“ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் தான் போதை மருந்துகளின் தலைநகரமாக உள்ளது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அண்மையில், பழனிசாமியும் அதே குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். ஆக, இந்த இரண்டு கட்சிகளும்தான் போதைப் பொருள்களுக்கு வித்திட்ட கட்சிகள். ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திமுக மீதுஅவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் இருந்து சில கேள்வி, பதில்கள்…

பிரதமர் மோடியானாலும் பாஜக ஆனாலும் மத்திய அரசின் எந்த வளர்ச்சித் திட்டத்தை உங்கள் அரசு தடுத்து நிறுத்தியது என விளக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை பதில் கூறவில்லை. அதேநேரம், திமுகவை வாரிசு கட்சி என்றும் ஊழல் கட்சி என்றும் பிரதமர் மீண்டும் விமர்சித்திருக்கிறாரே?

பொதுவாக, மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் நம்மை விமர்சனம் செய்யும்போது ஒரு சில பொய்களை, தவறான தகவல்களை வெளியிடுவது உண்டு. ஆனால், பிரதமர் போன்ற மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் அப்படிச் செயல்படமாட்டார்கள். நேரு முதல் மன்மோகன் சிங் வரை பிரதமர்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், நரேந்திர மோடியும் அவரது பாஜக நிர்வாகிகளும் தவறான தகவல்களைச் சொல்பவர்களாகவும், வதந்திகளை வாட்ஸ்ஆப் வழியாகப் பரப்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கிற பாஜக நிர்வாகிகளும் உண்டு. அவை குறித்து, கேள்வி எழுப்பினால் பதில் இருக்காது. இன்னொரு வதந்திக்கோ, விமர்சனத்திற்கோ தாவி விடுவார்கள்.


மத்திய அரசின் எந்தத் திட்டத்தைத் தமிழக அரசு முடக்கியது என்று கேட்டால் அதற்குப் பதில் வராது. காரணம், மத்திய அரசின் பங்களிப்போடு நடைபெறும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழக அரசு தன் பங்களிப்பைக் கூடுதலாகச் செலுத்தி, சிறப்பாக நிறைவேற்றி அதற்காக மத்திய அரசின் சார்பிலேயே விருதுகளையும் பெற்றுள்ளது. இது பிரதமர் தொடங்கி பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் திமுக மீது வாரிசு அரசியல், ஊழல் முறைகேடு என்று திசைதிருப்பும் விமர்சனங்களை வைப்பது வழக்கமாகிவிட்டது.

நான் கருணாநிதியின் மகன்தான். அவருடைய கொள்கை வாரிசுதான். அந்த அடிப்படையில்தான் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். பாஜக வெளியிட்டுள்ள மக்களவை தேர்தல் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாரிசுகளுக்கு பிரதமரும் அவரது கட்சி நிர்வாகிகளும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு எனத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கையும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ள நிதியும் பாஜகவின் உண்மை முகம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறதே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?. ஊழலை சட்டபூர்வமாகச் செய்வதே பாஜகவின் பாணியாகும்.

முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோருக்கு எதிரான வழக்குகளும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் திமுகவின் பிம்பத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அமைச்சர் பொன்முடி மீதான தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அமலாக்கத் துறை எதிர்க்கட்சிகளைப் பணியவைக்கும் துறையாக பாஜக ஆட்சியில் மாறிவிட்டதை தேர்தல் பத்திர ஊழல் வெளிக்கொண்டு வந்துவிட்டதே. இதில் இருந்தே அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியல்ரீதியாகக் குறிவைக்கப்படுவதைப் புரிந்துகொள்ளலாம். திமுக அரசுக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கும் செல்வாக்குக்கும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற முயற்சிகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதனைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியை மோடி புகழ்ந்து பேசி இருக்கிறார்? இதன் அரசியல் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

ஜெயலலிதாவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று இதே மோடியும் அமித்ஷாவும் விமர்சித்திருக்கிறார்கள். இப்போது எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் போற்றுகிறார்கள். தமிழகத்தில் தங்களுடைய சாதனை என்று பாஜகவால் எதையும் சொல்ல முடியாது. திமுக ஆட்சியின் சாதனைகள் மீதோ, பேரறிஞர் அண்ணா – கருணாநிதி ஆகியோரின் அரசியல் கொள்கைகள் மீதோ பாஜகவால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. அதனால் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பயன்படுத்துகிறார்கள்.

