‘மோடி வெற்றி பெற வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே காரணம்’ – ராகுல் பேச்சு @ மும்பை நிகழ்வு

மும்பை: பிரதமர் மோடியின் வெற்றிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே காரணம் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதனை மும்பையில் நடைபெற்ற ஒற்றுமை நீதி நடைபயண நிறைவு விழாவில் அவர் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்த பயணம் மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு இண்டியா கூட்டணியன் அங்கம் வகிக்கும் பல்வேறு கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது..

“பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணமே வாக்குப்பதிவு இயந்திரம்தான். எங்களிடம் அந்த இயந்திரங்களை காண்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் ஏன் அதனை செய்யவில்லை? ஏனென்றால், பிரதமர் மோடியின் ஆன்மா அதில்தான் உள்ளது.


அசல் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றும் பணியை பிரதமர் மோடி சிறப்பாக செய்வார். சீனா அல்லது பாகிஸ்தான் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். ஆனால், அவரோ விளக்கு ஏற்றுங்கள் அல்லது மொபைல் போனை ஆன் செய்யுங்கள் என சொல்வார். நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து என்னை பேச வேண்டாம் என மறைந்த அருண் ஜெட்லி கேட்டுக் கொண்டார். மீறினால் சிறை செல்ல வேண்டி இருக்கும் என தெரிவித்தார்.

ஊழலில் ஏகபோக ஆதிக்கத்தை கொண்டுள்ள ஒற்றை மனிதராக பிரதமர் மோடி உள்ளார். தேர்தல் பத்திர விவகாரம், கமிஷன் கொடுப்பது, பணியாதவர்கள் மிரட்டுவது.

நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பாஜகவை எதிர்த்து போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம். இந்த சக்தி, வாக்குப்பதிவு இயந்திரம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வசம் உள்ளது. இந்த சக்திக்கு அஞ்சியே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் எதிரணியில் ஐக்கியமாகி உள்ளனர்” என பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதல்வர்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவார், பரூக் அப்துல்லா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.