`மீண்டும் சிதம்பரத்தில் போட்டியிடுகிறேன்; ஓ.பி.சி மக்களை பாமக கைவிட்டாலும்…' – திருமாவளவன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு முதல் பிரதமர் மோடியின் பிரசாரம் வரை தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் இந்தியா கூட்டணி போட்டியிடுகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், வி.சி.க-வுக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் தி.மு.க கூட்டணியில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

மோடி

அதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் 2-வது முறையாக விழுப்புரம் தொகுதியிலும், 6-வது முறையாக நான் சிதம்பரம் தொகுதியிலும் போட்டியிடுகிறோம். தி.மு.க தலைமையிலான கூட்டணி பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். ராகுல் காந்தி மேற்கொண்ட இரண்டு யாத்திரைகளும் இந்த நாட்டை பாசிச சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான பயணம்.

10 ஆண்டுக்காலம் ஆட்சியிலிருந்த பா.ஜ.க, நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேச மட்டுமே செய்ததே தவிர…. கண்கூடாக எந்த வளர்ச்சியும் காணமுடியவில்லை. தனியார் நிறுவனங்கள், குறிப்பாக அதானி, அம்பானி போன்றவர்கள் உலகப்பணக்காரர்கள் வரிசையில் முதல் பத்து இடங்களுக்கு முன்னேறியிருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இந்திய ரூபாயின் சந்தை மதிப்பு அதலபாதாளத்தில் கிடக்கிறது. வேலை வாய்ப்பின்மை, விலைவாசி, பெட்ரோல் , டீசல், சிலிண்டர் விலை உயர்வு, விவசாயிகள், தொழிலாளர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டது, ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சிறு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது என பா.ஜ.க அரசுக்கு தொடர் தோல்விகள்தான்.

ராகுல் காந்தி

பா.ஜ.க ஆட்சியில் சாதி, மதவாதம் வளர்க்கப்படுகிறது என்பதை இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகமே உணர்ந்திருக்கிறது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதெல்லாம் இப்போது மக்கள் எதிர்பார்க்கவில்லை. மக்களின் தற்போதைய ஒரே எண்ணம் பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். இந்த தேர்தல் பா.ஜ.க தலைமையிலான பாசிச சங்பரிவார் கூட்டத்துக்கும், இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியலைப்பு சட்டத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் மக்களுக்குமிடையேயான யுத்தம்.

அதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் அமையும். ஆனால், EVM மூலம் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க முயலும் என்பதையும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதை முறியடிக்க ஒரே வழி, 100 சதவிகிதம் வாக்களிப்பது மட்டும்தான். பா.ஜ.க தமிழ்நாட்டிலும் காலூன்றி வட இந்தியாவில் இருப்பது போல, மத ரீதியாக பிளவுபடுத்த முயல்கிறது. பெரியார், வள்ளுவர், திருவள்ளுவர் சிலைகள் அவமானப்படுத்தப்படுகிறது. அடையாளங்களை அபகரிக்க முயல்கிறார்கள். எனவே, இந்த தேர்தல் மாபெரும் கருத்தியல் யுத்தம். தமிழ்நாட்டையும், இந்தியாவையும் பாசிச சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு.

திருமாவளவன்

அதற்கேற்ப இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பா.ம.க பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருப்பது அவர்களின் விருப்பம். அதில் கருத்துச் சொல்ல எதுவும் இல்லை. ஆனால், இரண்டு கட்சிகளும், மதம், சாதிய வாத அரசியலில் திளைத்திருக்கிறார்கள். பா.ம.க-வின் இந்த முடிவு ஒ.பி.சி, எம்.பி.சி மக்களுக்கு எதிரான நடவடிக்கை. மருத்துவக் கோட்டாவில் ஓ.பி.சி பிரிவுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை அறிந்து, வி.சி.க தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் முயற்சியால், உச்ச நீதிமன்றம் வரை சென்று இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தோம். எனவே, ஓ.பி.சி மக்களை பா.ம.க கைவிட்டாலும், வி.சி.க பாதுகாப்பு அரணாக இருக்கும்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி வைத்தார்கள். இந்த தேர்தலில் அவர்கள் சிதைந்திருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க, பா.ம.க மட்டும்தான் வாக்கு வைத்திருப்பவர்கள். பா.ஜ.க-வை பொறுத்தவரை அதனுடன் சேரும் கட்சிகளிடம் ஊடுருவி அந்தக் கட்சிகளை வலுவிழக்கச் செய்துவிடும். வட இந்திய மாநிலங்களில் அப்படிதான் பல்வேறு கட்சிகளை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது.

மோடி – ராமதாஸ் – அன்புமணி

பா.ம.க-வுடனான கூட்டணியால் வாக்கு சதவிகிதத்தை பா.ஜ.க வலுப்படுத்திக்கொள்ளுமே தவிர வேறு எந்த முன்னேற்றமும் இருக்காது. தமிழ்நாட்டில் கடந்த காலங்களிலும் பல்வேறு முறை கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் நுழைய முயன்றார்கள். அப்போதும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போதும் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பவர்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.