ஆர்சிபி அணியின் பெயர் அதிரடி மாற்றம்! புது பெயர் என்ன தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப், டெல்லி அணிகளைப் போல் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangaluru). ஆனால் இந்த சோகமான வரலாறுக்கு ஆர்சிபி பெண்கள் அணி இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவடைந்த பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறது அந்த அணி. இந்த அதிர்ஷ்டம் விரைவில் தொடங்க இருக்கும் ஆண்களுக்கான ஐபிஎல் போட்டியிலும் நடக்க வேண்டும் என ஆர்சிபி அணி ஆவலுடன் சீசனை தொடங்க இருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாக ஐபிஎல் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அதாவது செவ்வாய்க்கிழமை ஆர்சிபி அணி பெயரில் மாற்றத்தை செய்திருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பைகளை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பெயர்களை மாற்றியதைப் போல ஆர்சிபி அணியும் அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து பெயரை மாற்றியிருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதற்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் எனவும், பஞ்சாப் கிங்ஸ் அணி இதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்றும் அழைக்கப்பட்டன. அந்த வரிசையில் இப்போது ஆர்சிபி அணி இணைந்திருக்கிறது என்றாலும் ஆர்சிபி அணியின் பெயரில் பெரிய மாற்றம் எல்லாம் ஏதும் செய்யவில்லை. ஆர்சிபி என்ற சுருக்கத்திலேயே ரசிகர்கள் அந்த அணியை அழைக்கலாம். 

ஆங்கிலத்தில் பெங்களூரு என்ற வார்த்தையில் மட்டும் ஆர்சிபி அணி மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதுவரை Royal Challenger Bangalore என்ற பெயரை Royal Challengers Bangaluru என மாற்றப்பட்டிருக்கிறது. கர்நாடக அரசின் வேண்டுகோளின் பேரில், நவம்பர் 1, 2014 அன்று மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக Bangalore என்பதில் இருந்து Bangaluru என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணியும் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தின் முன் நடைபெற்ற RCB Unbox நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. அதுவரைக்கும் இந்த பெயர் மாற்றம் குறித்த எந்த தகவலும் கசியவில்லை. அதேபோல் இந்த நிகழ்வில் RCB அணி புதிய ஜெர்சியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

 (@RCBTweets) March 19, 2024

ஆர்சிபி அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா?

பெண்களுகான ஆர்சிபி அணி இந்த ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் நிலையில், ஆண்களுக்கான ஆர்சிபி அணியும் இந்த ஆண்டு பட்டத்தை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இதற்கு முன்பாக 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு ஆர்சிபி அணி சென்றிருக்கிறது. ஆனால் இந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி, சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஆர்சிபி அணியின் தொடக்க போட்டியில் இருந்து இப்போது வரை அந்த அணிக்காக விளையாடுவது விராட் கோலி மட்டுமே. ஆர்சிபி அணி, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.