தரமான ஊடக தலைமுறையொன்றை உருவாக்க “Kaleidoscope 2024 Screen media for Gen-Z” திட்டம் ஆரம்பம்

ஊடகங்களின் அனுபவத்தையும் நடைமுறை அறிவையும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு “Kaledoscope 2024 Screen media for Gen-Z” என்ற கற்கைநெறியை ஆரம்பித்துள்ளது. இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் இந்த கற்கை நெறி நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள், கல்விமான்கள், ஊடகத்துறையிலுள்ள நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஊடகப் பிரிவுகள் செயற்பாட்டில் உள்ள 31 பாடசாலைகளில் இருந்து 158 மாணவர்கள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு வாரத்திற்கு ஒரு நாள் என்ற அடிப்படையில், 16 வாரங்கள் இந்த கற்கை நெறி முன்னெடுக்கப்படவுள்ளது.

யுனிலீவர் லங்கா நிறுவனம், SLIT கல்வி நிறுவனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியன இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனுசரணை வழங்குகின்றன.

நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கு ஊடகப் பின்னணி தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சுதீர நிலங்க விதான, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர்களான பொறியியல் நிபுணர் ஸ்டான்லி ஹெட்டியாராச்சி மற்றும் நதீரா மடுகல்ல ஆகியோர் விளக்கமளித்தனர்.

மூத்த ஊடகவியலாளர் உதம் சதரசிங்க, மூத்த கலைஞர் சுதத் தேவப்பிரிய, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் ஊடகப் பிரிவின் தலைவர் பந்துல பி. தயாரத்ன ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த கற்கை நெறியின் இரண்டாம் கட்டமாக, திறமையை வெளிக்காட்டும் மாணவர்களுக்கு 05 பிரிவுகளில் 06 நாட்கள் மேலதிக அறிவூட்டல்கள் வழங்கப்படவுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் இந்த பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

இலங்கையிலுள்ள அனைத்து இலத்திரனியல் ஊடக நிறுவனங்களும் இந்த வேலைத்திட்டத்துடன் கைகோர்த்துள்ளதுடன், நிகழ்ச்சியில் பங்குபற்றும் மாணவர்கள், முன்னணி ஊடக நிறுவனங்களுக்குச் சென்று, இரண்டு நாள் நடைமுறை அறிவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் வர்த்தக நாமம் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்பதால், தனியார் துறையில் அதிக அனுபவமுள்ள நிறுவனங்களில் அந்த அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கற்கை நெறி மாணவர்களுக்கு எதிர்கால உலகிற்குப் உகந்த வகையில் புதுமையுடன் கூடிய நடைமுறை அறிவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.