திருமண ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக காரை ஹெலிகாப்டர் போல மாற்றியவருக்கு அபராதம்

லக்னோ: காரை ஹெலிகாப்டர் போல டிசைன் செய்த நபருக்கு உத்தரபிரதேச மாநில போலீஸார் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டம் அம்பேத்கர் நகரிலுள்ள காஜுரி பஜாரைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் பழைய கார்களை விலைக்கு வாங்கி அதை ஸ்டைலாக மாற்றி அமைத்து விற்பனை செய்து வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு காரை வாங்கி, அதை ஹெலிகாப்டர் போல மாற்றி அமைத்துள்ளார். காரின் மேல்பகுதியில் சுழலும் ஃபேன், பின்பகுதியில் ஹெலிகாப்டரில் உள்ள இறக்கைகள் போன்று அவர் மாற்றி அமைத்தார். பின்னர் அந்த காரை பெயிண்ட் செய்வதற்காக பஜார் பகுதியிலுள்ள சாலை வழியாக எடுத்துச் சென்றபோது போலீஸார் அந்தக் காரை பறிமுதல் செய்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உரிய அனுமதி பெறாமல் எந்த ஒரு வாகனத்தையும் அதன் ஸ்டைலில் இருந்து மாற்றக்கூடாது.

எனவே, அந்தக் காருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, ஹெலிகாப்டர் போன்ற பாகங்களையும் காரிலிருந்து நீக்கவும் போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈஸ்வர் தீன் கூறும்போது, “ரூ.2.5 லட்சம் செலவு செய்து இந்தக் காரை ஹெலிகாப்டர் போல மாற்றினேன். இந்தக் காரை திருமண ஊர்வலங்களுக்கு பயன்படுத்தினால் அதிக பணம் கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் தற்போது முதலுக்கே மோசமாகிவிட்டது.

இதேபோன்று ஹெலிகாப்டர் போல மாற்றி அமைக்கப்பட்ட கார்கள், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஓடி வருகின்றன. என்னுடைய காரையும் அப்படித்தான் மாற்றினேன்” என்றார். அம்பேத்கர் நகர் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத் தப்பட்டு இருக்கும் ஹெலிகாப்டர் காரின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.