Samantha: "மயோசைட்டிஸால் பாதிக்கப்பட்டதைப் பொதுவெளியில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது!" – சமந்தா

மயோசைட்டிஸ் பாதிப்பால் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்து கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சமந்தா.

விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ‘Citadel’-இன் இந்தி ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறியிருந்தார். தற்போது, ஓய்விலிருந்து திரும்பி வந்து உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைத் தொடங்கி அதில் மயோசைட்டிஸ் நோய், அதிலிருந்து கடந்து வந்த பாதை  குறித்து எல்லாம் பேசி வருகிறார். இதைத் தொடர்ந்து ஒருசில படங்களிலும் கமிட்டாகி தனது கரியரை மீண்டும் தொடர்ந்து வருகிறார்.

Samantha | சமந்தா

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றின் விழாவில் பேசிய சமந்தா தான் மயோசைட்டிஸ் நோயால் தான் பாதிக்கப்பட்டத்தைப்  பொதுவெளியில் அறிவித்ததற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “மயோசைட்டிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்டதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு அப்போது இருந்தது. அந்தச் சமயத்தில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்தப் படம் ரிலீஸாக வேண்டிய நேரத்தில்தான் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்.

படத்தின் வெற்றிக்காக புரோமோஷன் பணிகளில் என்னை ஈடுபடுமாறு தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். அதனால் நான் ஒரு நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டேன். அதிக அளவு மருந்துகளை அப்போது எடுத்துக்கொண்டிருந்தேன். அந்த நேர்காணலில் என்னுடைய தோற்றம் எப்போதும்போல் இல்லை. அதனால்தான் மயோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து பொதுவெளியில் அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். அந்தச் சமயத்தில் சிலர் என்னை ‘சிம்பத்தி குயின்’ என்று அழைத்தார்கள்” என்று கூறியிருக்கிறார். 

சமந்தா

மேலும் பேசிய அவர், “ஒரு மனிதராக, நடிகையாகப் பரிணாம  வளர்ச்சி அடைந்திருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில், என்னைப் பற்றி தவறாகப் பேசுவதையும், எழுதுவதையும் தேடுவேன். அதிலிருந்து சில விஷயங்களை மாற்றிக்கொள்வேன். இங்குப் பலர் சிரமங்களில் இருக்கும்போது அதனை வெளிப்படுத்த ஒரு வடிகால் தேவை. அந்த வகையில் சோஷியல் மீடியாதான் சிறந்த போர்டல் என்று நான் நினைக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார். 

சமூகவலைதளங்களில் போட்டோஷூட் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது, பாட்காஸ்ட்டில் பேசுவது என சமந்தா தன்னை பிஸியாக வைத்துக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.