புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்த இரண்டு விவசாயிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க மற்றும் ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட்டதன் மூலம் இரண்டு மாதங்களில் 4 மில்லியன் ரூபா வருமானம் பெற்ற கல்குளம பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விவசாயி புத்திக சுதர்ஷன. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.

இந்த இளம் விவசாயிகள் தமது அறுவடையின் ஒரு பகுதியுடன் ஜனாதிபதியைச் சந்தித்ததுடன், வளமான விளைச்சலைப் பெறுவதற்கு வழிகாட்டி அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்வு பயிர்ச்செய்கை முறையைப் பயன்படுத்தி பந்துல முனசிங்க அரை ஏக்கரில் மிளகாய் பயிரிட்டுள்ளார்.

பாரம்பரிய முறையில் அரை ஏக்கரில் பயிரிடக்கூடிய மிளகாய் செடிகள் சுமார் 6000 செடிகள், ஆனால் இந்த அதிக அடர்வு பயிர்ச்செய்கை முறையில் பயிரிடக்கூடிய மிளகாய் செடிகளின் எண்ணிக்கை 13,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய முறையில் பல மடங்கு விளைச்சலை அதிகரிக்க முடியும் என்றார்.

அநுராதபுரம் திரப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்குளம் பிரதேசத்தில் வசிக்கும் புத்திக சுதர்சன 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

நவீன தொழில்நுட்பத்தில் ஒரு ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட தர்பூசணி சாகுபடியில் அதிக விளைச்சல் பெற முடிந்ததாகவும், ஒரு கிலோ தர்பூசணியை சுமார் நூற்றி எண்பது ரூபாய்க்கு விற்பனை செய்ததன் மூலம் இந்த அதிக வருமானத்தைப் பெற முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் விவசாயத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இவ்வாறான இளம் விவசாயிகள் முன்னுதாரணமாக திகழ்வதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாயிகளின் செயலைப் பாராட்டி அவர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவும் கலந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.