Doctor Vikatan: அதிக ப்ளீடிங்கால் அவதிப்படும் மனைவி; கர்ப்பப்பையை நீக்காமல் குணப்படுத்த வழி உண்டா?

Doctor  Vikatan: என் மனைவிக்கு மாதவிடாய் காலங்களில் அதிகமான ரத்தப்போக்கு இருக்கிறது. நிறைய நாள்கள் நீடிக்கிறது. மருத்துவர்கள் அறிவுரைப்படி கர்ப்பப்பையை  ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் கர்ப்பப்பை புண்ணாக உள்ளதாகவும், வீக்கமாக உள்ளதாகவும் சொன்னார்கள்.  மாத்திரை சாப்பிட்டு வருகிறார். அந்த மாத்திரையை நிறுத்திவிட்டால் உதிரப்போக்கு வருகிறது.  மூன்று மாதங்களுக்குச் சாப்பிடச் சொல்கிறார்கள் அப்படியும் நிற்கவில்லைஎன்றால் கர்ப்பப்பையை அறுவைசிகிக்சை செய்து அகற்றி விடவேண்டும் என்கிறார்கள். கர்ப்பப்பையை அகற்றாமல் இந்தப் பிரச்னைக்கு வேறு ஏதும் தீர்வு உள்ளதா…?
-Jay kumar,.விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

நித்யா ராமச்சந்திரன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் பிரச்னை ‘அடினோமயோசிஸ்’ (Adenomyosis )  என்ற பாதிப்பாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

கர்ப்பப்பைக்குள் உள்ள ‘எண்டோமெட்ரியல் லைனிங்’  உதிர்ந்து, மாதந்தோறும் பீரியட்ஸ் வருகிறது. இந்த லைனிங்கானது, எண்டோமெட்ரியம் பகுதியைத் தாண்டி, வேறு எங்கேனும் இருப்பதையே ‘அடினோமயோசிஸ்’  என்கிறோம்.  அதாவது மாதந்தோறும் பீரியட்ஸின்போது, எண்டோமெட்ரியம் பகுதியிலிருந்து லைனிங் உதிர்ந்து வெளியே வந்துவிடும்.  கர்ப்பப்பையின் திசுப் படிமங்களில் மாட்டிக்கொண்டால் வெளியே வர முடியாது.

அதன் விளைவாக, மாதவிடாய் ரத்தமானது, ஆங்காங்கே தங்கியிருக்கும். அதுதான் ‘அடினோமயோசிஸ்’. இந்தப் பிரச்னையில் கர்ப்பப்பை சற்று வீங்கியிருக்கும். அதன் காரணமாக ப்ளீடிங்கும் அதிகமாக இருக்கும்.

IUD

இந்தப் பிரச்னைக்கு புரொஜெஸ்ட்ரான் உள்ள ஐயூடி கருவி சிறந்த தீர்வாக இருக்கும். கர்ப்பம் தரிக்க வேண்டாம் என்பவர்கள் காப்பர் டி என்ற கருவியைப் பொருத்திக் கொள்தைப் போலத்தான், இந்த  புரொஜெஸ்ட்ரான் உள்ள ஐயூடி கருவியும். இந்தக் கருவி ஹார்மோன்களை விடுவிக்கும். அதனால் ப்ளீடிங் படிப்படியாகக் குறையும்.

கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையைச் செய்வதற்கு முன், இந்தக் கருவியை முயற்சி செய்து பார்க்கலாம். இந்தக் கருவி உங்கள் மனைவிக்குப் பொருந்திவிட்டது என்றால் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையைத் தவிர்த்துவிடலாம்.  இந்தக் கருவியை 5 வருடங்களுக்கு மாற்றத் தேவையில்லை. பிறகு, தேவைக்கேற்ப மீண்டும் புதிதாகப் பொருத்திக் கொள்ளலாம். ஒருவேளை அதற்குள் மெனோபாஸ் வந்துவிட்டால், இந்தக் கருவியே தேவைப்படாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.