ஐபிஎல் 2024 தொடக்க விழா: பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார்? எப்போது, எங்கே பார்ப்பது?

IPL 2024 Opening Ceremony: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது நாளை மறுதினம் தொடங்க உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலம் மூலம் ஒட்டுமொத்தமாக 10 அணிகளும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளன. மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய ஐந்து அணிகளில் கேப்டன்களே மாறி உள்ளனர். 

கடந்த வருடம் கடைசி நான்கு இடங்களை பிடித்த முறையே கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, ஹைதராபாத் ஆகிய அணிகள் மினி ஏலத்தின் மூலம் முழுமையாக உருமாற்றம் பெற்று, பேப்பரிலேயே பலம் வாய்ந்த அணியாக தோற்றம் அளிக்கின்றது. இருப்பினும், வழக்கம்போல் சிஎஸ்கே, மும்பை அணிகளும் தற்போது வெறித்தனமாக இருக்கின்றனர்.

சேப்பாக்கத்தில் லைட் ஷோ

முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டி கோலாகலமான தொடக்க விழா உடன் தொடங்குகிறது. இந்த தொடக்க விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில் பல ஏற்பாடுகளும் மைதானங்களில் செய்யப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் லைட் ஷோவிற்காக சேப்பாக்கத்தின் மேற்கூரைகளில் பல லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், லைட்ஷோ ஒத்திகை நடைபெற்ற வீடியோவும் சமீபத்தில் வைரலாகி வருகிறது. கடந்தாண்டு குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழா போட்டியில் அர்ஜித் சிங், ராஷ்மிகா மந்தனா, தம்மன்னா பாட்டீயா ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும், தொடக்க விழாவில் விளையாடிய குஜராத் – சென்னை அணியின் கேப்டன்களான ஹர்திக் பாண்டியா, தோனி ஆகியோர் கடந்தாண்டு தொடரை தொடக்கிவைத்தனர். 

பிரபலங்கள் யார் யார்?

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறும் தொடக்க விழா குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளன. பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், பாடகர் சோனு நிகம் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்று இசை நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அக்சய் குமார், டைகர் ஷெராஃப் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வமான தகவல் இன்றிரவு அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்டுகிறது. 

வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழா அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு டாஸ் மற்றும் 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், முதல் போட்டி மட்டும் அரைமணி நேரம் தாமதமாக 7.30 மணிக்கு டாஸ் இரவு 8 மணிக்கு பேட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் ஜியோ சினிமா தளம் மூலமும், தொலைக்காட்சியில் என்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.