்றும் சளைக்காமல் மறுமுனையில் சோன் சுக்-கு போலீஸ் அதிகாரியாக மிரட்டுகிறார். நீதிக்காகப் போராடும் அதிகாரியாக இருந்தாலும் அவரிடமும் பழிவாங்கும் உணர்ச்சி இருக்கிறது என்கிற மெல்லிசான கோட்டின் மேல் நடக்கும் நுண்ணுணர்வுகளை கச்சிதமாகத் தங்கியிருக்கிறார். மூகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு போடும் ஒன்லைனர்களும் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன. 

துப்பறியும் நபர் கிட்டத்தட்டக் கொலையாளியை நெருங்கும்போது, இயற்கையான சில சம்பவங்கள் அதனைத் தடுக்கின்றன என்பதாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் திரைக்கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன. இரண்டு மைய கதாபாத்திரத்தை வைத்து சமூகத்தில் மண்டிக்கிடக்கும் அழுக்குகளான ஊழல், பொய், வன்முறைகளை அலசியிருக்கிறார்கள். அதனைப் பார்வையாளர்களை சலிப்படையவிடாமல் செய்திருப்பது சிறப்பு.

அதே சமயம், முதல் நான்கு எபிசோடுகளில் இருக்கும் வேகம் அடுத்த நான்கு எபிசோடுகளில் குறைந்துவிடுகிறது. இருப்பினும் இந்த ஏற்ற இறக்கங்கள் கதைக்களத்துக்குத் தேவையானதாகவே  இருக்கின்றன.

A Killer Paradox Review

கதைக்களம் லீனியராகச் செல்லாமல் பல்வேறு கிளைக் கதைகளைக் கொண்டு நான்-லீனியராக செல்வது சுவாரஸ்யமான யுக்தி. அது சில சமயங்களில் பார்வையாளர்களின் கவனம் தவறினால் மீண்டும் பின்னால் வந்து பார்க்க வைக்கிறது. கூடுதல் சிறப்பாக முக்கிய கதாபாத்திரத்தை மட்டும் ஆழமாக எழுதாமல் கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய பார்வையையும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். இது வெப்டூனில் வெளியான காமிக்ஸ் தொடர் என்பதால் இலக்கியத்தன்மையான குறியீடுகளையும் ஆங்காங்கே காண முடிகிறது.

சண்டைக் காட்சிகளில் மிக மெதுவாக நகரும் ஸ்லோமோஷன் யுக்திகள் மற்ற படங்களில் இல்லாத மாதிரியான வடிவமைப்பில்  தனித்துவமாக இருக்கிறது. படத்தொகுப்பிலும் காட்சி மாற்றங்கள் மேட்ச் கட்ஸ் முறையில் திறமையாகக் கையாளப்பட்டுள்ளன. குறிப்பாக வசனங்கள், பொருள்கள், செயல்களைப் பயன்படுத்தி இந்த கட்களைத் தொகுத்திருப்பது நல்ல கிரியேட்டிவிட்டி. திடீரென காட்சிகளை மாற்றுவது, வேகமாக ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்குப் பரபரப்பைக் கூட்டுவது போன்ற இடங்களில் பின்னணி இசை மிரட்டல் ரகம். 

A Killer Paradox Review

மொத்தத்தில் அதிரடி நிறைந்த த்ரில்லர் படங்களைப் பார்க்க விரும்பும் நபர்களுக்கு வார இறுதி ஓய்வு நேரத்தில் பார்ப்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த தொடர் இந்த `A Killer Paradox’. தொடரின் முடிவு பார்வையாளர்களில் கணிப்புக்கே விடப்பட்டதால்  இரண்டாம் சீசன் வரவும் வாய்ப்பிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.