மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த அடி! 2 ஸ்டார் பவுலர்கள் காயம்

மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், ஆறாவது முறையாகவும் ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. ஐபிஎல் ஏலத்திலேயே அந்த அணி ஸ்டார் பிளேயர்களை குறி வைத்து ஏலம் எடுத்தபோதே இதனை பார்க்க முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான பவுலிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறதோ, அதேபோன்றதொரு யூனிட்டை மும்பை இந்தியன்ஸ் அணியும் வைத்திருக்கிறது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏலத்தில் போட்டி போட்டுக் கொண்டு எடுக்கப்பட்ட இரண்டு ஸ்டார் பவுலர்கள் இப்போது காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி வீரரான தில்ஷன் மதுஷங்கா வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்தார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் தொடை பகுதியில் காயமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டு இப்போது சிகிச்சையில் இருக்கிறார். தில்ஷன் மதுஷங்காவுக்கு காயம் குணமாகி மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப குறைதபட்சம் இரண்டு வாரங்களாவது ஆகும். அப்படி பார்க்கும்போது, இப்போது வரை அறிவிக்கப்பட்டிருக்கும் முதல்கட்ட ஐபிஎல் 2024 தொடரில் அவர் முழுவதுமாக பங்கேற்க முடியாது.

அதேபோல் மற்றொரு பந்துவீச்சாளரான ஜெரால்டு கோட்ஸியும் காயமடைந்திருக்கிறார். அவர் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்திருந்தாலும் காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். கோட்ஸிக்கும் ஸ்கேனில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் இரண்டு வாரங்கள் வரை அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இப்போதைக்கு ஜஸ்பிரித் பும்ராவுடன் ஜேசன் பெஹண்ட்ராப், நுவான் துஷாரா ஆகியோர் வேகப்பந்துவீச்சு கூட்டணியாக உள்ளனர்.

அவர்களில் யாரேனும் ஒருவருக்கு தொடக்க போட்டிகளில் காயமடைந்தால், மாற்று வேகப்பந்துவீச்சாளர்கள் கூட இல்லாத நிலையில் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, டெவால்டு பிரீவிஸ், டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருக்கின்றனர். சுழற்பந்துவீச்சுக்கு குமார் கார்த்திகேயா, பியூஸ் சாவ்லா இருக்கின்றனர். இப்போதைக்கு வேகப்பந்துவீச்சு மட்டுமே டேஞ்சரில் இருக்கிறது. இளம் வீரர்களான அர்ஜூன் டெண்டுல்கர், ஆகாஷ் மத்வால் இருந்தாலும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்ற அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி கொஞ்சம் பின்னடைவில் இருக்கிறது.  

ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 23 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.