`சிப்காட், குண்டாஸ்… அதிருப்தி' – திருவண்ணாமலையில் பிரச்னைகளைக் கடக்குமா திமுக?

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீடிக்கும் சில முக்கிய பிரச்னைகளுக்கு ஆளும் தரப்புதான் காரணம் என்ற விமர்சனங்களைப் புறந்தள்ளி விட முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இந்த விவகாரங்கள் தி.மு.க வேட்பாளர்களுக்கே சிக்கல்களை உருவாக்கும் என்கின்றனர் பொது பார்வையாளர்கள். அப்படி, என்னென்ன பிரச்னைகள் என்று விசாரித்தோம்.

திருவண்ணாமலை நகரிலிருந்து 10 கி.மீ தொலைவிலிருக்கின்ற பாலியப்பட்டு, ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அஸ்வநாகசுரணை ஆகிய ஊராட்சிகளிலுள்ள பல குக்கிராமங்களையும், பசுமைப் படர்ந்த ஆயிரம் ஏக்கர் வயல்வெளிகளையும் கையகப்படுத்தி ‘சிப்காட்’ தொழிற்பேட்டை கொண்டு வரும் முயற்சியில், ஆட்சிக்கு வந்த வேகத்திலேயே தீவிரம் காட்டியது தி.மு.க அரசாங்கம். 1,200 ஏக்கர் விளை நிலங்களை அளவீடு செய்த அதிகாரிகள் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தனர். நிலக்கடலை, காய்கறி, மலர் வகைகள் என்று நல்ல விளைச்சல் தரும் இந்த மண்ணை அழிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கலப்பையுடன் கஞ்சித்தொட்டி திறந்து, தொடர்ந்து 170 நாள்கள் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமல்லாமல், நிலம் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்ட பகுதிகளிலுள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலையில் இரும்புத்தாது கொட்டிக் கிடக்கிறது. இந்த இரண்டு மலைகளிலிருந்தும் இரும்புத்தாது வெட்டியெடுக்க 2008-ம் ஆண்டு ‘ஜிண்டால்’ குழுமம் உரிமம் கேட்டிருந்தது.

அன்று பாலியப்பட்டு விவசாயிகள்

விவசாயிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதையடுத்து அது அப்போது கைவிடப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்ததும் தி.மு.க-தான். இப்போதும்கூட சிப்காட் அமைக்கும் நோக்கத்தைவிட இரண்டு மலைகள்மீதான பார்வைதான் ஆட்சியாளர்களிடம் படர்ந்திருக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்கள் திருவண்ணாமலை விவசாயிகள். அப்போது, பேட்டிக் கொடுத்த அமைச்சர் எ.வ.வேலு, ‘‘சாலை போடணும்னாலும், தொழில்துறை வளர்ச்சிக்கும் நிலத்தைக் கையகப்படுத்திதான் எதுவுமே செய்ய முடியும். இதையெல்லாம் ஆகாயத்திலா பண்ண முடியும். யார்த் தடுத்தாலும் பாலியப்பட்டு கிராமத்தை உள்ளடக்கிய சிப்காட் திட்டத்தை கொண்டுவந்தே தீருவோம்’’ என்றார். விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்ததால், பாலியப்பட்டு சிப்காட் அமைக்கும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது தி.மு.க அரசு.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏற்கெனவே இரண்டு தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், செய்யாறில் மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க, மேல்மா உட்பட அதன் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள விளை நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியிலும் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட தொழிற்பேட்டைக்காக மட்டுமே 645 ஹெக்டேர் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 13 நிறுவனங்கள் செயல்படுகின்றன. 2,300 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, இரண்டாவது தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டது. அதில் 55 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நிலத்தைப் பறிகொடுத்த விவசாயிகள் பலரும் கூலித்தொழிலாளர்களாகப் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

மேல்மா விவசாயிகள்

மூன்றாவது தொழில் வளாகம் அமைப்பதற்காக மேல்மா, நர்மபள்ளம் உட்பட அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் பரப்பளவுகொண்ட நிலங்களைக் கையகப்படுத்த, அரசு திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், வெறும் ஏழு ஏக்கர் மட்டுமே ‘நஞ்சை’ நிலம் என்று முதலமைச்சர் ஸ்டாலினே சுட்டிக்காட்டினார். ஆனால், களநிலவரம் மாறாக இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் செழிப்பான விவசாய நிலங்களாகக் காட்சியளிக்கின்றன. நெல்மணிகள், அறுவடைக்காக அழைப்புவிடுத்துக் கொண்டிருந்தன. பல ஏக்கரில், கரும்பு சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்துடன் விவசாயிகள்மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

பெண்கள் உட்பட 54 விவசாயிகள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அதில் ஏழு பேர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாகவும் பேட்டிக் கொடுத்த அமைச்சர் எ.வ.வேலு, ‘‘தொழிற்சாலைகளை எங்கு கட்டுவது… கடலிலா, வானத்திலா..?’’ என்றார். இந்த விவகாரத்தில் அரசுக்கெதிராகக் கடும் கண்டனங்களும் எழுந்ததால், ஏழு பேர் மீதான குண்டர் சட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலினே ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனாலும், மேல்மா சிப்காட்டுக்காக நிலங்களை அழிக்க விடமாட்டோம் என வலியுறுத்திக்கொண்டிருக்கும் விவசாயிகள், போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

அக்னி கலச விவகாரம்

இந்த விவகாரங்களுக்கிடையே கலசபாக்கம் அருகேயுள்ள நாயுடுமங்கலம் கிராமத்தில் ‘அக்னி கலசம்’ அகற்றப்பட்ட விவகாரமும் சேர்ந்திருக்கிறது. கடந்த 1989-ம் ஆண்டு நிறுவப்பட்ட வன்னியர் சங்கத்தின் அக்னி கலசத்தை 2022 ஜனவரி மாதம் சாலை விரிவாக்கம் மற்றும் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியை மேற்கோள்காட்டி அகற்றியிருக்கின்றனர். அப்போதே பா.ம.க, வன்னியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. பணிகள் நிறைவு பெற்றப் பிறகும் அக்னி கலசத்தை அங்கேயே நிறுவுவதற்கான அனுமதி கிடைக்காததால், கடந்த 13-ம் தேதி பெருந்திரளாக வன்னியர் சங்கத்தினர் திரண்டுவந்து அக்னி கலசத்தை நிறுவினர்.

அதேபோல, கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறை, தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் ஏற்பட்ட கோயில் தகராறு போன்ற விவகாரங்களும் தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டவைதான். அந்த விவகாரங்களின் சூடு இன்னமும் தணியாமல் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வெகுகாலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஒரே மாவட்டத்துக்குள் நிலவக்கூடிய இத்தனை பிரச்னைகளையும் தி.மு.க தேர்தல் களத்தில் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.