`ஆசானுக்கு பத்ம பூஷண் கிடைக்க வேண்டாமா?’- சுரேஷ் கோபியை ஆதரிக்க கதகளி ஆசானை நிர்பந்தித்தாரா டாக்டர்?

கேரள மாநிலத்தின் பாரம்பர்ய கதகளி கலைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை ஆசான்கள் என அழைக்கின்றனர். கதகளியில் மிகவும் பிரசித்தி பெற்றவர் கலா மண்டலம் கோபி ஆசான். இந்த நிலையில், கலா மண்டலம் கோபி ஆசானுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஆதரவாக செயல்பட அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கலாமண்டலம் கோபி ஆசானின் மகன் ரகுகுரு கிருபா ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு மூலம் தெரியவந்தது.  அந்த ஃபேஸ்புக் பதிவில் ரகுகுரு கிருபா கூறியுள்ளதாவது.

“சுரேஷ் கோபியை ஆதரிக்க வேண்டும் எனக்கூறி பல வி.ஐ.பிகள் என் அப்பா கோபி ஆசானை வளைக்க முயற்சி செய்கிறார்கள். அந்த கோபி அல்ல இந்த கோபி என்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் நாங்கள் கொண்டிருக்கும் அன்பையும், மரியாதையையும் நீங்கள் இல்லாமல் ஆக்காதீர்கள். பலரும் அன்பாக உதவுவது போன்று நடிப்பது இதற்காகத்தான் என்று இன்று எனக்கு புரிந்தது. எல்லோருக்கும் அரசியல் உண்டு. அது தற்காலிக லாபத்திற்காக அல்ல. அது நெஞ்சில் ஆழமாக பதிந்ததாகும். உங்களுக்கு நாங்கள் தரும் மரியாதையை ஆதாயம் ஈட்டுவதற்காக பயன்படுத்தாதீர்கள்.

கலாமண்டலம் கோபி ஆசான்

பிரபலமான ஒரு டாக்டர் என் தந்தையை அழைத்து நாளை அங்கு வரும் சுரேஷ் கோபியை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்பாவால் மறுத்து கூற முடியாத அளவுக்கு பிரபல டாக்டர் அவர். எனவே, என் தந்தை என்னிடம் (மகனிடம்) கூறுவதாக சொல்லிவிட்டார். தந்தை என்னிடம் சொன்னதால், நான் அந்த டாக்டரை அழைத்து பேசினேன். அவர், உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது நான் உதவி செய்தேனே என்றார். அதற்கான ஆதாயத்துக்காக நீங்கள் வரவேண்டாம் என நான் சொன்னேன். அதை உங்கள் தந்தை சொல்லட்டும் என டாக்டர் சொன்னார். `நீங்கள் வர வேண்டாம்’ என என் தந்தையும் சொன்னார். அதற்கு அந்த டாக்டர், ‘ஆசானுக்கு பத்ம பூஷண் கிடைக்க வேண்டாமா’ எனக்கேட்டார். அப்படி எனக்கு பத்ம பூஷண் கிடைக்க வேண்டாம் என அப்பா சொல்லிவிட்டார். இனி பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்காக யாரும் எங்கள் வீட்டுக்கு வந்து உதவ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதம் ஆனதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் இருந்து அந்த பதிவை நீக்கிவிட்டார் ரகுகுரு கிருபா. மேலும், இதை அரசியல் விவாதம் ஆக்க வேண்டாம் எனவும் கலா மண்டலம் கோபி ஆசானின் மகன் ஃபேஸ்புக்கில் புதிய பதிவை போட்டிருந்தார். அதேசமயம் கலாமண்டலம் கோபி ஆசானுக்கு திருச்சூர் தொகுதியில் ஓட்டு இல்லை என்றும் ஆலத்தூர் தொகுதியில் தான் வாக்கு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சுரேஷ்கோபி

ஆலத்தூர் தொகுதி சி.பி.எம் வேட்பாளரும், சிட்டிங் அமைச்சருமான ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என ஆதரித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கலாமண்டலம் கோபி ஆசான். அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலா மண்டலத்தின் வளர்ச்சிக்காக் பணியாற்றியதால் அவரை ஆதரிப்பதாக கோபி ஆசான் தெரிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ்கோபி கூறுகையில், “கலாமண்டலம் கோபி ஆசானை பார்க்க வேண்டும் என நான் யாரையும் தொடர்புகொள்ளவில்லை. பா.ஜ.க மாவட்ட தலைவர் கூறும் நபர்களைத்தான் நான் சந்தித்துவருகிறேன். மற்றபடி ஆட்களை சந்திப்பதற்காக நான் யாரையும் நான் நியமிக்கவில்லை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.