போதைப் பொருள் வழக்கில் கைதான திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை முன்வைத்து பாஜகவும் அதிமுகவும் திமுகவை விமர்சித்து வருகின்றனர். முதல்வராக இவ்விவகாரம் குறித்து நீங்கள் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாகக் கூறி மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடத்தியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?

குட்கா ஊழலில் தனது அமைச்சர் மீதும், காவல்துறை தலைவர் மீதும் நேரடியாக குற்றம்சாட்டப்படும் அளவில் ஆட்சி நடத்தியவர்தான் பழனிசாமி. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கமும் அவரது ஆட்சியில்தான் அதிகமாகின. ஜெயலலிதா ஆட்சியிலேயே கஞ்சா-ஹெராயின் வழக்குகள் போடப்பட்டதையும், அவை எப்படிப்பட்டவை என்பதையும் நாடறியும். அதனால், எடப்பாடி பழனிசாமியின் கட்சியினர் நடத்திய மனிதச்சங்கிலி போராட்டம் என்பது தேர்தல் நேர ஸ்டண்ட்.

பாஜக ஆட்சி செய்யும் குஜராத்தான் போதை மருந்துகளின் தலைநகரமாக உள்ளது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அண்மையில், பழனிசாமியும் அதே குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். ஆக, இந்த இரண்டு கட்சிகளும்தான் போதைப் பொருள்களுக்கு வித்திட்ட கட்சிகள். ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திமுக மீதுஅவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.

அண்மைக்காலமாக அடிக்கடி பிரதமர் மோடி தமிழகத்தின் பக்கம் தலைகாட்டுகிறார். கடந்த பத்தாண்டுகளில் அவர் இத்தனை குறுகிய இடைவெளிகளில் தமிழகத்துக்கு வந்ததே இல்லை. 2014, 2019 தேர்தல் காலத்தில் கூட இதே நிலைதான். தற்போது அவர் அடிக்கடி வரக் காரணம் இங்கு பாஜகவுக்கு வாய்ப்புள்ளது என நினைப்பதாலா அல்லது வடக்கில் அவர்கள் வலிமையாக உள்ள மாநிலங்களில் இம்முறை வெற்றி சந்தேகம் என நினைப்பதாலா?

இந்தியா முழுவதும் மோடி தலைமையிலான அரசின் பத்தாண்டுகால ஆட்சியின் அவலங்களும் அதனால் அதிருப்திகளும் வெளிப்பட்டு வருகின்றன. அது தேர்தல் களத்தில் நிச்சயம் எதிரொலிக்கும். தமிழகமும் தென்மாநிலங்களும் அதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே எதிரொலித்தன. தமிழகத்துக்கு என்னென்ன நன்மைகள் செய்தார் என்று மக்களிடம் உண்மையைச் சொல்ல முடியுமா? அவர் வருகிற ஒவ்வொரு முறையும் அவரே தனது ஆட்சியின் அவலங்களை நினைவுபடுத்திவிட்டுச் செல்வார்.

2019-இல் பாஜக வெற்றி பெற்ற இந்தி பேசும் மாநிலங்களில் இண்டியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? நிதிஷ் குமார், ஜெயந்த் சவுதரி ஆகியோர் வேறு இண்டியா கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார்களே?

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இதேபோல ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று ஆளும் பாஜக தன் பிரசாரத்தை முன்னெடுத்தது. கருத்துக் கணிப்புகளும் அதனையொட்டியே இருந்தன. குறிப்பாக, வட மாநிலங்களில் பாஜக ஆதரவு அலை என்று தெரிவித்தன. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என விமர்சிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கே சாதகமாக அமைந்தன. அடுத்த பத்தாண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்றது. 2004 போலத்தான் 2024 தேர்தல் முடிவுகளும் அமையும். வரலாறு திரும்பும்.

கூட்டணிக் கட்சிகளுடன் தமிழகத்தில் வெற்றிகரமாகத் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டீர்கள். 2019-ஐ விட இம்முறை குறைந்த தொகுதிகளில்தான் திமுக போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியினரை அனுசரித்துப் போக வேண்டுமென திமுக சமரசம் செய்துகொண்டதா?

