இன்று நடைபெறும் 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மும்பை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு ‘பாரத ஒற்றுமை யாத்திரை’யை செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி, 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார். சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரம் அவர் நடந்தே இந்த யாத்திரையை மேற்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் இருந்து மும்பையை நோக்கி தொடங்கினார். இந்த யாத்திரையில் அவர் பெரும்பாலும் திறந்தவெளி வாகனத்தில் அமர்ந்தபடி சென்று மக்களை சந்தித்தார். கடந்த 5 நாட்களாக மராட்டியத்தில் யாத்திரை நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று தானே நகர் வழியாக யாத்திரை மும்பை வந்தடைந்தது. மும்பையில் வழிநெடுகிலும் மக்கள் அவரை வரவேற்றனர். மும்பை யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் வாகனத்தில் அமர்ந்தபடி பொதுமக்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர், ‘தாராவி குடிசைப்பகுதி மக்களுக்கானது, அதானி நிறுவனத்துக்கானது அல்ல’ என்று சாடினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்ற ராகுல்காந்தி இரவு 8 மணியளவில் சட்டமேதை அம்பேத்கர் சமாதியான சைத்யபூமியில், அம்பேத்கர் உருவசிலைக்கு மரியாதை செலுத்தி யாத்திரையை நிறைவு செய்தார். அவரது 2-வது ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ பல்வேறு மாநிலங்கள் வழியாக 63 நாட்கள் பயணித்து நிறைவு பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் ராகுல்காந்தி மும்பையில் ‘நியாய சங்கல்ப் பாதயாத்ரா’ என்ற பெயரில் மணி பவன் முதல் ஆகஸ்டு கிராந்தி மைதானம் வரை நடைபயணம் செய்ய உள்ளார்.

பின்னர் மாலை 5 மணி அளவில் மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் ராகுல்காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குறிப்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்-அமைச்சர் சம்பாய் சோரன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.