Former Chief Ministers daughter Kavitha is in 7-day ED custody | மாஜி முதல்வர் மகள் கவிதாவுக்கு 7 நாள் ஈ.டி., காவல்

புதுடில்லி,: டில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை, வரும் 23ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்குப் பதிவு

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மதுபான தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனையில், 2021 – 22ம் ஆண்டு புதிய கொள்கை வகுக்கப்பட்டது.

இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், சி.பி.ஐ., இதுகுறித்து விசாரித்து வருகிறது. இதில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதில், டில்லி ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் பெயரும் இடம் பெற்று உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாதில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் நிறைவில் கவிதாவை கைது செய்த அதிகாரிகள், டில்லிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

கருப்பு தினம்

அதன்பின் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் நேற்று, கவிதாவை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் கவிதாவை கைது செய்துள்ளனர்; இதன் வாயிலாக, அவர்கள் சட்டத்தை விட மேலானவர்கள் என நினைக்கின்றனர். இது ஒரு கருப்பு தினம்,” என வாதிட்டார்.

இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த வழக்கில் கவிதாவிற்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியுள்ளதுடன், சாட்சியங்களிடம் இருந்து வாக்குமூலங்களும் பெறப்பட்டு உள்ளன.

அவ்வாறு இருக்கையில், இவ்வழக்கில் இருந்து அவரை விடுவித்தால், சாட்சியங்களை கலைக்கும் அபாயம் உள்ளது. எனவே, அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.கே.நாக்பால், கவிதாவை வரும் 23ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, “சட்ட விரோதமாக என்னை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்; நீதிமன்றம் வாயிலாக இந்த வழக்கில் இருந்து விடுபட போராடுவேன்,” என்றார்.

கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை எட்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் அவற்றை நிராகரித்தார். இதையடுத்து, டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தன் வழக்கறிஞர்களுடன் கெஜ்ரிவால் ஆஜரானார். விசாரணைக்குப் பின், மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா பிறப்பித்த உத்தரவில், ”குற்றம் ஜாமினில் வரக்கூடியது என்பதால், குற்றம் சாட்டப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கெஜ்ரிவால் தரப்பு, ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.