இது தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கைக் கூட்டணி என்பதை 2019, 2021 தேர்தல்களில் நிரூபித்தோம். அதே கூட்டணி இப்போதும் தொடர்கிறது. தோழமைக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தொகுப்பங்கீடும் எந்தச் சின்னத்தில் போட்டியிவது என்பதும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஆரோக்கியமான கூட்டணியின் தொடர் செயல்பாடு. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் முழுமையான வெற்றி என்பதுதான் எங்கள் இலக்கு.

தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கையளிக்கிறது. ஆனால் இதில் தேர்தல் ஆணையம் மற்றும் எஸ்.பி.ஐ தெரிவித்த பதில் அந்த அமைப்புகளின் சுதந்திரத்தன்மை மற்றும் நேர்மையை சந்தேகத்துக்குள்ளாக்கியுள்ளதே?

இந்திய மக்களின் கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றம் உள்ளது. அதன் உத்தரவுகளையே புறக்கணிக்க நினைப்பதும், காலம் தாழ்த்த நினைப்பதும் அரசமைப்புக்கு எதிரான செயல். ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப்பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவேன் என்று சொன்ன மோடி தலைமையிலான பாஜக அரசு, அதில் ஒரு நயா பைசாவைக்கூட மீட்காமல், ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்லாயிரம் கோடிகளைப் பல நிறுவனங்களிடமிருந்து நிதியாகப் பெற்று, நீதிமன்றத்தையே ஏமாற்ற நினைத்தது அம்பலமாகியுள்ளது.

திமுகவும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது எனக் கூறி பாஜக விமர்சனத்தில் இருந்து நழுவுகிறதே?

திமுக என்பது தனது முதல் தேர்தல் களத்திலிருந்தே தேர்தல் நிதி திரட்டுகிற இயக்கம்தான். 1967 தேர்தலில் 10 லட்சம் என்கிற தேர்தல் நிதி இலக்கு நிர்ணயித்தார் பேரறிஞர் அண்ணா. 11 லட்சமாகத் நிதி திரட்டித் தந்தார் கருணாநிதி. நாங்கள் நிதி திரட்டுவது என்பதும் அது குறித்த கணக்குகளை முறையாகத் தணிக்கை செய்வதும் வழக்கம்தான். இப்போதும் அதே வெளிப்படைத்தன்மையுடன்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியிருக்கிறோம்.

ஆனால், திமுக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளைக் குறையாக – குற்றமாகச் சொல்லிக்கொண்டிருந்த பாஜகவின் யோக்கியத்தன்மை என்ன என்பதும், அது யார்-யாரிடம் எதற்காக-எத்தகைய நெருக்கடி கொடுத்து தேர்தல் நிதியைப் பெற்றுள்ளது என்பதும் கவனத்திற்குரியது. கையும் களவுமாக சிக்கியுள்ளது பாஜக.

5 ஆண்டுகள் கழித்து சிஏஏ நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை பாஜக அரசு அறிவித்துள்ளது. இது திசைதிருப்பும் உத்தி என்கிறார்கள் சிலர். வாக்காளர்களை மதரீதியாகப் பிரிவினை செய்யும் செயல் என்கிறார்கள் சிலர்? சி.ஏ.ஏ பாஜகவின் இரகசிய ஆயுதமா?

மதரீதியாக – மொழிரீதியாக – சாதிரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலைத்தான் பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கம்தான் சி.ஏ.ஏ. தற்போது சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையாக மட்டுமே இது தெரிந்தாலும், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் வெவ்வேறு மொழி பேசும் மக்களை நோக்கியும் புதிய சட்டங்களை பாஜககொண்டு வரும். அதற்கு சி.ஏ.ஏ. ஒரு முன்னோட்டம்.

கேரளம், மேற்கு வங்க முதலமைச்சர்களைத் தொடர்ந்து நீங்களும் சிஏஏ தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாது எனக் கூறியிருக்கிறீர்கள்? அது சாத்தியமா?

மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம்தான் உள்ளது. இந்தி மொழி தொடர்பான மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராகத்தான் பேரறிஞர் அண்ணா இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்கிற மத்திய அரசின் நடைமுறையை மாநில அரசு ஏற்கவில்லை. அதுபோலத்தான் சி.ஏ.ஏ.விலும் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இதற்குரிய அரசியல்சட்ட உரிமைக்கான வழியையும் நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டுவோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.