மக்களவைத் தேர்தல்: `7 கட்டங்களாக நடத்தத் திட்டமிட்டிருப்பது ஏன்?' – கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சிகள்

இந்த ஆண்டு தொடங்கியது முதலே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். தேர்தல் நடத்தை விதிகளும் நேற்றே நடைமுறைக்கு வந்துவிட்டது. கிட்டத்தட்ட 40 நாள்களுக்கும் மேலாக நடக்கும் இந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 96.8 கோடி பேர் வாக்களிக்கவிருக்கின்றனர்.

மல்லிகார்ஜுன கார்கே

ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2024 தேர்தல் இந்தியாவுக்கான நியாயத்தின் (நீதியின்) கதவைத் திறக்கும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற, வரும் தேர்தல்கள் நமக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். இந்திய மக்களாகிய நாம் வெறுப்பு, கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வுக்கு எதிராக ஒன்றாகப் போராடுவோம்.

இந்தத் தேர்தலில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், மோடி ஏழு கட்டங்களாகத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் எல்லா இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறார். இந்த நாட்டில், நானும் கிட்டத்தட்ட 12 தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறேன். ஆனால், நான்கு கட்டங்களாகக்கூட தேர்தல் நடந்ததில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், சனிக்கிழமை முதல் நாட்டின் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் நிறுத்தப்படும்.

திரிணாமுல் காங்கிரஸ்

ஏறக்குறைய 70 – 80 நாள்கள் நாட்டின் நிர்வாகம் நிறுத்தப்படுவதால், நாடு எப்படி முன்னேறும் என்று கற்பனை செய்து பாருங்கள்?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “இந்த நாடாளுமன்றத் தேர்தல், எதிர்க்கட்சியினரை, அரசை விமர்சிப்பவர்களை சிறையில் அடைத்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தல், எதிர்க்கட்சிகள், அரசியல்வாதிகள் மீது அரசு அமைப்புகளின் சோதனை, முக்கிய தேசிய எதிர்க்கட்சியின் நிதி முடக்கம், தேர்தல் பத்திரங்கள் மோசடிகளின் கீழ் நடக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “தேர்தல் முடிவுகளுக்காக ஜூன் 4-ம் தேதி வரை காத்திருப்பது, பா.ஜ.க தேர்தல் முடிவுகளுக்குத் தயாராவதற்குத் தேவையான நேரம்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேற்கு வங்க நிதி அமைச்சர் சந்திரமா பட்டாச்சார்யா, “மேற்கு வங்கத்தில் ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினோம். அது கண்டுகொள்ளப்படவில்லை. இது கூட்டாட்சி அமைப்பைப் புறக்கணிக்கும் செயலாகும்.

பிரதமர் மோடி

நாடு முழுவதும் ஏழு கட்ட வாக்குப்பதிவுகள் பெரும் பணப்பை வைத்திருப்பவருக்குத்தான் பயனளிக்கும். 2021 சட்டமன்றத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதற்கு கொரோனா காரணமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது, ஏழு கட்டங்களாகத் தேர்தலை நடத்துவதற்கான காரணம் என்ன? தேர்தல் ஆணையம் இன்னும் சரியான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாரபட்சமற்ற முறையில் செயல்படும் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.